தமிழ் ஊடகவியலாளர்கள் மீது உலகப் போர் தொடுக்கிறார் பாதுகாப்புச் செயலர் கோட்டா

Home » homepage » தமிழ் ஊடகவியலாளர்கள் மீது உலகப் போர் தொடுக்கிறார் பாதுகாப்புச் செயலர் கோட்டா

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான போர் ஒன்றை சர்வதேச மட்டத்தில் தற்போது தொடுத்து உள்ளார் இலங்கைப் பாதுகாப்பமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் பலரும் அவர்கள் சார்ந்து நின்ற கொள்கைகளுக்காக கடந்த காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் கணிசமான தொகையினர் தமிழ் ஊடகவியலாளர்கள்.

மயில்வாகனம் நிமலராஜன், ஐயாத்துரை நடேசன், சிவராம்… என்று பட்டியலை சொல்லிக் கொண்டு போகலாம்.

படுகொலை அச்சுறுத்தல்கள் காரணமாக ஏராளமான ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி வந்து அஞ்ஞாதவாசம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

நோர்வேயில் இருந்து செயல்பட்டு வருகின்ற ஊடகவியலாளர்களில் ஒருவர் நடராஜா சேதுரூபன்.

இவருக்கு எதிராக சுவீடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு வழக்கு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார் ஏசியன் த்ரிபியூன் பத்திரிகை ஆசிரியர் கே. ரி. இராஜலிங்கம்.

இவ்வழக்கில் சாட்சி சொல்கின்றமைக்கு இலங்கையில் இருந்து பயணம் மேற்கொண்டு வந்திருக்கின்றார் இராணுவ உயர் அதிகாரி ஒருவர். இவர் யுத்த நாட்களில் கொமாண்டோ படைப் பிரிவில் கடமை ஆற்றியவர். இரண்டு சண்டைகளில் படுகாயம் அடைந்தவர். இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர்களில் ஒருவரான ரொஹான் குணரட்ணவின் அறிவுறுத்தலுக்கு அமைய இவ்வழக்குக்காக வந்திருக்கின்றார்.

இவர் இன்று சாட்சியம் சொன்னபோது பயங்கரவாதத்துக்கு எதிராக துப்பாக்கிகளாலும், தோட்டாக்களாலும் மாத்திரம் போராட முடியாது, ஆகவே உலக மட்டத்தில் கொள்கை வகுப்பாளர்களுடன் சேர்ந்து போராடப் போகின்றார், ஆகவேதான் இவ்வழக்கில் சாட்சி சொல்ல வந்தார் என்று முக்கியமாக தெரிவித்தார்.

சிவராம் என்கிற பத்திரிகையாளன் சுட்டுக் கொல்லப்பட்டு வீதியில் வீசப்பட்டார் என்றும் சிவராம் ஒப்படைத்துச் சென்ற கடமைகளை சேதுரூபன் தொடர்ந்து முன்னெடுத்தார் என்றும் சேதுரூபனை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர் என்று 2005 ஆம் ஆண்டில் இருந்து இலங்கைப் பத்திரிகைகள் காட்டி வந்தன என்று சாட்சியத்தில் மேலும் இவர் குறிப்பிட்டு இருந்தார்.

நோர்வே நாட்டவரான சர்வதேச உளவுத் துறை ஆய்வாளர் மற்றும் ஆலோசகரான உயர் அதிகாரி ஒருவர் இவ்வழக்கில் சேதுரூபன் தரப்பில் சாட்சியம் அளித்தார்.

சேதுரூபனை 2003 ஆம் ஆண்டில் இருந்து மிகவும் நன்றாக அறிவார் என்றும் சேதுரூபன் பயங்கரவாத தொடர்பு எதுவும் அற்றவர் என்றும் சாட்சியத்தில் முன்வைத்தார்.

இதே நேரம் தீபம் தொலைக்காட்சி உரிமையாளர் ஈஸ்வரனுக்கு எதிராகவும் இராஜலிங்கம் மேன்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.

இவ்வழக்கில் இராஜலிங்கத்துக்கு ஆதரவாகவும், ஈஸ்வரனுக்கு எதிராகவும் சாட்சி சொல்ல உள்ளார் இலங்கையில் இருந்து வந்திருக்கின்ற மேற்சொன்ன இராணுவ அதிகாரி.

Comments Closed

%d bloggers like this: