இலங்கை முக்கிய செய்திகள்

சுதந்திரத்தின் பொருள் அறியா சுதந்திர தினம் பாரீர்.- வலம்புரி

இலங்கைத் திருநாட்டின் 64ஆவது சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை மீட்சி பெற்றதனை ‘சுதந்திரம்’ என்று இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். சுதந்திரம் என்ற சொற்பதம் பற்றி ஆள்பவர்களும் அடக்கப்படுபவர்களும் கொண்டுள்ள பொருள் வித்தியாசமானது. ஆள்பவர்கள் அடக்கப்படுபவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்காமல் தடுப்பதை தங்கள் சுதந்திரமாக கருதுகின்றனர்.

அடக்கப்படுபவர்களோ ஆட்சியாளர்களிடம் இருந்து உரிமை பெறுவதை தமது சுதந்திரமாக நினைக்கின்றனர். இங்குதான் ‘சுதந்திரம்’ என்பது வேறுபட்டு நிற்பதைக் காண முடிகின்றது. இந்த வகையில் இலங்கையின் சுதந்திரத்தை எடுத்து நோக்கினால் கடந்த 64 ஆண்டுகளாக சுதந்திரத்தை கொண்டாடுபவர்கள் சுதந்திரத்தின் பொருளைப் புரிந்து கொள்ளாமல் அதனைக் கொண்டாடி வருகின்றனர்.

64ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் எனதருமை சிங்கள மக்களே! உங்கள் விருப்பம் தமிழ் மக்களும் இணைந்து இந்த சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்பதாக உள்ளது. நல்லது; அதைத்தான் நாங்களும் விரும்பு கின்றோம். அதேநேரம் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றோம். சுதந்திரம் கிடைத்து 64 ஆண்டுகளில் இந்த நாட்டின் பிரதமராக, ஜனாதிபதியாக இருக்கக் கூடிய சந்தர்ப்பத்தை தமிழ் மகன் யாரேனும் பெற்றுள்ளாரா? அல்லது அடுத்துவரும் காலங்களிலாவது தமிழன் இந்த நாட்டின் ஜனாதிபதியாக, பிரதம ராக வரக்கூடியதான மனநிலையை நீங்கள் கொண்டிருக்கின்றீர்களா? இந்த நாட்டின் ஆட்சி உரிமையில், ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய அதி உன்னத மான பதவிகளுக்கு தமிழர்கள் தகைமை அற்றவர்களாக இருந்தால், அவர்களுக்கு சுதந்திரம் உண்டென்று நீங்கள் கூறமுடியுமா?

வன்னிப் போரில் நடந்த யுத்தம், உங்கள் பார்வையில் பயங்கரவாதத்திற்கு எதிரானது என்ப தாக இருக்கலாம். ஆனால், அந்தப் போரில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள், அனுபவித்த இழப்புகளை நீங்கள் அறிந்திருப்பீர்களோ என்னவோ? ஆனால், வன்னி யுத்தம் பயங்கரவாதத் திற்கு எதிரான யுத்தம் என்று கூறிக்கொண்டு மிகப் பெரும் பயங்கரவாதத்தை தமிழ் மக்கள் மீது இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் நடத்திய போது, இன்றுவரை சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் ஓலைக் குடிசையில் வாழும் தமிழ் மக்களுக்கு உண்மையில் இது சுதந்திர தினமாக இருக்குமா என்பதை நீங்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். தேசியக் கொடியை ஏற்றுவது, தேசிய கீதத்தை இசைப்பது சுதந்திரமாகாது. இலங்கையில் பெப்ரவரி நாலாம் திகதி என்பது காலனித்துவ ஆட்சி அகன்றதை நினைக் கின்ற தினமே அன்றி, அது சுதந்திரதினம் அல்ல. சுதந்திர தினம் என்றால் அது சகல இனங்களும் உரிமை பெற்ற தினமாகவே இருக்க முடியும்.

நன்றி: வலம்புரி