இந்தியா

இலங்கைப் பிரமுகர்கள் வர தமிழக அரசிடம் அனுமதி பெறவேண்டும்! பிரதமருக்கு ஜெ. கடிதம்!!

தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமல் இலங்கைப் பிரமுகர்களை தமிழகத்திற்குள் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. மேலும் இலங்கைப் பிரமுகர்கள் அடிக்கடி தமிழகம் வருவதையும் மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

இலங்கைத் தமிழர்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசு நடந்து கொண்டு வரும் விதம் குறித்து தமிழக மக்கள் முழுமையாக அறிந்துள்ளனர்.

ஈழத் தமிழர்கள் கெளரவமாகவும், கண்ணியத்துடனும் வாழ இலங்கை அரசு வழி செய்யவில்லை என்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தாகும். மேலும் சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்தை இலங்கை அரசு தமிழர்களுக்கு வழங்கவில்லை என்பதும் தமிழகத்தின் கருத்தாகும்.

இந்தப் பின்னணியில் இலங்கையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் தனிப்பட்ட பயணமாக, மாநில அரசுக்கு எந்தவிதத் தகவலையும் கூட தராமல் அடிக்கடி வந்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.

அப்படிப்பட்ட ஒரு வருகையின்போது ராஜபக்சேவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் என்பவர், 9.1.2012 மற்றும் 10.1.2012 ஆகிய நாட்களில் ராமேஸ்வரம் வந்துள்ளார். அப்போது அவர் சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.

அவரது வருகை குறித்து இந்திய அரசிடமிருந்தோ, இலங்கை அரசிடமிருந்தோ எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்க முடியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளரும் எழுதியுள்ள கடிதம் எனது பார்வைக்கு வந்தது. அந்த கடிதத்தின் தொணி, அதில் பிரயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைகள், தேவையில்லாதது, நியாயமற்றது, ஏற்றுக் கொள்ள முடியாதது.

இலங்கையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், விஐபிக்கள் மாநில அரசுக்குத் தகவல் கொடுக்காமல் வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் கடந்த 16.9.2011, 24.2.2012 ஆகிய நாட்களில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

எனவே, தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, இலங்கையைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை மத்திய அரசு ஊக்கம் தரக் கூடாது, ஊக்குவிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.