"சுமந்திரனுக்கு இரண்டு முகங்கள்": பிரபா கணேசன்

Home » homepage » "சுமந்திரனுக்கு இரண்டு முகங்கள்": பிரபா கணேசன்
தமிழ் மக்களைப் பந்தாடும் சிறிலங்கா அரசுடன் கிரிக்கெட் விளையாடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
தமிழ் மக்களைப் பந்தாடும் சிறிலங்கா அரசுடன் கிரிக்கெட் விளையாடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வில் ஏகப்பிரதிநிதி என்று செயற்பட்டுவருவதாகக் கூறிக்கொண்டு மறுபுறம் அரசாங்கத்துடன் கிரிக்கெட் விளையாடுபவர்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வட – கிழக்கு மக்களுக்கு ஒரு முகத்தையும் அரசாங்கத்துக்கு இன்னொரு முகத்தையும் காட்டி வருகிறார் என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

“கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருக்கும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து சிறப்பித்துள்ளார்.

இப்படியான நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை நாங்கள் வரவேற்கின்றோம். அதேநேரம் தென்னிலங்கை மக்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்தபொழுது அதைப் புரிந்துகொண்டு ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருந்தபோதும் இதே சுமந்திரன் பாராளுமன்றத்தில் எங்களை துரோகி என்று வசைபாடினார் என்பதையும் அவர் மறந்துவிடக்கூடாது. இன்று தமிழ் மக்களுக்கு தீராத இனப்பிரச்சினை இருந்துகொண்டிருக்கும்போது கிரிக்கெட் போட்டிகள் தேவைதானா என்று அரியநேத்திரன் எம்.பி வாட்டசாட்டமாக விமர்சித்துள்ளார்.

இந்த விமர்சனத்துக்கு கூட்டமைப்பு தேசிய பட்டியல் எம்.பி பதிலளிக்க வேண்டும். தென்னிலங்கை தமிழ் மக்களின் தேவை வேறு விதமாக இருக்கின்றது என்பதற்காக அரசாங்கத்துக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம். அதை நாங்கள் நேரடியாக தெரிவித்திருக்கிறோம். ஆனால் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வட – கிழக்கு மக்களுக்கு ஒரு முகத்தையும் அரசாங்கத்துக்கு இன்னொரு முகத்தையும் காட்டி வருகிறார். அதேநேரம் அரியநேத்திரன் போன்ற தமிழ் உணர்வுகொண்ட நேர்மையான பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments Closed

%d bloggers like this: