சிறிலங்கா

விடுவிக்கப்படும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடை.

அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செல்லுமிடத்து விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்களென அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு அரசினால் குடும்பங்களுடன் இணைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலரும், வாரத்திலோ, அல்லது மாதத்திலோ ஒரு நாள் அவ்வப்பகுதி படை முகாம்களிற்கு விசாரணைக்கு அழைக்கப்படுவது தொடர்கின்றது.

அவ்வாறு விசாரணைக்கென செல்லும் வேளையிலேயே, நாட்டைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேறக் கூடாதென்ற நிபந்தனை விதிக்கப்படுவதாக முன்னாள் உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியான இராணுவ நெருக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாகவும், பொருளாதார நிலைமை கருதியும் பல முன்னாள் உறுப்பினர்கள் வேலைவாய்ப்பு கருதி நாட்டைவிட்டு வெளியேற்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, அவர்களை நாட்டை விட்டு வெளியேற பாதுகாப்பு தரப்பு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.