தமிழீழம்

பேச்சை நிறுத்துவது உடன்பாட்டு மீறல்தெரிவுக்குழு தொடர்பான கூட்டமைப்பின் முடிவில் மாற்றமில்லை என்கிறார் சுமந்திரன்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சிறிலங்கா நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குப் பெயர்களைக் கூட்டமைப்பு தரும்வரை தீர்வுப் பேச்சுகளைத் தொடர்வதில்லையென்று அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிர்ச்சியும், கவலையும் வெளியிட்டுள்ளது.

“இப்படியான உறுதியான தீர்மானமொன்றை சிறிலங்கா அமைச்சரவை எடுத்திருக்குமாயின், தீர்வுப் பேச்சுகளைத் தொடர்வதற்கு அரசானது தமிழ்க் கூட்டமைப்புடன் செய்துகொண்ட உடன்பாட்டையே மீறும் செயல்” அதுவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
அரசுடன் நாம் நடத்தும் பேச்சுகளின்போது தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டதால் முன்னர் ஒரு முடக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் நாம் எமது நிலைப்பாட்டை அரசுக்குத் தெளிவாகச் சொல்லிவிட்டோம். முதலில் பேச்சு மேசையில் இணக்கப்பாட்டிற்கு வருவது, பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எமது தரப்பின் பெயர்களை அனுப்புவது என்ற எமது நிலைப்பாட்டை நாம் மிகவும் தெளிவுபடக் கூறியிருந்தோம்.

எமது இந்த நிலைப்பாட்டை அரசும், பேச்சுக்குழுவும் ஏற்றுக்கொண்டன. இதனடிப்படையில்தான் டிசம்பர் மாதத்தில் பேச்சு தொடர்ந்து நடந்தது. இதுதான் களநிலைமை. இப்போது அரசு அமைச்சரவையில் இப்படி முடிவை எடுத்திருக்கிறது என நாங்கள் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறியவில்லை. அரசு அப்படியான உறுதியான தீர்மானம் எடுத்திருக்குமாயின், பேச்சு மேசையில் எட்டப்பட்ட உடன்பாட்டை ஆரோக்கியமான முறையில் பேச்சு தொடரும் ஒரு நிலைமையை அரசே மீறுவதாகவே நாம் கருதமுடியும்.

எமது நிலைப்பாட்டை நாம் ஏலவே அறிவித்திருப்பதால் அதனடிப்படையில் தீர்வுப்பேச்சைத் தொடர நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.
என்றார் சுமந்திரன்.