ஆரம்பமாகியது உரிமைகோரல் போட்டி!! "அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரக் காரணம் நானே"-சுமந்திரன்

Home » homepage » ஆரம்பமாகியது உரிமைகோரல் போட்டி!! "அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரக் காரணம் நானே"-சுமந்திரன்

ஜெனிவா சென்று அனைத்துலக இராஜதந்திரிகளுக்கு மதிய விருந்தளிப்பதாலோ, வெறும் மூன்று நிமிட உரைக்காக பிறிதொரு மனிதஉரிமை அமைப்பை நாடி நிற்பதாலோ எமக்கு விடிவு கிடைத்து விடப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லாதது குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகளுக்கு விடையளிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“சிறிலங்காவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் கிடைக்காத அங்கீகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கிறது.

இந்தியா முதல் அமெரிக்கா வரை அனைத்து நாடுகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டன.

இந்த அங்கீகாரத்தின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் கடந்த ஒக்டோபர் மாதம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நிலைகள் குறித்து விளக்கியமையே இன்று சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரக் காரணம். அதன் அடுத்த கட்டமாக கடந்த ஜனவரி மாதம் மூன்று நாட்கள் கனடாவுக்குச் சென்றிருந்தேன்.

அதன்போது ஒருநாள் வொஷிங்டன் சென்று அமெரிக்க இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடிய போது, தமிழ் மக்களுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கையை இராஜதந்திரிகளில் ஒருவரான அம்மையார் ஒருவர் தெரிவித்திருந்தார்.

அதன்பின் சிறிலங்கா வந்த அமெரிக்காவின் இரு இராஜதந்திரிகளும் முதலில் சந்தித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தான்.

இவ்வாறு கூட்டமைப்பு மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கைகள் தான் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வரக் காரணமானது.

ஜெனிவா சென்று அனைத்துலக இராஜதந்திரிகளுக்கு மதிய விருந்தளிப்பதாலோ, வெறும் மூன்று நிமிட உரைக்காக பிறிதொரு மனித உரிமை அமைப்பை நாடி நிற்பதாலோ எமது விடிவு எம்மை அடையாது.

நாம் இங்கிருந்து கொண்டே அனைத்துலகத்தை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறோம். இங்கிருந்தவாறே சிறிலங்கா அரசிற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவோம்.“ என்று அவர் கூறியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் கூட்டமைப்பு சார்பில் கருத்துக்களை வெளியிட்டனர்.

Comments Closed

%d bloggers like this: