புலம்பெயர்

சகோதரனின் இணையத்தளங்கள் கே.பியின் கீழ்; நேர்மையானவரா சிறீதரன்?

சிவஞானம் சிறீதரன் இலங்கைத் தமிழ் அரசியலிலும் புலம்பெயர் தமிழர் தளத்திலும் பிரபல்யமாகப் பேசப்படுகின்ற நபராக மாறியிருக்கின்றார்.

அவரின் அரசியல் பிரவேசமும் அவர் தமிழ் மக்கள் மத்தியில் செலுத்திவருகின்ற அரசியல் செல்வாக்கிலும் பல பத்தாண்டுகளாக அரசியல் செய்துவருபவர்களை விஞ்சியிருக்கும் அளவிற்கு அவரது செயற்பாடுகள்(?!) அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

 

தமிழரசுக்கட்சியின் செல்லப்பிள்ளை சிறீதரன், தலைவரை எப்படிப் பார்க்கிறார்?!

சிறீதரன் அரசியலுக்கு வந்தாலும் அவரது அடுத்த பாரிய கனவாக தமிழ் மக்களின் தலைமை என்கின்ற பேரவா அவருள் ஆழ வேரூன்றியிருக்கின்றமையை ஆதாரப்படுத்த முடியும். தன்னை ஒரு குட்டி இராஜ்ஜியத்தின் இராசாவாக மற்றவர்கள் முன் காட்டிக்கொள்ள முற்படுகின்ற அவர் அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்திப்பதற்கு தனது உதவியாளர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார்.

குறித்த சந்திப்பின் போது அரசாங்கம் கிளிநொச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், எனவே நன்றாக கடவுளை வணங்கிக் கொண்டு இருக்குமாறும் இரா.சம்பந்தன் தனக்கும் தனது உதவியாளர்களுக்கும் கூறியதாக சிறீதரன் ஏனையவர்களுக்குச் சொல்லி கேலி செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல அதே சிறீதரன், இன்னொரு விடயத்தினையும் சொல்லியிருக்கிறார், அதன் சாராம்சம் இதுதான்,

பலம்பொருந்திய தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பு இவ்வாறு முகவரியே இல்லாமல் அழிந்து போகும் என்று யாராவது, நினைத்திருந்தார்களா? சிறீதரன் என்றொருவர் அரசியலுக்கு வருவார், நாடாளுமன்றில் இவ்வாறெல்லாம் கதைப்பார் என்றெல்லாம் யாராவது நினைத்திருப்பீர்களா? இவ்வாறு தான் தலைவர்கள் காலத்துக்குக் காலம் வருவார்கள், போவார்கள். ஒரு காலத்தில் சிறீதரனிலும் பார்க்க திறமையானவர்கள் அரசியலுக்கு வரலாம். இதெல்லாம் இயல்பான விடயம் என்று தெரிவித்திருக்கின்றார். ஆக… தலைவர் என்ற கனவுக் கதிரையை அவர் சுமக்கத் தலைப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஒரு கூட்டமைப்பாகவோ, அல்லது கட்சியாகவோ பதிவு செய்வதற்கு அவர் உடன்படத் தயார் இல்லை. காரணம் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டால் இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசாவிற்குப் பின்னர் தமிழரசுக்கட்சியைத் தலைமை தாங்க முடியாது என்பதுடன் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றொரு பிரமாண்ட சக்தியை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பாகும். இதற்காகவே கிளிநொச்சியில் உள்ள கூட்டமைப்பு அலுவலகத்தில் தமிழரசுக்கட்சி என்ற பெயர்பலகையையும், தந்தை செல்வாவின் புகைப்படத்தினையும் முதன்மைப்படுத்தியிருக்கின்றார்.

தமிழரசுக்கட்சியின் இளைஞரணித் தலைவராக தன்னை கட்சி நியமித்திருப்பதாகவும் தான் தமிழரசுக்கட்சி இளைஞரணி அங்குராட்பணம் செய்யப்போவதாகவும் தெரிவித்து வந்த சிறீதரன் அண்மையில் மனம் உடைந்து காணப்பட்டிருக்கின்றார். காரணம் கேட்ட போது மாவை சேனாதிராசா தான் தற்போதும் தமிழரசுக்கட்சியின் இளைஞரணித் தலைவர் என்று தம்மிடம் சொல்லியதாகவும் இதனால் தனக்கு கவலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறைப்பட்டிருக்கின்றார்.

தேர்தலுக்காக சிறீதரன் செய்த தில்லுமுல்லுகள்!

