தமிழீழம் முக்கிய செய்திகள்

ஒரு ஊடகவியலாளனை நாட்டுப்பற்றாளனை இழந்த 3ம் ஆண்டு நினைவு நாள் இன்று.

தமிழ் மக்களின் மனங்களில் மட்டுமல்ல அனைத்து ஊடக நண்பர்களின் மனதிலும் நிலைத்து நின்று இன்றும் பேசப்படுகின்ற ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளரருமான புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டின் நினைவுநாள்.

யாழில் பிறந்து பொலநறுவை மன்னம்பிட்டியில் எட்டுவயது வரை வளர்ந்து பின்பு யாழ். மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியைத் தொடங்கி பின்பு யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரக்கல்வியை முடித்து யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ கல்வியைத் தொடர்ந்த வேளையிலிருந்தே தனது பட்டப்படிப்பில் அரசியலை ஒரு பாடமாக படித்துக்கொண்டிருந்தார்.

அப்போதே கவிதை சிறுகதைகள் கட்டுரைகள் என அவரின் எழுத்துக்காலம் தொடங்கியது. 1990ம் ஆண்டு அவரின் இரண்டாவது தம்பி விடுதலைப்புலிகளுடன் தன்னை இணைத்துகொண்டிருந்தான். 1995ம் ஆண்டு கப்டன் சிந்துஜனாக அவரது தம்பி மண்ணிற்குள் விதையானான். அவனின் நினைவாக அவர் எழுதிய நினைவுக் குறிப்பில் ‘இன்று நீ சொன்றுவிட்டாய் நாளை நான் உன்னைத் தொடர்ந்து வருவேன். நீ நிம்மதியாக உறங்கு’ என்று…

1995 யாழ். இடப்பெயர்வினூடாக வன்னியில் கால்பதித்தவர் தன் இறுதிக்காலம் வரை தமிழ்மண்ணுக்காய் உழைத்தவர். 14 ஆண்டுக்குள் தன் எழுத்தூடாக அனைவரினதும் மனங்களிலும் நிலைத்து நிற்கின்றார். தேசவிடுதலைக்காக அவர் செய்தவைகள் இப்போதும் அழியாது மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கிறது. எல்லோரையும் மதிக்கும் நற்பண்பு பக்குவம் அவரிடம் நிறைந்திருந்தது. அவர் முதல் முதல் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட ‘ஆதாரம்’ சஞ்சிகையில் தனது வேலையைத் தொடங்கி பின்பு ஈழநாடு ஈழநாதம் பத்திரிகைகளில் அரசியல் களநிலவரம் விமர்சனம் போன்றவற்றை பு.சிந்துஜன் பு.சத்தியமூர்த்தி விவேகானந்தன் ஹம்சத்வனி என பல புனைப்பெயர்களில் எழுதத் தொடங்கியிருந்தார்.வானொலிக்கும் தன்னால் முடிந்த பங்களிப்பை ஆற்றினார். களத்திலே நின்றவர்களுக்கு உதவியாக தானும் முழுமையாக ஈடுபட்டு ஒவ்வொரு மாதத்திலும் ஒருகிழமை பணிக்கு செல்வார். அப்போது அவர் ஒரு நிரந்தர ஆஸ்துமா நோயாளி. குளிசை இல்லாது அவரால் இயங்கமுடியாதிருந்த நிலையிலும் மழைக் காலப்பகுதி என்றாலும் அவர் தனது பணிக்கு சொல்வார். அவருக்கு முல்லைத்தீவு கல்வித்திணைக்களத்தில் அரசாங்க வேலைகிடைத்திருந்தது. அங்கு சிறந்த முகாமையாளராக தன்பணி செய்துகொண்டிருந்த வேளைகளில் எல்லாருக்கும் தன்னால் முடிந்த உதவிகள் செய்துகொடுப்பதில் முன்னிற்பவர். கல்விச்சமூகம் இவர்மீது அளவுகடந்த மதிப்பைக்கொண்டிருந்ததை கண்டுகொள்ள முடிந்தது. பின்னாளில் சுகாதாரத் திணைக்களத்தில் தன்பணிதொடங்கி அதனூடாக அவர் மக்களின் தேவையறிந்து ஓயாது உழைத்து வறிய மக்களின் குறைநீக்கியதால் அவர்கள் ஒவ்வொருவரின் வீட்டுப்பிள்ளையாக நின்று பேசப்பட்டவர். நிறைய இளம் ஊடகவியலாளர்களுக்கு ஊடகக் கல்வியை ஆரம்பித்து பல்துறை சார்ந்தவர்களின் அறிமுகத்தை ஏற்படுத்தி அவர்களின் கருத்துக்கள் ஊடாக புடம்போடப்பட்டு உருவாக்கிய ஊடகவியலாளர்கள் மனதில் நிலைத்து நிற்கின்றார். ‘எழுகலை இலக்கியப் பேரவை’ ஒன்றை அமைத்து வன்னியில் வெளிவந்த படைப்புக்களை புத்தகமாக்கி வெளியிட்டதில் அவரின்

