சிறிலங்கா முக்கிய செய்திகள்

ஐ.நா. அமைதி காக்கும் படை கூட்டத்தில் பங்குபற்றுவதிலிருந்து சவேந்திர சில்வா தடுக்கப்பட்டார்.

நேற்று புதன்கிழமை நடந்த ஐ.நா. அமைதி காக்கும் உயர்மட்டக் குழுக்கூட்டத்தின் செயற்பாடுகளில் பங்குபற்றாதவாறு சிறிலங்கா மேஜர் ஜெனரல், சவேந்திர சில்வா தடுக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா. தலைமையதிகாரியான பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட விசேட ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் புதன்கிழமை நடந்தபோது சிறிலங்கா மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அங்கு போயிருந்தார். அவருடன் யாரும் பேசவில்லை. அவருக்கு ஆவணங்கள் எதுவும் கொடுக்கப்படவும் இல்லை என இராஜதந்திரிகள் கூறியுள்ளனர்.

ஐ.நா.வின் அமைதி காக்கும் படைக்கு ஆசிய பசுபிக் நாடுகள் சவேந்திர சில்வாவை நியமனம் செய்தபோது மனித உரிமைக்கான பல குழுக்கள் ஆட்சேபம் தெரிவித்தன. இந்த விசேட ஆலோசனைக் குழு கூட்டத்துக்கு தலைமை வகித்த ஒரு கனேடிய அதிகாரி இந்த குழுவின் செயற்பாடுகளில் சவேந்திர சில்வா பங்குபற்றமாட்டார் என தனது உரையின்போது கூறியிருந்தார்.

2009ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தத யுத்தத்தின்போது சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தார்  சில்வா என்பதை மனித உரிமைகள் குழுக்கழும் ஐ.நா.  நிபுணர்களும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த லூயிஸ் பிறெச்செட் ஏனைய குழு அங்கத்தவர்களுடன் கலந்தாலோசித்த பின், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் சென்று அவர் கூட்டத்தில் இருப்பது ஏற்புடையது அல்ல எனவும் ஆலோசனைக் குழுவின் நோக்கத்துக்கு உதவக்கூடியது அல்ல என கூறி அவரிடம் கூட்டத்தில் பங்குபற்றக் கூடாது எனவும் கூறியுள்ளார்.

முன்னர் ஐ.நா. பிரதி செயலாளர் நாயகமும் உயர்மட்ட கனேடிய இராஜதந்திரியுமான பிறெட்செட்டை இக்குழுவுக்கு தலைமை தாங்குமாறு பான் கீ மூன் நியமித்தார்.

பிறெச்செட் இவ்வாறு செய்திராதுவிடின் இந்த விசேட ஆலோசனைக் குழு கலைந்து போயிருக்கும். சவேந்திர சில்வா குழுவில் இருப்பதை ஒருவரும் விரும்பவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.

இதுவரை சவேந்திர சில்வா, இது பற்றி கருத்து எதனையும் இன்னும் கூறவில்லை. ஆனால் சவேந்திர சில்வா அங்கத்துவ நாடுகளால் நியமிக்கப்பட்டவர். இதனால் எதுவும் செய்வதற்கு இல்லை என ஐ.நா. தலைமையகம் முன்பே கூறிவிட்டது.