புலம்பெயர்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நன்நாளில்…

தமிழ் இனத்திற்கென சிறப்பாக உள்ளதொரு பண்பாடு நன்றி பாராட்டுவது. தம்மை வாழவைக்கும் சூரியனுக்கு நன்றிப் பெருக்கோடு விழாவெடுத்து பொங்கலிட்டுப் படைத்து, அகமகிழ்வது தமிழர் பண்பாடுகடின உழைப்பின் அறுவடைக் காலத்தே, வயல் செழிக்கவும், வாழ்வு செழிக்கவும் அருள்பாலிக்கும் சூரியனை வணங்கி, வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில், உழைப்பின் பலனை நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் ஒரு விவசாயிக்கான நாளாயன்றி, மண்ணை நம்பியும் வானை நம்பியுமே வாழ்ந்த முன்னைத் தமிழனின் வழித்தொடராய் முழுத்தமிழனின் திருநாளே தைப்பொங்கல் நன்நாள்.வுழிபிறக்கும் என்ற நம்பிக்கையை முழுத்தமிழினமும் மனங்களில் நிறைக்கும் நாள் இது. தமிழீழ மக்களைப் பொறுத்தளவில், கடந்த பல தசாப்தங்களாக, சிறைப்பட்ட வாழ்வில் சிறப்பின்றிக் கழிந்த பொங்கல்களே கடந்துசென்றிருக்கின்றன.துன்பமும் துயரமும் அவலமும் ஆபத்தும் சூழ்ந்து நிற்கும் இன்றைய பொழுதுகளும், சிங்களத்தின் ஆக்கிரமிப்பும் எமக்கான பொங்கலுக்கு வழிவிடாது.

மாவிலை தோறணம் கட்டி, மாக்கோலம் இட்டு, மண் அடுப்பில், பானை வைத்து பொங்கலிட்டு, ஊர்உறவோடு, உண்டு மகிழ்ந்த பொற்காலங்களை, சிங்களத்தின் துப்பாக்கிகள் சூறையாடிவிட்டன.   நம்மை நாமே ஆளும் பொழுதொன்று சமைத்தால் மாத்திரமே, தமிழர்கள் மனம்பொங்கப் பொங்கலிடும் இனிய பொழுதொன்று தோன்றும்.

எங்களுக்கான இனிய பொங்கலைத் தொலைத்து, ஆண்டுகள் பல கடந்துவிட்டன. வழிபிறக்கும் என்ற நம்பிக்கைகள் மாத்திரம் எதையும் சாதிக்காது. வலிசுமக்கப் பாடுபட தயாராவோம். புத்துணர்ச்சியோடு, புதிய நம்பிக்கையுடன், புதிய தென்புடன், பதிய ஆண்டை எதிர்கொள்ள தைப்பொங்கல் திருநாளில் உறுதிகொள்வோம்.

மனஅழுக்குகளை நற்சிந்தனையின் உதவிகொண்டு, கழுவித்துடைத்தகற்றி, மனங்களைப் பண்படுத்தி, இலட்சிய விதைகளை விதைப்போம். வெற்றியை அறுவடை செய்வோம். இனிதான பொங்கலை அப்போது, உலகத் தமிழரெல்லாம் ஒன்றாகப் பொங்கி மகிழ்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழர் நடுவம் – பிரான்ஸ்