பணிநீண்டிருந்தது. 18.06.2005 அன்று திருமணம் நடைபெற்றது.ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார்.
வன்னிப்பெருநிலப்பரப்பு எதிரியால் விழுங்கப்பட்டுக்கொண்டிருந்த பொழுது அது. எறிகணைகள் மக்களின் உயிர்குடித்துக்கொண்டிருந்த பொழுது அது. அவர்களின் குடும்பம் மூங்கிலாற்றில் வந்திருந்த பொழுது அது. அங்கு இருக்கமுடியாது குண்டுகள் விழுந்து வெடித்துக்கொண்டே இருந்தது. அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட சுதந்திரபுரத்திற்கு மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அங்கு இடம் பார்க்கச் சென்றவர் திரும்பி உடையார்கட்டுச் சந்திக்கு வந்தபோது நூற்றுக்கும்மேற்பட்ட எறிகணை அந்த இடத்தை நோக்கி வந்து வெடித்துக் கொண்டிருக்க மக்கள் எவருமே இல்லாது இருந்தபோதும் தான் காப்பெடுத்தால் தமது குடும்பம் இருக்கு மிடத்திற்கு ஆமிவந்து விடுவான் என்று நினைத்துவிட்டு மடிந்துபோன மாவீரர்களை மனதில் நினைத்துக்கொண்டு துவிச்சக்கரவண்டியை வேகமாக மிதித்துக்கொண்டு வந்ததாக பதுங்குகுழியைவிட்டு தலைகாட்ட முடியாது இருந்த அவர்கள் குடும்பத்துக்குச் சொன்னாராம். தன்னுடைய வாழ்வு முடிவடையப்போகிறது என்று அவரது உள்ளுணர்வு உணர்த்தியதாலோ என்னவோ இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்த வழிகளில் எல்லாம் காணும் உறவுகளுக்கு சண்டை தீவிரமடையுது கவனம் பிள்ளைகள். செல்வருகுது என்றால் விழுந்துபடுங்கள் இழப்புகளைத் தவிருங்கள் என்று கூறிக்கொண்டே வந்தார். அதுமட்டுமல்லாது தனது மனைவியிடமும் ‘இந்த நிமிடத்திலிருந்து எதுவும் யாருக்கும் நடக்கலாம். அப்படி எனக்கு எதாவது நடந்தால் நீ அழுது கொண்டிருக்கவேண்டாம். அடுத்த கட்டத்தை நோக்கி பிள்ளையோடு நகரவேண்டும். உம்மில எனக்கு நம்பிக்கை இருக்கு. நீர் எடுத்து வைக்கும் எந்த முடிவாகினும் பிள்ளையைச் சார்ந்ததாகவே இருக்கட்டும். எல்லாரிடமும் ஆலோசனைகேளும். ஆனால் முடிவு உம்முடையதாகவே இருக்கவேண்டும். பிள்ளையை நானில்லாட்டிலும் நீர் வளர்ப்பீர் என்றதால எனக்கு நிம்மதியாக இருக்கு. சமூகம் எதையும் சொல்லும் நீர் பயப்படத்தேவையில்லை. துன்பப்படும்போது கண்டுகொள்ளாத சமூகம் மனிதன் தானாக முன்னேறி வரும்போது அதைக்கண்டு பொறுக்காது முதுகில்குத்தவே முயலும். நீர் நிமிர்ந்து நில்லும். பிள்ளையையும் நிமிரடைய வையும். ஒவ்வொரு காலடி எடுத்து வைக்கும் போதும் நிதானமாக நடவும்…’ என்று முதல் நாள் சொன்னவர் அடுத்தநாள் உயிர் பிரிந்தது.

12.02.2009 அன்று காலை எங்கோ விழுந்து வெடித்த எறிகணையின் சிறு துண்டு அவரின் இதயத்தை துழைத்தது.
உடனுக்குடன் செய்தி சொன்ன செய்தியாளனின் துயர்மிகுசெய்தி மக்களை துயரில் ஆழ்த்தியது. நல்ல ஊடகவியலாளனாக நல்ல நண்பனாக வாழ்ந்துகாட்டிய சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளனாய் இன்றும் நல்லதொரு வழிகாட்டியாய் தமிழ்மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.