தமிழர் புத்தாண்டு – பொங்கல் திருநாள் – தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.

Home » homepage » தமிழர் புத்தாண்டு – பொங்கல் திருநாள் – தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.

தமிழில் முதலாம் திகதியை தைப்பொங்கல் தினமாக கொண்டாடும் வழக்கம் தொன்றுதொட்டு தமிழர்களிடையே உள்ளது. இதற்கு வடக்கு- கிழக்கு இலங்கையில் (தமிழீழம்) வாழும் மக்களும் சிறி லங்காவில் வாழும் தமிழ் மக்களும் விதிவிலக்கல்ல.

காலத்தை அறுபது நாழிகைகைளாகவும் ஆறு சிறு பொழுதுகளாகவும் ஆறு (Seasons) பருவங்களாகவும் வகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான்.

நம் இளவேனில் காலம் தை மாதம். அதனால்தான் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம் 500 க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் ஆராய்ச்சி முடிவும் ,இதுதான். இதன் அடிப்படையிலேயே தை மாதத்தை தமிழ்ப் புத்தாண்டாக பல ஆராய்ச்சிகளுக்கு பின் முடிவெடுக்கப்பட்டது.

‘நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே

அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழனுக்கு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!’

என்று பாவேந்தர் பாரதிதாசன் தனது புரட்சி கவிதைகளில் கூறியிருக்கிறார்.

புலம் பெயர்ந்தும் தமிழ் மொழி பண்பாடுகளை அழியாது காத்து நிற்கும் நாங்கள் தமிழ் தேசிய உணர்வுகள் அழிந்து விடாமல் இருக்க தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் உலகத்திலேயே பழமைவாய்ந்த பாரம்பரியத்தை உடைய பொங்கல் திருநாளாகிய தமிழர் புத்தாண்டாக கொண்டாடவேண்டியது முக்கியம்.

தை மாதத்தை வரவேற்று ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்ற பழமொழியை அமைய தமிழ் புத்தாண்டை தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் தமிழர்கள் நாம் புது பானை வைத்து பொங்கி கொண்டாட வேண்டும்.

நாங்கள் புலம்பெயர்ந்து வேறுபட்ட சூழலில் வாழ்ந்தாலும் எமது பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தும் பொங்கல் போன்ற இனிய விழாக்களைக் கொண்டாடுவதன் மூலம் எங்களது மொழி கலை பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை நாம் பேணிக் காப்பாற்ற முடியும். இப்படியான விழாக்களை நாம் கொண்டாட மறந்தால் அவற்றை நாம் கைவிட்டால் எங்கள் மொழி கலை பண்பாடு காலப் போக்கில் அழிந்து போகும் ஆபத்து இருக்கிறது. முன்னைய காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் மொழி கலை பண்பாட்டை இழந்து தமிழர் என்ற அடையாளத்தையே தொலைத்து இருக்கிறார்கள். இன்று புலம்பெயர்ந்து வாழும் நாங்கள் தமிழ் தேசிய உணர்வுகளையும் தேசிய நிகழ்வுகள் சின்னங்கள் அழிந்து விடாமல் இருக்க இன்று போராடிகொண்டிருக்கிறோம். தமிழ்மொழி கலை பண்பாடு ஆகியவற்றின் மீதுள்ள பற்றும் தமிழின உணர்வும் தமிழர்களின் பண்பாடு கலை கலாச்சாரம் தமிழர் பூமியில் அழித்து கலாச்சார படுகொலையை செய்து கொண்டு நிற்கும் சிங்கள அரசின் ஆராஜகத்திட்கு எதிராக நாம் எமது பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்.

தமிழீழத்தில் போர் முடிவுக்கு வந்தாலும் எமது உறவுகள் சிங்களக் கொடுங்கோல் ஆட்சியில் சிக்கி சுதந்திரமாக இந்த நாளை அவர்களால் கொண்டாட முடியாது அதே நேரத்தில் இடம்பெயர்ந்து சொந்த வீடுகள் இல்லாமல் உண்ணப் போதிய உணவில்லாமல் உடுக்க துணியில்லாமல் நோய்க்கு மருந்தில்லாமல் இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அல்லல்படுகிறார்கள். இரண்டரை ,லட்சம் மக்களை மீள் குடியேற்றம் செய்து விட்டோம் என்று சிங்கள அரசு சொன்னாலும் அவர்களில் பெரும்பாலோர் உற்றார் உறவினர் வீடுகளிலும் நலன்புரி நிலையங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு தமது வீடுகளில் பொங்கல் கொண்டாடினாலும் எமது தாயக உறவுகளுக்கு இது இனிப்பான பொங்கலாக இருக்கப்போவதில்லை.

பிறக்கப் போகும் இந்தப் புத்தாண்டில் எமது தாயக உறவுகளின் இன்னல்கள், துன்பங்கள் துயரங்கள், அல்லல்கள், அவலங்கள், அனர்த்தங்களை அகற்ற, எமது பூமியில் நாம் சுதந்திரமாக வாழ எமது மக்கள் விடுதலை அடைய அவர்களது வாழ்விலும் இன்பம் பொங்க புலம்பெயர்ந்து வாழும் நாம் இந்த புத்தாண்டில் புலம்பெயர் நாடுகள் எங்கும் பொங்கி எழுவோம் என்று முடிவெடுப்போம்.

அதே நேரத்தில் இந்த பொங்கல் நாளில் 18 வருடங்களுக்கு முதல் தமிழர்களின் விடியலுக்காக தமது இன்னுயிரை ஈகை செய்த தளபதி கிட்டு மற்றும் மேஜர் வேலன் கேணல் குட்டிஸ்ரீ கடற்புலி கப்டன் றோசான் கடற்புலி கப்டன் அமுதன் கடற்புலி லெப். நல்லவன் கடற்புலி கப்டன் குணசீலன் கடற்புலி கப்டன் நாயகன் ஆகியோரின் நினைவு ஆண்டாகும்.

தமிழினம் தமிழ் மொழி தமிழர் பாரம்பரியத்தை பாதுகாப்பதட்காக தியாகங்கள் செய்த இவர்கள் நினைவுகளை ஏந்தி தமிழ் மக்களின் கனவுகளை ஏந்தி இந்த தமிழர் புத்தாண்டை தமிழர் விடுதலை ஆண்டாக மாற்ற நாம் எல்லோரும் பாடுபடுவோம் என்ற உறுதியை எடுத்துக்கொள்வோம்.

உலகத் தமிழர்கள் அனைவர்களுக்கும் எமது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

– தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

Comments Closed

%d bloggers like this: