தமிழீழம்

சர்வதேச போர்க் குற்றச்சாட்டுகளுக்கு அரசு பதில் சொல்லியே தீரவேண்டும்; இலகுவில் தட்டிக் கழிக்க முடியாதென நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்து

தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு இலங்கை அரசுக்கு மிகவும் பக்கபலமாக இருந்த இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான் இன்று மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசிடம் கேள்விகளை எழுப்பியுள்ளன. சர்வதேச சமூகத் தால் எழுப்பப்பட்ட இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை இலகுவில் இலங்கை அரசு தட்டிக்கழித்துவிட முடியாது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். வெளிவிவகார அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது:

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் காலஞ்சென்ற லக்ஷ்மன் கதிர்காமர் தனது காலப்பகுதியில் பெரும் பகுதியை சர்வதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்வதிலேயே கழித்தார். அதனால் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல சர்வதேச நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்தன.

அதேபோன்று புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கும் இந்த நாடுகள் பல வழிகளிலும் உதவிகளை வழங்கிப் பக்கபலமாக செயற்பட்டன.இன்று இந்த நாடுகள்தான், “இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன, போர்க்குற்றம் புரியப்பட்டுள்ளது, மனிதநேயம் மீறப்பட்டுள்ளது, சிறுபான்மையினர் பாதுகாக்கப்படவில்லை” என்று குற்றம்சுமத்துகின்றன. இந்தவிடயங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அவை வலியுறுத்தியுள்ளன.

இலங்கை அரசு சர்வதேச மட்டத்தில் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. சர்வதேசம் வெளிப்புறத் தகவல்களை ஆய்வுசெய்வதை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு கைச்சாத்திட்டுள்ளது.இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவை உதாசீனப்படுத்தினீர்கள். அதேவேளை, நீங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தீர்கள். எனினும், சர்வதேச விசாரணை ஆணைக்குழு, திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் படுகொலை, 16 தமிழர்கள் கொல்லப்பட்டமை, அம்பாறையில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை,

கெப்பிட்டிக்கொல்லாவையில் சிங்களவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக ஆய்வுகளை நடத்தியது.

முன்னாள் தலைமை நீதிபதி பசுபதி தலைமையிலான கண்காணிப்புக் குழுவினரின் அறிக்கை என்ன கூறியுள்ளது?இந்தக் குழுவினர் இலங்கை அரசுக்கு எதிராகப் பல்வேறு கூற்றுகளை முன்வைத்துள்ளனர். குறிப்பாக, மனித உரிமை மீறல் தொடர்பாக அரசியல் விருப்பு இன்றி விசாரணைகளை மேற்கொள்ள முடியாது. விசாரணை நடத்துவதற்கான சாதகநிலை இலங்கையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். புலம்பெயர் வாழ் தமிழர்கள், இலங்கை வாழ் தமிழர்களின் விடிவு தொடர்பாகத் தீவிரமாகச் செயற்படுகின்றனர் என்று குற்றம்சாட்டுகின்றீர்கள்.

சர்வதேச சமூகம் கூறுவதைத்தான் அவர்களும் கூறுகின்றனர்.
உரையாடல்கள் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.
பொதுமக்கள் பாதுகாக்கப்படவேண்டும். இராணுவத் துன்புறுத்தல்கள் நீக்கப்படவேண்டும்.
சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவான நிரந்தரத்தீர்வு காணப்படவில்லை என்கின்றனர்.

இதைத்தானே சர்வதேச சமூகமும் வலியுறுத்துகின்றது.நமது நாட்டில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் போன்றவை தேசிய தலைவர்களால் கைச்சாத்திடப்பட்டவை. பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆனால், இவை எதுவுமே உருப்படியாக கவனத்தில் கொள்ளப்படவில்லை; நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இப்பொழுது மேலும் பல ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்படவுள்ளன என அறிகின்றோம். அவை மேலும் பலமுள்ளதாக அமையும் என்றும் கூறப்படுகின்றது.இறுதிக்கட்டப் போரின்போது அங்கு வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை தொடர்பாக அமைச்சர்களும், ஆயுதப்படையினரும் வெளியிட்ட தகவல்கள் மாறுபட்டவையாகவே இருக்கின்றன.இப்போது சர்வதேச மட்டத்தில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர், தொடர்ச்சியாக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன, சர்வதேச மனித உரிமைச்சட்டங்கள் மீறப்பட்டுள்ளன, சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை, பொலிஸாரும் இராணுவத்தினரும் அளவுக்கு அதிகமாகப் பேணப்படுகின்றனர் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

இங்கு ஐக்கிய நாடுகளின் பிரசன்னம் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்றத்தில் சாட்சிகளைப் பாதுகாத்தல் தொடர்பான சட்டவரைவு ஒன்று முன்வைப்பட்டது. ஆனால், அது அப்படியே காணாமல்போய்விட்டது.

சர்வதேச சமூகத்தைச் சமாளிக்க உங்களுடைய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகளைக் காட்டி கால அவகாசம் கேட்பீர்கள். உண்மையாகவே கற்றுக்கொண்ட பாடம் என்ன? ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கம் என்ன?

இறைமையைப்பற்றிப் பேசுகின்றீர்கள். இறைமை என்பது மக்களுக்குத்தான்; அரசுக்கு அல்ல. எனவே, பொதுமக்களின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட்டால் அதுதான் இறைமை.பெண்கள், சிறுவர்கள் மற்றும் மக்களின் மனிதநேயம் பாதுகாக்கப்படவேண்டும். இன்று அவை கேள்விக்குறியாகிவிட்டன.நாம் கடந்த இரண்டு வருடங்களாக அரசுடன் பேச்சு நடத்தி வருகின்றோம். நாம் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் பேசுகின்றோம். ஆனால், எந்தவிதமான அடிப்படை நன்மையும் எட்டப்படவில்லை. அரசின் பங்களிப்பு மூடுமந்திரமாகவே இருக்கின்றது என்றார் சம்பந்தன்.