தமிழீழம்

வவுனியா கூளங்குளத்தில் 2200ஆண்டுக்கு முன் தமிழர் வாழ்ந்ததற்கான தொல் பொருட்கள்!

வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளில் தமிழர்களது தொன்மை எடுத்து காட்டும் 2200 ஆண்டுகள் பழைமையான சுடுமண் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

வவுனியா சாஸ்திரி கூளங்குளம் பகுதியில் யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பி.புஸ்பரட்ணம் தலைமையிலான குழவினர் மேற்கொண்ட ஆய்வாய்வின் போதே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்
அங்குள்ள குளம் ஒன்றிலிருந்தே இவர்கள் இதனை கண்டு பிடித்துள்ளனர். குளத்திலும் குளத்தின் தெற்கு புற மேட்டுப்பகுதியிலும் இருந்தே இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இங்கு களி மண்ணிலான ஆண் பெண் சிற்பங்கள் களி மண்ணிலான பறவைகள் மிருகங்கள் மண்பாட்டங்கள் என்பனவே கண்டு பிடிக்கப்பட்டனவாகும். கண்டு பிடிக்கப்பட்டவை இற்றைக்க 2200 ஆண்டுகள் முதல் 800 ஆண்டுகள் வரையிலான பல்வேறு காலப்பகுதிகளை கொண்டவையாகும்.

குறிப்பாக கந்தரோடை ஆணைக்கோட்டை அனுராதபுரம் மா தோட்டம் ஆகிய இடங்களையும் தென்னிந்தியாவின் அழகர்குளம் கொடுமணல் கொறகை ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற தொல் பொருகளை ஒத்தவையே இங்கும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன

இங்கு அதிகமாக பெண் உருவச்சிலைகளே மீட்கப்பட்டுள்ளன. இப்பெண் தெய்வங்கள் செழிப்பை காட்டுகின்றன. இவை வன்னியில் குளங்களை அண்டி செழிப்பான மக்கள் வாழ்ந்ததை காட்டுவதாக பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்தார்
இச்சிலைகள் மண் வெட்டும் போதே வெளி வந்ததாகவும் பின்னர் தோண்டத்தோண்ட எண்ணுக்கடங்காமல் வருவதாகவும் தெரியவருகின்றது.