இந்தியா

மாலத் தீவிலும் தமிழக மீனவர் கைது

சர்வதேச கடல் எல்லையை மீறி தங்கள் கடல் எல்லையில் புகுந்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை மாலத் தீவு கடலோரக் காவற்படையினர் கைது செய்திருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுவிடுவர் என்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.

இவர்கள், இரவிபுத்தேன்துறையை, முள்ளுத்துறை ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு மீன் பிடி படகில் கடந்த 23ம் தேதி மீன் பிடிக்கச் சென்றதாகவும், இரண்டு நாட்களில் கரைக்குத் திரும்பவேண்டியவர்கள் அவ்வாறு திரும்பாத நிலையில் மாலத்தீவு கடலோரக் காவற்படையினரிடமிருந்து படகின் உரிமையாளரின் மனைவிக்கு கன்னியாகுமரி மீன்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வந்ததாக துத்தூர் பஞ்சாயத்துத் தலைவரான ஜான் அலோஸியஸ் கூறுகிறார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், ”மீனவர்கள் மாலத்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள செய்தி மாநில அரசிற்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது, மத்திய அரசுக்கும் தெரியப்படுத்தப்பட்டிருக்கும, மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிடும்” என்றார்.

மேலும் அவர், மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்துள்ள தகவல்படி மாலத்தீவில் குமரி மீனவர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள், கடல் எல்லையைத் தாண்டும்போது வழமையாக அத்தகைய சம்பவங்கள் நிகழத்தான் செய்யும், தவறுதலாக எல்லை கடந்திருக்கிறார்கள் என்பதை விசாரித்து உறுதி செய்துகொண்டு, பிறகு அவர்களை விடுதலை செய்துவிடுவார்கள் என தெரிவித்தார்.