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறீதரன் எவ்வாறு வென்றார், தமிழ்த் தேசியத்தினை வலியுறுத்திய கட்சிகள் எவ்வாறு தோற்கடிகப்பட்டன. போன்ற கேள்விகளுக்கான பதில்கள் பெருமளவானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தேர்தலுக்காக அவர் தனக்குச் சார்பான சிலரைத் தயார் செய்து அவர்களை வைத்து புனை பெயர்களிலும்,வன்னியைச் சுட்டி நிற்கும் அமைப்புக்களின் பெயர்களிலும் அறிக்கைகளையும் கட்டுரைகளையும் தயார் செய்து தனது சகோதரனின் இணையத்தளத்தில் பிரசுரம் செய்ய வைத்தார். அதனையே உள்ளுர் ஊடகங்களும் நம்பி எடுத்து மறுபிரசுரம் செய்திருந்தன.

குறித்த இணையம் செய்த பொய்பிரச்சார நடவடிக்கைகள் மூலம் உண்மையான தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் ஓரங்கட்டப்பட்டதுடன், அவர்கள் மீது தேசத் துரோகிகள் பட்டமும் சுமத்தப்பட்டது, சிவஞானம் சிறீதரன் தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு ஊடகப் பங்களிப்பு வழங்கியவர்கள் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நெருக்கமானவர்களாகவே இருந்தனர். குறித்த நபர்கள் வன்னியில் ஊடகப் பணி செய்தவர்களாக தம்மை அடையாளப் படுத்திக் கொண்டு தமிழ்த் தேசியத்தின் காவலராக சிறீதரனைச் சித்தரித்திருந்தனர். சிறீதரனைப் பற்றியும் அவரின் தேசியம் நோக்கிய பயணம் உண்மையானது என்பதையும் எழுத முடிந்த அவர்களால் சிறீதரனின் தேசியம் தொடர்பிலான போக்கில் உணரப்படுகின்ற மாற்றங்களை ஏன் சுட்டிக்காட்டத் முடியவில்லை? அவர் மீதான விசுவாசமா? அல்லது அவர்களும் தம்மை விலைக்கு கொடுத்துவிட்டார்களா? என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

அதே காலப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகள், அறிக்கைகளில் சிவஞானம் சிறீதரனின் மைத்துணரான பிரிகேடியர் தீபனின் பெயரும் குறிப்பிடப்பட்டு வாக்குச் சேகரிப்பும் இடம்பெற்றிருந்தது. ஒரு வீரனை, மிகப்பெரிய மாவீரனைச் சொல்லியும் வாக்குப் பிச்சைப் பாத்திரம் ஏந்தியவர் இன்று ஆயுதக் கலாசாரத்தினை நிராகரிப்பதாகவும், ஜனநாயக வழியில் வந்த தமிழரசுக்கட்சியினையே தனது பிரதான கட்சியாகக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்து வருகின்றமையை எந்த வகையில் ஏற்றுக் கொள்வது?

வன்னியில் இறுதிவரையில் இருந்தாரா? சிறீதரன்?

வன்னியில் மக்களுடன் இறுவரையில் இருந்ததாக மேடைகளில் கூறிவந்த சிறீதரன் எப்போ வன்னியில் இருந்து வெளியேறினார்? என்று அவரால் சொல்ல முடியுமா? வன்னியில் மக்கள் போரினால் கொல்லப்பட்டமை தொடர்பில் முன்னாள் முல்லைமாவட்ட அரசாங்க அதிபரும் தற்போதைய யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருமான இமெல்டா சுகுமார் தெரிவித்த கருத்தினை ஏற்க முடியாது. வன்னியின் இறுதிப்போர் நடைபெற்றபோது அரச அதிபர் வன்னியில் நின்றிருக்கவில்லை எனத் தெரிவித்த அவரால் அந்தக் காலப் பகுதியில் தான் எங்கே நின்றிருந்தார்? என்பதைச் சொல்ல முடியுமா? தருமபுரம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சித் தலைவர் என்ற முத்திரையைப் பயன்படுத்திக் கொண்டு தனது மனைவி, பிள்ளைகளுடன் செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்ட அவரால் வன்னி மக்களின் உண்மையான அழிவுகளை, இழப்புக்களைப் பற்றிக் கதைத்துக் கொண்டு அரசியல் செய்யத் தகுதி இருக்கிறதா?

