சிறிலங்கா

சவீந்திர சில்வாவை பான் கீ மூன் நியமிக்கவில்லை என்கிறார் அவரது பேச்சாளர்.

ஐ.நா அமைதி நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நியமனத்தை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வழங்கவில்லை என்று அவரது பேச்சாளர் அறிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி, “மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஐ.நாவின் அமைதி நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு நியமித்தது ஐ.நா பொதுச்செயலர் அல்ல.

அவரை ஆசிய பசுபிக் குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகள் தான் இந்தப் பதவிக்குத் தெரிவு செய்தன என்று குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் சிறப்புக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளது குறித்த அனைத்துலக அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனிடையே இந்த நியமனம் தொடர்பாக ஐ.நாவிடம் இருந்து அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடப்படுவதற்கு முன்னதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவே கொழும்பிலுள்ள ஊடகங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றிய தகவலை அறிவித்துள்ளார் என்று கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.