தமிழீழம்

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க இந்தியா உதவவேண்டும்!-கிருஷ்ணாவிடம் கூட்டமைப்பினர் கோரிக்கை.

இலங்கை இனப்பிரச்சினையின் தீர்வுக்கு இந்தியா உரிய அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவை இன்று இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் வரை பேச்சு நடத்தியது.

இதன்போது, இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கின்ற நிலையில் அங்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. எனவே குறித்த மாநிலங்களில் உள்ள மக்கள் சந்தோசமாக வாழ்கின்றனர்

இதனைப்போன்றே, இலங்கையிலும் தமிழர் பகுதிகளில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை இலங்கை அரசாங்கம் பகிர்வதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இருந்து படையினர் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கிலும் கிழக்கிலும் படையினரின் அத்துமீறல்களை கிருஷ்ணாவிடம் சுட்டிக்காட்டினர்.

அதேநேரம் இலங்கையின் ஜனாதிபதி காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படமாட்டாது என்று அறிவித்துள்ளமை குறித்தும் கிருஷ்ணாவின் கவனத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொண்டு வந்தனர்.

கடந்த ஒரு வருடகாலமாக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் ஏமாற்றமும் காலதாமதமுமே எஞ்சியுள்ளன. இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பதை எவ்வாறு நம்பமுடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பினர்.

இந்தநிலையில் தாம் நாளை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸை சந்திக்கும் போது இந்தவிடயங்கள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடவுள்ளதாக எஸ் எம் கிருஷ்ணா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.