இந்தியா

முல்லைப்பெரியாறு அணை : தன் உரிமைகளை எச்சூழலிலும் தமிழக அரசு விட்டுக்கொடுக்காது என சட்டமன்றத்தில் தீர்மானம்

முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில் தன் உரிமைகளை எச்சூழலிலும் தமிழக அரசு விட்டுக்கொடுக்காது என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை ஏற்று, அந்த அணையின் நீர்மட்ட உயரத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு ஏதுவாக, 2006 ஆம் ஆண்டு கேரள பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு(திருத்தச்) சட்டத்தில் உரிய திருத்தங்களை கேரள அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானம் கூறுகிறது.

மேலும் அணையின் நீர்மட்ட உயரத்தை 152 அடியாக உயர்ததி, நீண்ட கால அணைப் பாதுக்காப்பு பணிகளை மேற்கொள்ள, கேரள அரசு தமிழக அரசுக்கு தடை ஏதும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும் தமிழக சட்டமன்றத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது தொடர்பில், 2006 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள போதிலும், நாட்டின் அரசியல் அமைப்பை அவமதிக்கும் வகையில், கேரள அரசு பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு(திருத்தச்) சட்டத்தை இயற்றியுள்ளது என்றும் தமிழக சட்டமன்றத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்தச் சட்டத்துக்கு எதிரான மனு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று, உண்மைக்கு மாறான பிரச்சாரம் மூலம் கேரள மக்களிடையே பீதியை கிளப்பி, புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கேரள அரசு வலியுறுத்தும் அதே நேரத்தில், அணையின் நீர்மட்ட அளவை 120 அடியாக குறைக்க வேண்டும் என்று அம்மாநில சட்டமன்றத்தில் 9.11.12 அன்று ஒரு தீர்மானத்தை இயற்றி இருப்பது

வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என்றாலும், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அது சரியானது அல்ல என்கிற காரணத்தால், அந்தத் தீர்மானத்தின் மீது தமிழக மக்களின் வருத்தத்தை தெரிவிப்பது எனவும் தமிழக சட்டமன்றத் தீர்மானம் தெரிவிக்கிறது.

இதனிடையே முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அணையின் பாதுகாப்பு தொடர்பில் கேரள அரசு அளித்த உத்திரவாத்தை அடுத்து, தமிழக அரசு தனது மனுவை முன்னெடுத்துச் செல்ல வலியுறுத்தாத நிலையில், அது விலக்கிக் கொண்டதாகக் கருதப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.