தமிழீழம்

அரசு தடுத்து வைத்திருக்கும் முன்னாள் போராளிகளின் பட்டியலை வெளியிடுமாறு த.தே.கூ. மீண்டும் வலியுறுத்தல்.

அரசாங்கம் பிடித்து வைத்திருக்கும் அல்லது தடுத்து வைத்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் கொண்ட பட்டியலை வெளியிடும்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தியது.

நீதி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின்போது பேசிய த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களான பாலகுமார், எழிலன் ஆகியோர் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது ஒரு கத்தோலிக்க குருவுடன் சென்று இராணுவத்திடம் சரணடைந்தனர் என கூறினார்.

இவர்களின் சரண் இந்த கத்தோலிக்க குருவின் அனுசரணையுடன் நடந்தது. இவர்களுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. இவர்கள் எங்கே உள்ளனர் என அறிவிக்கும்படி நாம் அரசாங்கத்தை கோருகின்றோம்.

முன்னாள் போராளிகள் 12,000 பேர் இராணுவத்திடம் சரணடைந்ததாக அரசாங்கம் கூறியது. அவர்களது பெற்றோரும் உறுப்பினர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்கள் எங்கே உள்ளனர் என அறிய ஆவலாக உள்ளனர் என சுரேஷ் எம்.பி. கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் பிரிவுடன் நேரடியாக இணைந்து செயற்பட்ட குமரன் பத்மநாதன் (கே.பி), ஆடம்பர வாழ்வு பெற்றுள்ளார் என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

தென்பகுதி சிறைகளில் உள்ள தமிழர்கள் ஆபத்தான நிலைமையில் உள்ளனர். அண்மைக் காலங்களில் இவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களை வடபகுதி சிறைகளுக்கு மாற்ற வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, ‘தடுத்து வைக்கப்பட்டுள்ளோருக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு அளிப்பது அவசியம். தடுத்து வைக்கப்பட்டுள்ள சில பெண்களுக்கு குழந்தைகள் உண்டு. இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டது உண்மை.

புலிகளுக்கு உணவு வழங்கியது மற்றும் வேறு சில சிறு வேலைகளை செய்து கொடுத்த பலரும் தடுப்புக் காவலில் உள்ளனர்’ என ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.