அனைத்துலகம்

முஷாரப் பாகிஸ்தானுக்கு திரும்பினால் கைதாவார்: பாகிஸ்தான் அரசாங்கம்

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியான பர்வேஸ் முஷாரப் நாடு திரும்பினால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தனர் பிரதமர் யூஸுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் கிலானி, சி.என்.என். தொலைக்காட்சியுடன் பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்

‘உண்மையில் அவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு உள்ளது. பல தீவிர குற்றச்சாட்டுகள் உள்ளன. அவருக்கு எதிராக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. நிச்சயமாக அவர் நாடு திரும்பும்போது அக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும்.

இராணுவத் தளபதியாகவிருந்து புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய பர்வேஸ் முஷாரப் பின்னர் ஜனாதிபதியாக தெரிவானார்.தற்போது, அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் தலைவராகவுள்ள முஷாரப், கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டில் தங்கியுள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களுக்காக அவர் இம்மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு திரும்பப் போவதாக முஷாரப் அறிவித்திருந்தார். எனினும் அரசாங்கத்தின் கைது எச்சரிக்கையைத் தொடர்ந்து அவர் நாடு திரும்புவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் மொஹமட் அலி சயீவ் கூறியுள்ளார்.

முஷாரப்பை கைது செய்யவேண்டும் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் கடந்த திங்கட்கிழமை தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.