அதிகாரப் பகிர்வை வழங்க சிறிலங்காவுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துக! – புதுடில்லிக்கு ஆலோசனை!

Home » homepage » அதிகாரப் பகிர்வை வழங்க சிறிலங்காவுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துக! – புதுடில்லிக்கு ஆலோசனை!

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான அழுத்தங்களை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்படுத்துவதற்கு இந்தியா பங்களிப்பு வழங்க வேண்டிய தேவையுள்ளதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேசக் கற்கைகளுக்கான கல்லூரியின் பேராசிரியர் அனுராதா எம்.செனோய் தெரிவித்துள்ளார்.

‘தமிழ் மக்கள் வாழும் வடக்குக் கிழக்குப்பகுதிகளுக்கு அரசியல், பொருளாதார அதிகாரங்களுக்கான உத்தரவாதம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இவ்விகாரம் தொடர்பில் இந்தியா அதிகளவுக்கு ஆதரவான பங்களிப்பை வழங்க வேண்டும்.

சுய நிர்வாகத்துடன் 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வுக்கான அழுத்தத்தை இந்தியா சிறிலங்கா அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும். இந்த அழுத்தமானது மேலாதிக்கப் போக்கை கொண்டதோ அல்லது தலையீடு செய்யும் நடவடிக்கையோ அல்ல. ஆனால் தார்மீகமானதும் வழிகாட்டும் விதிமுறையுமாக இது உள்ளது’ என பேராசிரியர் அனுராதா எம்.செனோய் கூறியுள்ளார்.

இவ்விகாரம் தொடர்பில் பேராசிரியர் அனுராதா எம்.செனோயின் கருத்துகள் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ‘இலங்கை கொடுப்பதை உறுதிப்படுத்துங்கள்’ என்ற தலைப்பில் நேற்று பிரசுரமாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

‘இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயமானது எப்போதுமே முக்கியமான விடயமாக இருந்து வருகிறது. இந்த விஜயத்தை இலங்கையின் சகல சமூகங்களும், அரசியல் வட்டாரங்களும் மிக விழிப்புடன் அவதானிக்கின்றன.

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவின் வார்த்தைகள் குறித்தும், இந்தியாவின் சார்பாக கிருஷ்ணா தெரிவித்த உறுதிப்பாடுகள் தொடர்பாகவும் இந்தியா எவ்வளவுக்கு உறுதியாகப் பற்றிப் பிடிக்கும் என்பது குறித்து தமிழர்களும் ஜனநாயகவாதிகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்படும் என்று கிருஷ்ணா நம்புகிறார். அத்துடன் அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்ட இதய சுத்தியுடனான அரசியல் இணக்கப்பாட்டை இந்தியா எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் 13வது திருத்தச் சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வுகாணும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சாத்தியமான எந்த உதவியையும் இந்தியா வழங்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம் சமாதானத்தை ஏற்படுத்தவும், நம்பிக்கையை கட்டியெழுப்பவும் அந்நியப்படுத்தப்பட்டுள்ள சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் உண்மையாகவே செயற்பாடுகின்றதா?

அத்துடன் இடம்பெயர்ந்தோருக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் நீதி வழங்கவும் இந்த உள்நாட்டு யுத்தத்தில் காணாமல் போனோர் தொடர்பாகவும் கொழும்பு உண்மையாகவே செயற்படுகின்றதா?

சர்வதேச நெருக்கடிக்குழு, மனிதவுரிமைகள் கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சபை அமைப்புகள், இலங்கையின் ஜனநாயக, மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் பல மேற்கத்தேய நாடுகள் இலங்கையின் சமாதான முயற்சிகள் தொடர்பில் திருப்தி கொண்டதாக இல்லை.

தமிழ் இனப்படுகொலைக்கு பொறுப்பான குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதற்கான முயற்சிகள் எதையும் நல்லிணக்க ஆணைக்குழு மேற்கொள்ளவில்லை. இச்சூழ்நிலையில் பாதிக்கப்பட்டோரோ, இறந்தவர்களோ அல்லது காணாமல் போனோரோ நீதி கோர முடியுமா? அல்லது இழப்பீட்டையேனும் கேட்க முடியுமா?

