சிறிரங்காவுக்கும் சுமந்திரனுக்குமிடையில் சிறிலங்கா பாராளுமன்றத்தில் கடும் வாய்ச்சண்டை! ஆளும் தரப்பினர் வாழ்த்து.!

Home » homepage » சிறிரங்காவுக்கும் சுமந்திரனுக்குமிடையில் சிறிலங்கா பாராளுமன்றத்தில் கடும் வாய்ச்சண்டை! ஆளும் தரப்பினர் வாழ்த்து.!

எதிரணியில் அருகருகே அமர்ந்திருக்கும் தமிழ் உறுப்பினர்கள் இருவருக்கு இடையில் சபையில் கடும் வாய்ச்சண்டை ஏற்பட்டதுடன் இருவரும் ஒருவரையொருவர் வசைபாடி திட்டி தீர்த்துக் கொண்டிருந்தனர். இதனை சிறிலங்கா பாராளுமன்றத்தில்இருந்த இரு தரப்பினரும் வேடிக்கை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

சிறிலங்கா பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வெகுஜன ஊடக, தகவல் அமைச்சு மீதான குழு நிலை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிரங்கா எம்.பி.க்கும் கூட்டமைப்பு எம்.பி.யான சுமந்திரனுக்கும் இடையிலேயே வாய்ச்சண்டை ஏற்பட்டது.

சிறிரங்கா எம்.பி. தனதுரையில்:

ஊடகங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்ததுடன் இணையத்தளங்கள் தடை குறித்தும் எடுத்தியம்பினார். இதனிடையே சிறிதரனுக்கு சொந்தமான இணையத்தளம் செயற்படுவதாகவும் சுட்டிக் காட்டினார்.

இதன்போது ஓடோடி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான சுமந்திரன் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி உறுப்பினர் ஒருவர் இல்லாத நிலையில் அவரின் பெயரைக் குறிப்பிட்டு குற்றம் சாட்ட முடியாது என்று சுட்டிக் காட்டினார்.

இந்த ஒழுங்குப் பிரச்சினையை மறுத்த சிறிரங்கா எம்.பி., நான் சிறிதரன் என்றுதான் குறிப்பிட்டேன். கௌரவ உறுப்பினர் என்று கூறவில்லை.

சுமந்திரனுக்கு தமிழ் தெரியும் என்று நான் நினைக்கின்றேன் என்றார். உடனடியாகவே எழுந்த சுமந்திரன் எம்.பி. நான் தமிழ் மொழியில் தானே பேசுகின்றேன். கொரிய மொழியில் பேசவில்லையே என்றார்.

ரங்கா எம்.பி. இதற்கு பதிலளிக்கும் வகையில் நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன். நான் அரச தரப்புடன் கிரிக்கெட் விளையாட வரவில்லை. தலைவருக்கு கண்ணாடியும் பைல் கவர்களையும் தூக்கிக் கொடுத்துக் கொண்டு பின் கதவால் வரவில்லை.

அரசுடன் மக்கள் பிரதிநிதியே பேசவேண்டும். பின் கதவால் வந்து கிரிக்கெட் விளையாடுபவர், மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் எவ்வாறு பேச முடியும் என்று வினவினார்.

இதனிடைய எழுந்த சுமந்திரன் எம்.பி. என்னைக் கட்சியே தெரிவு செய்தது. அது கூட இவருக்கு தெரியாது எனக் கிண்டல் செய்தார்.

இதனையடுத்து உரையாற்றிய ரங்கா எம்.பி.,: மக்கள் பிரதிநிதிக்குத்தான் மக்களின் பிரச்சினை புரியும். முல்லைத்தீவு மக்கள் கிரிக்கெட் மட்டையின்றி இருக்கின்றனர்.

இவரோ இங்கு கிரிக்கெட் விளையாடுகின்றார். இதனை நான் சொல்லவில்லை. அவரது கட்சியைச் சேர்ந்த அரியநேத்திரன் கண்டித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யான விஜயகலா மகேஸ்வரன் எம்.பி. கூட கேள்வி எழுப்பினார். உள்வீட்டு விவகாரங்களுக்கு முதலில் தீர்வு காணுமாறு சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் நேற்று (நேற்று முன்தினம்) உரையாற்றுகையில் சுட்டிக் காட்டினார் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனார்.

தொடர்ந்தும் ரங்கா எம்.பி. கூட்டமைப்பைக் கடுமையாகத் தாக்கினார். இதனைப் பொறுத்து கொள்ள முடியாத எம்.பி.க்களான பொன் செல்வராசா, அடைக்கலநாதன் ஆகியோர் ரங்காவுடன் தர்கித்துக் கொண்டனர். எனினும், சுமந்திரனுக்கும் ரங்காவுக்கும் இடையில் அமர்ந்திருந்த அரியநேத்திரன் எம்.பி. எதுவுமே பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

உறுப்பினரின் உரை விடயதானங்களுக்கு அப்பால் செல்வதனை அவதானித்த அவைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் விடயதானங்களுக்கு அமைவாக உரையாற்றுமாறு ரங்காவைக் கேட்டுக் கொண்டார்.

இருவருக்கும் இடையில் சபையில் வாய்ச்சண்டை இடம்பெற்று கொண்டிருந்தபோது சபையில் அமர்ந்திருந்த ஆளும், எதிர்த் தரப்பினர் வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். ஆளும் தரப்பினரில் சிலர் பெருவிரலை உயர்த்திக் காண்பித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

Comments Closed

%d bloggers like this: