கட்டுரைகள் சிறப்புச்செய்தி

யார் இந்த சரத் பொன்சேகா? – நிராஜ் டேவிட்

1990ம் ஆண்டு ஜுலை மாதம் 10 திகதி. சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக ஒரு மிக முக்கிய தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்த தினம். சிறிலங்காவில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சிpலங்கா ஆனையிறவுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருந்தார்கள்.

ஒரு பிரதான இராணுவ முகாம் மற்றும் ஆறு சிறிய முகாம்களைக் கொண்ட அந்த பாரிய இராணுவத் தளத்தில், சிறிலங்கா சிங்க ரெஜமன்ட் இன் ஆறாவது பட்டாலியனைச் சேர்ந்த 600 படைவீரர்கள் தங்கியிருந்தார்கள். அந்தப் பாரிய படைத்தளத்தைத்தான் விடுதலைப்புலிகள் அந்த நேரத்தில் முற்றுகையிட்டிருந்தார்கள்.

ஆனையிறவு சிறிலங்காப் படைத்தளம் மீதான முற்றுகைக்கு விடுதலைப் புலிகள் சூட்டியிருந்த பெயர்: ஆகாய-கடல்-வெளிச் சமர்.  விடுதலைப் புலிகளுடைய வரலாற்றில் முதன்முறையாக பெயர் சூட்டி ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளும் அளவிற்கு, அந்தச் சமர் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுப் படை அணியான சார்ஸ் அன்டனி படைப்பிரிவு அந்தத் தாக்குதலில் பிரதான பங்கு வகித்திருந்தது. விடுதலைப் புலிகளின் சிறப்புத் தளபதி பால்ராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலி உறுப்பினர்கள் அந்த முற்றுகைச்சமரை மேற்கொண்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் சொந்தத் தயாரிப்பான கவச வாகனங்கள், பசிலன் 2000 என்ற பீரங்கிகள், பாபா செல்கள் இவற்றுடன் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள், என்று ஏராளமான ஆயுதத் தளபாடங்களை அந்தச் சண்டையில் பயன்படுத்தி, ஆனையிறவுத் தளத்திற்கு பாரிய அச்சுறுத்தலை விடுத்திருந்தார்கள் விடுதலைப் புலிகள்.

இரண்டாம்கட்ட ஈழ யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து, கொக்காவில், யாழ் கோட்டை, கொண்டைச்சி போன்ற இராணுவ முகாம்களை இதேபோன்ற முற்றுகையினூடாகவே வெற்றிகொண்ட விடுதலைப் புலிகள், ஆனையிறவுத் தளத்தின் மீதும் அதேவகையான முற்றுகையை மேற்கொண்டிருந்தார்கள்.

உழவு இயந்திரங்கள், புல்டோசர்களில் இருப்புத் தகடுகளைப் பொருத்தி, திறந்த வெளிகளில் பெரும் எண்ணிக்கையிலான போராளிகளை முன்நகர்த்தக்கூடிய கவசவாகனங்களை புலிகள் தயாரித்திருந்தார்கள்.

ஆனையிறவின் வடக்குப் பகுதிகளில் தொடர் தாக்குதல்களை நடாத்தி, முன்னேறுவது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டு, ஆனையிறவின் தென்பகுதியான பரந்தன் வழியாகவே பிரதான முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் புலிகள் திட்டமிட்டிருந்தார்கள். தளபதி பால்ராஜ் தலைமையிலான சார்ள்ஸ் அன்டனி படைப் பிரிவு தென் பகுதியினூடான நகர்வினை வெற்றிகரமாக மேற்கொள்ள ஆரம்பித்தது.

விடுதலைப் புலிகள் தமது ஆரம்பக்கட்ட தாக்குதலில் ஆனையிறவுப் படைத்தளத்தின் தென்பகுதியில் அமைந்திருந்த சுற்றுலா விடுதியைக் கைப்பற்றிப் பலமாக நிலையெடுத்திருந்தார்கள். ஆனையிறவுப் படைத்தளத்தின் இரண்டாவது முகாமான உப்பளம் அலுவலக முகாம் மீதான தாக்குதலைத் தொடுத்தபடி, விடுதலைப் புலிகள் தாம் கைப்பற்றிய பகுதிகளைப் பலப்படுத்திக்கொண்டிருந்த அதேவேளை, மற்றொரு தந்திரோபாயத் தாக்குதலைத் திட்டமிட்டிருந்தார்கள் புலிகளின் தளபதிகள்.

ஆனையிறவுத் தளத்தின் பிரதான முகாம் பகுதியில் இருந்து உப்பளம் அலுவலக முகாமிற்கு வழங்கப்படக்கூடியதான வளங்கல்களைத் தடுக்கும் நடவடிக்கையில் சார்ள்ஸ் அன்டனி படை அணியின் ஒரு சிறப்புக் கொமாண்டோ அணி ஈடுபட்டது. மேஜர் பாலா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை கிட்டத்தட்ட ஒரு கரும்புலித் தாக்குதல் நடவடிக்கையின் பாணியிலேயே மேற்கொள்ளப்பட்டது.