தனது பணியாளர்களைக் கூட சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் அருவருக்கத் தக்க குணம்

சிவஞானம் சிறீதரன் தருமபுரத்தில் இருந்து வெளியேறினாலும் அவருக்கு கீழ் பணியாற்றிய பல செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்களும் ஊழியர்களும் போரின் இறுதிவரையில் மக்களுக்காக பணி செய்து ஓய்ந்தனர். அவர்களில் ஒரு சிலர் தற்போது தேசியம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அவர்களைப் போல இன்னும் சிலரும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் பணிசெய்கின்றனர். அவர்கள் தன்னுடன் பணி செய்கின்றனர் என்ற நோக்கம் எதுவுமே இன்றி, தன்னுடன் தொலைபேசியில் உரையாடுபவர்களிடம் அவர்கள் நல்லவர்கள் இல்லை என்றும் அவர்கள் பெண்கள் சார் விடயங்களில் குறைபாடு உடையவர்களாகவே உள்ளனர் என்றும் சிலர் தம்மிடம் பணத்திற்காக பழகுகின்றார்கள் என்றும் குறைபட்டுக் கொண்டிருக்கின்றார். (இதற்கான ஒலி ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன. ஆனாலும் அவற்றினை இணையத்தில் வெளியிடுவது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால் அவற்றினை தற்போது வெளியிடவில்லை.)

தனது நிர்வாகத்தின் கீழ் உள்ளவர்கள் தொடர்பிலேயே திருப்திப்பட்டுக்கொள்ளாதவரும், அவர்களுக்குக்கூட விசுவாசமாக நடந்துகொள்ளாதவருமான அவரால் எவ்வாறு மக்கள் பணியினை திறந்த மனதுடன் நிறைவேற்றிக் கொள்ள முடியும்?

சிறீதரனின் வாகனத்தின் மீது தாக்குதல்?! சம்பவம் உண்மையானதா?

நொச்சியாகமவிற்கு அண்மித்த பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சென்ற வாகனத்தின் மீது பாரிய தாக்குதல், மயிர் இழையில் உயிர் தப்பினார், என்றெல்லாம் பரபரப்பான செய்திகள் வெளியாகியிருந்தன. வாகனம் பலத்த சேதம் அடைந்ததாகவும் சொல்லப்பட்டது.

இரண்டு கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நால்வர் துப்பாக்கிப்பிரயோகமும் மேற்கொண்டிருந்தனர். உண்மையில் அவ்வாறான தாக்குதலை இராணுவப் புலனாய்வுப்பிரிவினர் இவரைக் கொல்லவேண்டும் என்ற நோக்கில் நடத்தியிருந்தால் சிறீதரனால் தப்பித்துக் கொள்ளமுடியுமா? அல்லது இவரது சாரதி இந்திய தமிழ்ச் சினிமாப் பாணியில் வாகனத்தினைச் செலுத்தி இவரையும் வாகனத்தையும், ஏனையவர்களையும் காப்பாற்றியிருப்பாரா? தாக்குதல் உண்மையானதாக இருந்திருந்தால் முதலில் தாக்குதல் சாரதி மீதே நடத்தப்பட்டிருக்கும்?

ஆனால் தாக்குதலில் எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் விட்டது எப்படி? சேதமடைந்த வாகனத்தின் முழுமையான புகைப்படங்கள் எவையும் ஏன் வெளியிடப்படவில்லை. வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மிக அருகாக பிடிக்கப்பட்டவையே அன்றி வேறில்லை.

ஆனாலும், இந்தச் சம்பவம் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு அவர் வழங்கிய கருத்துக்களில் முரண்பட்ட நிலை உள்ளமையை தெளிவாக ஆதாரமாகச் சுட்டிக்காட்ட முடியும்? அதேபோல சம்பவம் நடைபெற்ற போது தமிழகத்தில் இருந்த தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை திரும்பியதும் சம்பவம் குறித்து சிறீதரனிடம் கேள்வி எழுப்பிய போது அவர் தலைகுனிந்தபடி இருந்தமை தொடர்பிலான தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.

உண்மையில் தாக்குல் நடந்தது தொடர்பிலான உண்மையான தகவல்கள் அவருக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் மட்டுமே தெரிந்திருக்கும், இரணைமடுவில் இருக்கும் இராணுவ முகாம் ஒன்றில் மேஜர் ஜெனரல் தரத்திலான புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவரை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடிக்கடி சந்தித்து வருவதாக வெளியாகிய செய்தி உண்மையானதா,? வதந்தியா? என்பதனை எம்மால் உறுதி செய்ய முடியவில்லை.

தமிழீழத் தேசியக்கொடியை புறக்கணிக்கவேண்டும் – புலம்பெயர் மக்களுக்கு அறிவுரை சொன்னாராம் சிறீதரன்!

