இந்தியா

விஜயகாந்த் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் உட்பட தேமுதிக முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.

தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், சினிமா தயாரிப்பாளருமான இப்ராகிம் ராவுத்தர், இன்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

அ.தி.மு.க- தே.மு.தி.க கட்சிகளுக்கிடையே கடுமையான உரசல் இருந்து வரும் நிலையில், இப்ராகிம் ராவுத்தர் அதிமுக பக்கம் வந்துள்ள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

தேமுதிக சார்பில் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட்டவர் உட்பட தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் இன்று அதிமுக தலைமைக்கழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். விஜயகாந்த் நண்பரும் அதிமுகவில் இணைந்தார்.

இப்ராகிம் ராவுத்தரும், விஜயகாந்தும் ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். விஜயகாந்தை வைத்து ராவுத்தர் நிறைய படங்கள் தயாரித்துள்ளார். இவர் மதுரை தெற்குவாசலை சேர்ந்தவர்.

விஜயகாந்தை சினிமாவில் நடிக்கைவைப்பதற்காக மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தவர். சென்னையில் உள்ள ராவுத்தர் வீட்டில்தான் ஆரம்பகாலங்களில் விஜயகாந்த் சாப்பிட்டு வந்தார்.

பிரேமலதாவை விஜயகாந்த் கரம்பிடிக்க காரணமாக இருந்தவர் இப்ராகிம் ராவுத்தர். காலப்போக்கில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

சமீபத்தில் இப்ராகிம் ராவுத்தர் தாய் இறந்தபோது மதுரை வந்த விஜயகாந்த், பல்லக்கை சுமந்து சென்றார். உடலை புதைத்தபோது, ‘’எனக்கு சோறு போட்ட தாயே’’ என்று விஜயகாந்த் கதறி அழுதார்.

அண்மையில் இப்ராகிம் ராவுத்தரும், நடிகர் வடிவேலுவும் சந்தித்து, இருவரும் அதிமுகவில் இணையவது பற்றி ஆலோசித்ததாக செய்தி பரவின. இந்நிலையில் இப்ராகிம் ராவுத்தர் அதிமுகவில் இணைந்துள்ளார்.

இப்ராகிம் ராவுத்தர் காங்கிரசில் இணைந்து செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மூப்பனாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார் இப்ராகிம் ராவுத்தர்.