சிறிலங்கா

டக்ளஸ் மீதான வழக்கு தீர்ப்பு எதிர்வரும் செவ்வாய்! – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு விசாரணைக்காக, அவரை இந்தியாவுக்கு கொண்டு வர உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் முடிந்துள்ளதால், வரும் 21ம் நாள் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

சென்னை சூளைமேட்டில், 1986ம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் திருநாவுக்கரசு என்பவர் பலியானார். இருவர் காயமடைந்தனர்.

அப்போது சென்னையில் தங்கியிருந்த, ஈபிஆர்எல்எவ் இயக்கத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 10 பேர் மீது, சூளைமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் முன்னிலையாகாத, டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், டக்ளஸ் தேவானந்தா, சிறிலங்கா சென்று, அமைச்சராக உள்ளார்.

இந்தநிலையில் அவர் மீதான பிடியாணையை நடைமுறைப்படுத்தக் கோரியும், சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்தியா கொண்டு வரவும், வழக்கை சந்திக்கவும் உத்தரவிடக் கோரி,சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டவாளர் புகழேந்தி மனுத் தாக்கல் செய்தார்.

இம்மனுவை, நீதிபதிகள் மோகன்ராம், அக்பர்அலி அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனு மீதான சட்டவாளர்களின் வாதம், நேற்று முடிவடைந்தது. இதையடுத்து, வரும் 21ம் நாள் உத்தரவு பிறப்பிப்பதாக,உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.