தமிழீழம் முக்கிய செய்திகள்

ரவுடிகளை, நாகரீகம் தெரியா மனிதர்களை தேர்தலில் போட்டியிட வைத்தால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் – டக்ளசை கேட்ட பட்டதாரி

“தண்ணியடித்துவிட்டு வீதிகளில் கிடக்கும் ரவுடிகளை, நாகரீகம் தெரியாத மனிதர்களை தேர்தலில் போட்டியிட வைத்தால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்.” என்று பட்டதாரியொருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் கேட்டுள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றையதினம் பெருமாள் கோவிலுக்கருகில் கூடிய பட்டதாரிகள் தமது நியமனம் தொடர்பில் அமைச்சரிடமும், ஆளுநரிடமும் மகஜர் ஒன்றை கையளிப்பதென தீர்மானித்திருந்தனர்.

இந்நிலையில் அங்கிருந்து ஊர்வலமாக மேற்படி அமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்று தமது மகஜரை கையளித்துள்ளனர். இதன்போது அமைச்சர் நீங்கள் உள்ளூராட்சித் தேர்தலில் எமக்கு வாக்களித்திருந்தால் உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும், என தெரிவித்துள்ளார்.

இதற்கு மிகவும் துணிச்சலாக பதிலளித்த பட்டதாரியொருவர் உங்கள் கட்சியின் சார்பில் குடித்துவிட்டு வீதிகளில் கிடக்கும் ரவுடிகளையும், கொஞ்சமும் நாகரீகம் தெரியாத மனிதர்களையும் போட்டியிட வைத்தால் எப்படி மக்கள் வாக்களிப்பார்கள் என கேள்வியெழுப்பினார்.

இதற்கு சமாளித்துக் கொண்ட அமைச்சர் எனக்கும், எனது கொள்கைகளுக்கும் தானே வாக்களிக்கச் சொன்னேன் என மழுப்பினார். ஆனால் தொண்டர்களே அப்படியிருக்கையில் தலைவர் எப்படியிருப்பார் என மேலும் சில பட்டதாரிகள் வெளிச் சொல்ல முடியாமல் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.

இதேபோல் குறித்த சந்திப்பின் பின்னர் பட்டதாரிகள் தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியினர், மேலும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி வடக்கு மாகாணத்தில் 179 பட்டதாரிகளுக்கு முகாமைத்துவ உதவியாளர் பதவி வழங்கப்படும் என உறுதியளித்ததுடன், 35வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகள் தனது அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

எனினும் இந்த வாக்குறுதிகள் பட்டதாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டுள்ளதுடன், 35வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளின் நிலை அதோகதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.