தமிழீழம்

யுத்த நாள்களைப் போன்று நேற்று யாழ்குடாநாட்டில் சோதனை கெடுபிடிகள்

யுத்தம் இடம்பெற்ற காலத்தைப் போன்று நேற்று குடாநாட்டில் பல இடங்களிலும் சோதனைக் கெடுபிடிகள் இருந்தன. குறிப்பாக யாழ். நகரில் சிறிலங்கா பொலிஸாரின் கெடுபிடிகள் அதிகரித்திருந்தன.

மனித உரிமை தினத்தை முன்னிட்டு யாழ். நகரில் நேற்று காணாமற்போனவர்களைத் தேடியறியும் குழுவின் பேரணி ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே வழமைக்கு மாறான இந்தத் திடீர் நடவடிக்கை பரவலாக இருந்தது. குடாநாடு எங்கும் சிறிலங்கா படையினரும் பொலிஸாரும் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கை முழு மூச்சாக இடம் பெற்றதால், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டது.

யாழ். குடாநாட்டின் முக்கிய வீதிகள் எங்கும் சிறிலங்கா இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் போர் இடம் பெற்ற காலகட்டத்தில் செயற்பட்டது போன்று நடந்தனர்.

வடமராட்சியிலிருந்து வல்லையூடாக யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் மற்றும் போக்குவரத்துச் சபை பஸ்களில் பயணம் செய்த பயணிகள் வல்லைச் சோதனைச் சாவடிப்பகுதியில் இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். வாகனங்களில் சென்றவர்களும் மறிக்கப்பட்டு அவர்களின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டன. இது தொடர்பாக வல்லை சோதனைச்சாவடியில் நின்ற சிறிலங்கா படையினர் தெரிவிக்கும் போது “”இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. இது மேலிடத்து உத்தரவு.” எனத் தெரிவித்தனர்.

வல்லையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பயணிகள் மீண்டும் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரிக்கு முன்னாலும் இறக்கப்பட்டு அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அடுத்து இருபாலையிலும் அதே போன்று கெடுபிடி.

வாகனங்களில் பயணித்தவர்களின் வாகன இலக்கங்களும் பதிவு செய்யப்பட்டு சோதனையும் நடந்தது.
இவ்வாறு அடுத்தடுத்து பல இடங்களில் இறக்கப்பட்டு சோதனைகள் தொடர்ந்தன. இதேவேளை, நேற்றைய பேரணிக்கு வந்திருந்தவர்கள் அச்சுறுத்தப்பட்டு, விரட்டப்பட்டனர் என்றும் பெண்கள் தள்ளி வீழ்த்தப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிறிலங்காவில் இருந்து யாழ் வருகை தந்திருந்த பிரதிநிதிகள் 38 பேரை பேரணியில் கலந்து கொள்ள விடாது பொலிஸார் சுமார் 2 மணிநேரம் தடுத்து வைத்திருந்தனர் என்றும், அவர்கள் எடுத்து வந்திருந்த பதாகைகள், பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் சம்பந்தப்பட்டவர்கள் கூறினர்.

இந்த அராஜகங்கள் குறித்து சர்வதேச மனித உரிமை அலுவலகத்திலும் சிறிலங்கா பொலிஸ் தலைமையகத்திலும் தாங்கள் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.