தமிழீழம்

காணாமல் போனோரை கண்டறியும் குழு உறுப்பினர் 38 பேர் தடுத்து வைப்பு

காணாமல்ப்போன தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருந்து சென்ற காணாமல்ப்போனோரை தேடியறியும் குழுவின் உறுப்பினர்கள் 38 பேரை அவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிடாது சிறிலங்கா பொலிஸார் தடுத்துவைத்துள்ளதாக காணாமல்ப்போனோரை தேடியறியும் குழுவின் இயக்குநர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் தற்போது நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிடாது தடுக்கும் வகையிலேயே இவர்கள் சிறிலங்கா பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். தாதியர் பயிற்சி கல்லூரிக்கு முன்பாக மேற்படி 38 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மகேந்திரன் மேலும் தெரிவித்தார்.

மனித உரிமைகள் தினமான இன்று சனிக்கிழமை காணாமல்ப்போனோரை கண்டுபிடித்துத் தருமாறு கோரி அவர்களின் உறவினர்கள் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.