புலம்பெயர் முக்கிய செய்திகள்

Asian Tribune இணையத்தளம் குற்றவாளி- சுவிடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு.

Asian Tribuneஇணையத்தளம் 20ஆயிரம் அமெரிக்க டொலர்களை நடராசா சேதுரூபனுக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டும் என சுவிடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏற்கனவே சுவீடன் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கே.ரி.இராசசிங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இதனை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் சுவிடன் மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து குற்றவாளி என்று சுவிடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The World Institute for Asian Studies என்ற நிறுவனமே Asian Tribune என்ற இணையத்தளத்தை நடத்தி வருகிறது. இந்த இணையத்தளத்தின் நிறைவேற்றுகுழு உறுப்பினர்களாக எகெமினி எபிவோக், மகிந்தபால, தயாகமகே, கொடித்துவக்கு, பிலிப் பெர்னாண்டோ, சுமன லியனாராச்சி, லீல் பத்திரன, ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நோர்வேயில் உள்ள நடராசா சேதுரூபன் கொழும்பு ரெலிக்கிராப் ஆங்கில இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கையில் 2003, 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் கே.ரி.இராசசிங்கம் தன்னிடம் தொடர்பு கொண்டு நோர்வே அரசாங்கத்திற்கு எதிராகவும், இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவுக்கு எதிராகவும் செயற்படுவோம் என கோரினார் என்றும் நோர்வே அரசாங்கத்திற்கு எதிராகவோ நோர்வே அரசாங்கம் மேற்கொள்ளும் சமாதான முயற்சிகளுக்கு எதிராகவே தான் செயற்பட மாட்டேன் என மறுத்து விட்டதாகவும் சேதுரூபன் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த கே.ரி.இராசசிங்கம் தன்னை பயங்கரவாதி என்று எழுத ஆரம்பித்தார் என சேதுரூபன் தெரிவித்துள்ளார். இவ்வாறு எழுதுவதை நிறுத்துமாறு பல மின்னஞ்சலை ஏசியன் ரிபூனுக்கு அனுப்பியதுடன் நோர்வே, லண்டன், சுவீடன் பொலிஸிலும் முறைப்பாடு செய்தேன். இதன் பின்னர் சட்டநடவடிக்கை எடுத்தேன் என சேதுரூபன் தெரிவித்துள்ளார். கே.ரி.இராசசிங்கம் ஏசியன் ரிபூன் இணையத்தளத்தில் சேதுரூபனுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதால் சேதுரூபன் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தி இத்தீர்ப்பை வழங்குவதாக மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.