சிறிலங்கா

ஆணைக்குழுவின் அறிக்கை முன்னதாகவே வெளியானதன் காரணமாகவே சத்தியசீலன் கடத்தப்பட்டார்

சிறிலங்கா பாராளுமன்றம் மற்றும் கொழும்பு மாநகரபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி வந்த சத்தியசீலன் பாக்கியராஜ் (வயது 34) என்பவர் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலை அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் கடந்த 22ஆம் திகதி 5.50 மணியளவில் இவர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடுவதற்கு முன்னர் இந்த அறிக்கை பாராளுமன்ற மொழிபெயர்ப்புப் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த அறிக்கையின் பிரதி, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைத்தமை குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேரில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த விசாரணைகளுக்கு அமையவே மொழிபெயர்ப்பாளர் சத்தியசீலன் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கடத்தல் திருகோணமலை சிறிலங்கா பொலிஸாருக்கு அறிவித்த பின்னர், அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சத்தியசீலன் காணாமல் போனமை குறித்து அவரது மனைவி திருகோணமலை சிறிலங்கா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும், முறைப்பாடு கிடைத்து 11 மணி நேரத்திற்குப் பின்னரே பொலிஸார் விசாரணைக்காக சென்றுள்ளனர்.