தமிழீழம்

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் இருவர் சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களால் தாக்குதல்.

சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை யாழ்நகரின் சின்னக்கடை மீன்சந்தை பகுதியில் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய் எனும் தலைப்பிலான தமது கட்சியின் பிரச்சாரக் கூட்டத்திற்கான சுவரொட்டிகளை ஒட்டிய இ.சுதர்சன் மற்றும் மு.முருகானந்தன் ஆகிய இருவரே சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கப்பட்டவர்கள் கட்சியின் ஊடகவியளாளர் மாநாட்டில் முன்வைத்த முறைப்பாட்டில் தெரித்துள்ளதாவது, சகல அரச கைதிகளையும் விடுதலை செய் எனும் தலைப்பிலான கூட்டம் எதிர்வரும் 29ம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான சுவரொட்டிகளை கடந்த வியாழக்கிழமை யாழ்.சின்னக்கடை பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்தபோது எங்களை வழி மறித்த சிறிலங்கா படையினர் எதற்காக சுவரொட்டிகளை ஒட்டுகின்றீர்கள் என்று விசாரித்து உயரதிகாரி வருவாரென கூறி பல மணி நேரம் இருத்தி வைத்தனர். உயரதிகாரி என சொல்லப்பட்டவர் வந்து எம்மை விசாரித்தார்.

பின்னர் விசாரணைகள் முடிவுற்று விட்டதாக கூறி போக அனுமதித்தனர். அவ்வேளையினில் நாம் பின்தொடரப்படுவதை எமது உறுப்பினர்கள் கண்டுகொண்டபோது இதிலிருந்து தப்பி செல்ல நாம் முற்பட்ட வேளையினிலேயே மடத்தடி சந்தியினில் வைத்து சிவில் உடையினில் நின்றவர்களால் குறித்த இருவரும் தாக்கப்பட்டனர்.

தாக்குதலில் இருந்து தப்பிக்க எமது மோட்டார் சைக்கிளை கைவிட்டு ஓடினோம். அத்தோடு இத்தாக்குதலின்போது கைத்தொலைபேசி ஒன்றையும் கைவிட்டுள்ளோம். எம்மை தாக்கியவர்கள் சரளமாக தமிழிலேயே பேசினார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இறுதி யுத்த நடவடிக்கைகளின் போது சுமார் 11 ஆயிரம் போராளிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுள் ஆறாயிரம் பேர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதை விட கணக்கில் காட்டப்படாத இரகசிய தடுப்பு முகாம்களில் பலர் தடுதது வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி விடுவிக்கப்படவேண்டும். தமிழ்-சிங்கள தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணைந்து ஈழம்-சிறீலங்கா ஜக்கிய சோலிச கட்சியொன்றை உருவாக்குவதே உண்மையான தீர்வாகும்.

சிறிலங்கா அரசோ இராணுவத்தை பயன்படுத்தி தமிழ் பிரதேசங்களினில் இராணுவ ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாடுபடுகின்றதென அவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ். சிறிலங்கா காவற்துறையினரிடம் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அதன் மத்திய குழு உறுப்பினர் ம.தேவராஜா மற்றும் வடபிராந்திய அமைப்பாளர் ப.சம்பந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.