அமெரிக்க பிரதிநிதிகள் குழுவை கிளிநொச்சியில் சந்தித்த சிறீதரன் புலம்பெயர் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றார். அவ்வேளை புலம்பெயர் தளத்தில் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களின் போது தமிழீழத்

தேசியக் கொடியை வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்? என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் கேட்டபோது, அந்த நடவடிக்கை தவறானது என்றும் தமிழீழத் தேசியக்கொடியினை ஏந்திச் செல்லும் நடவடிக்கையினை புலத்தில் உள்ளவர்கள் கைவிடவேண்டும் அதனை ஏந்திச் செல்வதாலேயே புலம்பெயர் மக்களின் போராட்டங்கள் வெற்றியடையவில்லை என்றும் சிறீதரன் தெரிவித்திருக்கின்றார். தமிழீழத் தேசியக்கொடி தமிழர்களின் அடையாளம் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தமிழ்மக்களின் எதிர்காலத் தலைவராகத் தம்மைக் கருதிக்கொள்ளும் சிறீதரனிடம் இல்லாத நிலையில் அவரது தலைமைக் கனவு எவ்வாறு சாத்தியம்?

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் அன்றே அரச தரப்பு வர்த்தகர்களுடன் விருந்துண்டார் சிறீதரன்!

சிங்களமயமாக்கல், நில ஆக்கிரமிப்புக்கு எதிராக வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று கடந்த மாதம் நடைபெற்றிருந்தமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதே நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் மற்றொரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னியில் அரசாங்கம் அனுப்பிவைத்த மலேசிய வர்த்தகக் குழுவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தமை தொடர்பிலான விபரங்கள் எமக்குக் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

அரச தரப்பின் அழைப்பை ஏற்று இலங்கை வந்திருந்த குறித்த வர்த்தகக் குழுவினைச் சந்திக்கும்படி கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கும் அரசினால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. கட்சி ஏற்பாடு செய்தியிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தினையே இடைநடுவில் கைவிட்டுவிட்டு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் அவருடைய நண்பரும் கிளிநொச்சியில் குறித்த குழுவினருடன் சந்திப்பில் ஈடுபட்டதுடன் வன்னியில் சில பகுதிகளுக்கும் சென்றிருக்கின்றனர். அதே நாள் இரவு கொழும்பிலுள்ள சீன உணவகம் ஒன்றில் அவர்களுக்கான இரவு உணவும் நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எமக்கு கிடைத்திருக்கின்றன.

மனிதன், லங்காசிறீ, தமிழ்வின் இணைங்கள் யாருடையவை? யார் சொல்வதில் உண்மை?

தற்போது புலம்பெயர் தளத்திலும், தாயகத்திலும் சூடுபிடித்திருப்பது மனிதன் இணையத்தள விவகாரம். மனிதன் இணையத்தளம் கே.பி என்கின்ற குமரன் பத்மநாதனின் கீழ் தான் செயற்படுகின்றது என்பதனை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

ஆனால் அவர் தனது வழமையான பாணியிலேயே மனிதன் இணையத்தளத்திற்கும் தனது சகோதரனுக்கும் தொடர்பு எதுவுமே இல்லை என்று தெரிவித்திருக்கின்றார். அதேவேளை மனிதன் இணையத்தள நிர்வாகியும் லங்காசிறீ இணையத்தளப் பணிப்பாளராகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற சிங்களப் பெண்ணின் கணவனுமான சஞ்சை என்பவர் தமது இணையத்தளங்களுக்கு இடையிலான தொடர்பினை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ஆகவே முரண்பட்ட தகவல்களை வெளியிடுபவர்கள் தமக்கு இடையிலான தொடர்புகளை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

குமரன் பத்மநாதன் என்கின்ற முன்னாள் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் செயற்படுத்துகின்ற தளங்களான மனிதன், லங்காசிறீ, தமிழ்வின் இணையத்தளத்தின் பிரதான பங்குதாரர்களில் ஒருவரான சிவஞானம் சிறீகுகனின் சகோதரனான சிவஞானம் சிறீதரன் தமிழ்த் தேசியத்தில் அப்பழுக்கற்ற ஒரு தமிழ்த் தேசியவாதியாகச் செயற்படுவார் என்பதனை எந்தவகையில் ஏற்றுக்கொள்ளமுடியும்?