மாகாண சபைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு விடயத்தில் 13வது திருத்தத்தைப் பொறுத்தவரை 1988இல் இது பிரகடனப்படுத்தப்பட்ட காலம் முதல் ஜனநாயகத்துக்கு எதிரான முறையில் ஆகக்குறைந்தளவுக்கு சிறுபான்மையினங்களுக்கான உரிமைகளுடன் பெரும்பான்மையினர் ஆட்சியென்றை ஜனநாயகத்துக்கு எதிரான கோட்பாட்டை கடைப்பிடிப்பது இயற்கையில் அத்தியாவசியமானதும் மரபு ரீதியானதும் என்ற அடிப்படையில் ஒற்றையாட்சி முறைமையையே இலங்கையின் ஆளும் வர்க்கம் விரும்புகிறது.

இந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. அரசியலமைப்பின் ஒற்றையாட்சி முறை பாதிக்கப்படாமல் தொடர்ந்திருக்க வேண்டும் என்ற கருத்தை இலங்கையின் உயர் நீதிமன்றம் கொண்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் திரும்பத் திரும்ப கூறுவது அமுலாக்கம் தொடர்பான சிறிய நம்பிக்கையையே ஏற்படுத்துகிறது.

உள்நாட்டு யுத்தத்தின் நீண்ட காலகட்டத்தில் 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிராத நிலையில் பெரும்பான்மை ஆதரவு இருக்கின்றது என்று நம்புகின்ற நிலையிலும் இந்தத் திருத்தத்தை தேசியத்துக்கு எதிரானது என்று கடுமையாக எதிர்க்கும் அணிகளைக் கொண்டுள்ள வெற்றிக்களிப்பில் இருக்கும் சிறிலங்கா அரசாங்கம் இதனை நடைமுறைப்படுத்துமா?

இலங்கையின் உள்மட்ட அரசியலில் பாரிய வகிபாகத்தை இந்தியா செலுத்துவது தெளிவானதாகும். வேறுபட்ட பாரம்பரியங்கள், கலாசாரத்தை கொண்டிருந்தாலும் தென்னிந்தியாவுடன் இலங்கைத் தமிழர்கள் இன ரீதியான பிணைப்பைக் கொண்டவர்கள். ஸ்திரமானதும் ஜனநாயக ரீதியானதும் ஆட்புல ஒருமைப்பாட்டைக் கொண்டதுமான இலங்கையையே இந்தியா விரும்புகிறது.

கடந்த கால மற்றும் எதிர்கால மோதல்கள் இந்தியாவுக்கு பாதிப்பையே ஏற்படுத்தின, இந்திய அமைதி காக்கும் படையின் துன்பியலான பயனற்ற வரலாறுகளும் ராஜீவ் காந்தி படுகொலையும், வெளியுறவுக் கொள்கையின் மனப்போக்கின் வரலாற்றில் எழுதப்படவேண்டியதாகும். ஆனால் தற்போதைய களநிலை யதார்த்தம் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஜனநாயக ரீதியான, சமஷ்டி முறையிலான மதச்சார்பற்ற தனது நிறுவனங்களாலேயே பல்வேறு நெருக்கடிகளுக்கு தன்னால் தீர்வு காணக்கூடியதாக இருக்கின்றது என்பதே தனது வெற்றி என்பதை இலங்கைக்கு இந்தியா வெளிப்படுத்த வேண்டியுள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் உரிமைகள் ஆழமான முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றை வரையறுக்கப்பட்ட காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டுமென ஏன் இலங்கையை இந்தியாவால் கேட்க முடியாது?

இப்பிராந்தியத்தில் சட்ட ரீதியாக தனது பலத்தை இந்தியா பயன்படுத்துமென உலகு எதிர்பார்க்கின்றது. அபிவிருத்தி உதவியாக பல மில்லியன்களை இந்தியாவால் கொடுக்க முடியுமாக இருந்தால் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஜனநாயக ரீதியான உரிமைகள் தொடர்பான பதிலளிக்கும் கடப்பாட்டுக்கும் இது பொருந்த வேண்டும். குறைவானது எதுவும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும்’ இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments Closed

%d bloggers like this: