இந்தியா முக்கிய செய்திகள்

முத்துக்கு​மாருக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழர் எழுச்சி இயக்கத்தின​ர் கைது!

வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முத்துக்குமார் சாலையில் (ஆடோசு சாலை, சாஸ்திரி பவன்) கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர் எழுச்சி இயக்கத்தினர் வீரவணக்கம் செலுத்தி கைதானது அறிந்ததே.

அதன் தொடர்ச்சியாக தி.பி.2043, சுறவம் 15ஆம் நாளான (29-01-2012, ஞாயிற்றுக்கிழமை) இன்று காலை 10.45 மணி அளவில், வீரத் தமிழ்மகன் தீக்குளித்த முத்துக்குமார் சாலையில் (ஆடோசு சாலை) தமிழர் எழுச்சி இயக்கத்தினர் மூன்றாம் ஆண்டு வீரவணக்கம் செலுத்த சுமார் 60 பேர் ஊர்வலமாக வந்தனர்.

அப்போது தோழர்கள் முத்துக்குமார் படத்தை கையில் ஏந்தி மலர் தூவி வீரவணக்க முழக்கமிட்டனர். அனுமதியின்றி வீரவணக்கம் செய்த தோழர்களில் சுமார் 30 பேர் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது நிகழ்வுக்கு தலைமை ஏற்ற தமிழர் எழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் ப.வேலுமணி: தமிழக அரசிற்கு சில கோரிக்கைகள் முன்வைப்பதாக செய்தியாளரிடம் கூறினார். அவை:

1) ஆங்கிலேயர் பெயரில் இருக்கும் ஆடோசு சாலையின் பெயரை மாற்றி, தமிழினத்திற்காக தன்னுயிரையே ஈகம் செய்த வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் சாலை என்று பெயர் சூட்ட வேண்டும்.

2) வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் நினைவாக, சென்னையில் நினைவுத் தூண் எழுப்ப வேண்டும்.

3) மொழிப் போர் ஈகையர்களை போற்றுவது போன்று, வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் உள்ளிட்ட தமிழின ஈகையர்களையும் தமிழக அரசு சார்பில் போற்றப்பட வேண்டும்.

4) ஈழத் தமிழர்களுக்காகப் போராடிய அனைத்து இயக்கத் தோழர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.

மேற்க்கண்ட கோரிக்கையுடன் தமிழக முதல்வர் மற்றும் சென்னை மாநகர மேயர் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும், எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் கூறினார்.

தமிழன் உயிரை மயிராய் மதித்த இந்திய அரசை பழித் தீர்க்க போராட்டக் களத்திற்கு வாருங்கள்!