தமிழ்த் தேசிய இணையத்தளங்களாக தம்மை அடையாளப்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்திருந்த குறித்த இணையங்களை நம்பி இரகசியமான பெருமளவான தகவல்களை வழங்கிய தமிழ்த் தேசியத்தினை நேசிக்கின்ற தமிழ் உணர்வாளர்களின் மின் அஞ்சல்கள், மின் அஞ்சல்கள் அனுப்பிய இணையத்தளங்கள் பயன்படுத்தப்பட்ட இடங்கள் உட்பட்ட பல்லாயிரம் விபரங்கள் இரகசியம் காக்கப்பட்டிருக்குமா? என்பது சந்தேகமே? எமது மக்கள் வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி சிறுகச்சிறுகச் சேமித்த பணத்திலேயே குறித்த இணைங்களுக்கான விளம்பரச் செலவுகளுக்காக வழங்கியிருக்கின்றனர். தேசியம் என்கின்ற சாயத்தினை வைத்து உண்மையான தேசியவாதிகளுக்கான கழுத்தறுப்புக்கள் காலாகாலமாக தமிழினத்தின் சாபக்கேடாக அமைந்திவருகின்றன.

தமது தளங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 42பேர் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்களின் பெயர் விபரங்களை சேகரித்திருப்பதாகவும் இறுதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரனும் குறித்த இணைங்களின் பங்குதாரருமான சிறீகுகன் எச்சரிக்கைப் பாணியில் அறிவித்திருக்கின்றார்.

குறித்த பெயர் விபரங்கள் யாரிடம் வழங்கப்படப் போகின்றன? 42 பேரும் புலத்திலும், தாயகத்திலும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். ஆகவே புலத்தில் இருப்பவர்களை விடுத்தாலும் தாயத்தில் இருப்பவர்களை நோக்கி நீளப்போகின்ற கைகள்.. என்ன செய்யப் போகின்றன? தாயகத்தில் உள்ளவர்களின் உயிர்களின் உத்தரவாதத்தினை யார் தான் தரப்போகிறார்களா? மீண்டும் ஊடகர்கள் மீதான அடக்குமுறைக் கட்டவிழ்ப்புக்கு நாடாளுமன்ற உறுப்பினரும், சகோதரனும் துணைநிற்கப் போகிறார்களா?

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தனக்கு விளம்பரம் செய்ய லங்காசிறீயை நாடினாராம் மஹிந்த!

ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்திருந்த காலப் பகுதியில் தனக்கு சார்பாக தேர்தலில் விளம்பரம் வெளியிடுமாறு மஹிந்தாஜபக்ச சிவஞானம் சிறீகுகனை நாடியதாகவும் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தாகவும் சிறீதரன் தனக்கு நெருக்கமானவர்களுக்குச் சொல்லியிருக்கின்றார். அவ்வாறான விளம்பரத்தினை அவர்கள் வெளியிட மறுத்தற்கான காரணம் என்ன,? என்பது அன்று புரியவில்லை. இன்று புரிகிறது. அன்றே விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தால் அன்றே தொடர்புகள் புலப்பட்டிருக்கலாம். மாறாக அன்று வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டமையே அடையாளம் காண்பதற்கான நீண்ட காலத்தை எடுத்திருக்கிறது.

லங்காசிறீ, தமிழ்வின் இணையத்தளப் பணியாளர்கள் அரச ஊடகங்களில் பணி செய்பவர்கள்!

லங்காசிறி உரிமையாளரின் FaceBook
லங்காசிறி உரிமையாளரின் FaceBook

தமிழ்வின் இணையத்தளத்திற்கான பிரதான செய்தி பதிவு ஏற்றம் செய்பவர் அரசாங்கத்திற்குச் சார்பான கொழும்பின் தனியார் இலத்திரனியல் ஊடகம் ஒன்றின் செய்திப் பொறுப்பாசிரியராகக் கடமை செய்கின்றார். அதேபோல மட்டக்களப்பில் செய்தியாளராகக் கடமை செய்பவர் பிரதி அமைச்சர் முரளீதரனின் சிபார்சுக்கு அமைய அரச தொலைக்காட்சிக்கான மட்டக்களப்பு செய்தியாளராகப் பணிபுரிகின்றார். உதாரணத்திற்காக மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. மிகத் தெளிவான புரிதல்கள் வாசர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை எம்மிடம் உண்டு. பிரபல்யத்துக்காவோ, யார் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதோ எமது நோக்கம் அல்ல. ஆதாரப்படுத்தல்களையே தொடர்ந்தும் மேற்கொண்டுவருகின்றோம். எது சரி? எது தவறு? பகுத்துணரும் பக்குவம் வாசகர்களுக்கு உண்டு!

லங்காசிறி இணையத்தளத்தின் 100 % உரிமையான்மைக்கும் உரித்தானவர் சிங்களப் பெண்மணி. இது பிரித்தானிய கம்பனிகளை கையாளும் நிறுவனத்தினூடாக மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. அறிக்கையை பார்க்க இங்கே அழுத்தவும்

நன்றி சரிதம் இணையம்