இந்தியா

ஜெயலலிதா போல் அடிக்கடி வாய்தா வாங்க மாட்டேன்; வழக்கை சட்டப்படி சந்திப்பேன்: மு.க.ஸ்டாலின்

முன்னாள் துணை முதல்-அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று உறவினர் இல்ல திருமண ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோவில் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் பணிகள் எதுவும் நடைபெற வில்லை. தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவதில் தான் அதிக அக்கறை காட்டப்படுகிறது. இதனை சட்டப்படி சந்திப்போம்.

தற்போது அவர்களது கட்சினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. தானே புயலால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் முறையாக சேரவில்லை. பசுமை வீடு திட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் மட்டும் தான் வழங்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சொன்ன கருத்தை நான் கூறியதால் என் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. இதனை சட்டப்படி சந்திப்பேன்.

ஜெயலலிதா போல் அடிக்கடி வாய்தா வாங்க மாட்டேன். அ.தி.மு.க. அரசு அறிவித்து உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம் முறையாக இயங்காது. இது பெயரளவில் மட்டுமே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.