இப்படியான பின்னணியில், 1990ம் ஆண்டு ஜுலை மாதம் 13ம் திகதி மாலை 7 மணிக்கு, மேஜர் ரெட்டி தலைமையிலான புலிகளின் அணிகள், உப்பளம் அலுவலக முகாம் மீதான தாக்குதலை ஆரம்பித்தன. அந்த முகாமின் பல காவலரண்களைக் கைப்பற்றி, ஒரு பலமான நிலையில் முற்றுகையைப் புலிகளின் அணிகள் இறுக்கியிருந்த நிலையில், ஆனையிறவின் வடமுனையில் உக்கிரமான தாக்குதல்களைத் தொடங்கினார்கள் விடுதலைப் புலிகள்.

பின்நாட்களில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வனே அந்த நேரத்தில் புலிகளின் யாழ் மாவட்டத் தளபதியாகச் செயலாற்றிக்கொண்டிருந்தார். தளபதி தினேஷ் என்று அழைக்கப்பட்ட தமிழ்செல்வனின் தலைமையிலான அணிகள் ஆனையிறவின் வடக்குப் பகுகளினூடான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த, சிறிலங்காவின் ஆனையிறவுத் தளம் என்பது எந்த நேரத்திலும் புலிகளின் கைகளுக்குள் வீழ்ந்துவிடக்கூடிய ஒரு நிலைக்குள் வந்தது.

நடுங்கியது சிறிலங்கா தலைமை

விடுதலைப் புலிகளால் வீழ்த்தப்பட்டுவிடக்கூடிய ஆபத்து நிலையில் அணையிறவுக் கூட்டுப்படைத்தளம் இருந்தது. பலமுனைகளாலும் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், ஆனையிறவுப் படைத்தளத்தின் மீது இறுக்கப்பட்ட புலிகளின் முற்றுகையைக் கண்டு சிறிலங்காத் தலைமை நடுங்கியது.

ஆனையிறவுத் தளம் மாத்திரம் விடுதலைப் புலிகளின் கைகளில் சிக்குண்டுவிட்டால், அதனால் ஏற்படக்கூடிய இராணுவ மற்றும் அரசியல் பேரிழப்பை நினைத்துச் சிங்களத் தலைமை நடுநடுங்கியது.

அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலை. அடுத்து என்ன செய்வது என்றும் புரியாத ஒரு தர்மசங்கடமான நிலை.

அவசரக் கூட்டம்

சிறிலங்காவின் அரசியல் தலைமை ஒரு அவசரக் கூட்டத்தைக் கூட்டியது. ஜனாதிபதி பிரேமதாச தலைமையிலான அந்தக் கூட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் வடபிராந்தியக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, யாழ் பிராந்திய இராணுவ அதிகாரி பிரிகேடியர் விஜய விமலரெட்ன, முப்படைகளின் தளபதி, இராணுவத் தளபதி உட்பட பல இராணுவ அரசியல் உயரதிகாரிகள் பங்குபற்றினார்கள்.

(1991 ஆண்டு மார்ச் மாதம் 2ம் திகதி அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உதவிப்பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ன கொல்லப்பட்டிருந்த நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது).

என்ன விலைகொடுத்தாவது, ஆணையிறவுத் தளத்தைக் காப்பாற்றியேயாகவேண்டும் என்ற உத்தரவு சிறிலங்காவின் முப்படைகளுக்கும் வழங்கப்பட்டது. ஆனையிறவுத் தளத்திற்கு மேலதிக படையினரை அனுப்பி அந்தத் தளத்தையும், அந்த தளத்தில் இருந்த படையினரையும் காப்பாற்றியாகவேண்டும் என்கின்ற கட்டளை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டது.

ஆனையிறவை மீட்கும் நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளப்படவேண்டும் என்ற ஆலோசனையை வழங்குவதற்காக வெளிநாட்டு நிபுனர்களை உள்ளடக்கிய ஒரு விசேட குழுவையும் பிரேமதாசா அங்கு தயார் நிலையில் வைத்திருந்தார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவின் ஆலோசனையில் பெயரில் பாரிய தரையிறக்கத்தை ஆனையிறவை அண்டிய கடற்கரை ஒன்றில் செய்வது என்ற முடிவு அங்கு எடுக்கப்பட்டது.

அந்த சிறப்பு நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 10,000 சிறப்புப் படையினர் ஈடுபடுத்தப்படவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. சிறிலங்காவின் போரியல் வரலாற்றைப் பொறத்தவரையில் அது மிக மிகப் பாரிய ஒரு படை நடவடிக்கை. கடல் வழியாக இத்தனை பெரும் படையினரை தரையிறக்கிய வரலாறு சிறிலங்காவின் சரித்திரத்தில் அதுவரை நடைபெற்றிருக்கவில்லை. அதுபோன்ற பாரிய தரையிறக்க முன் அனுபவமும் சிறிலங்கா படைத்தரப்பிற்கு இருக்கவில்லை.

அதுவும், விடுதலைப் புலிகளின் வாய்களுக்குள் படையினர் தரையிறக்கப்படவேண்டும். அந்த நடவடிக்கையில் சிறிய தவறு ஏற்பட்டுவிட்டாலும், சிறிலங்காவின் இராணுவத்தினது மட்டுமல்ல ஒட்டுமொத்த சிறிலங்கா தேசத்தினதும் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகிப் போய்விடும்.

எனவே அந்த ஒப்பரேசனை மிகக் கவனமாகச் செய்யவேண்டும். நேர்த்தியாகச் செய்யவேண்டும். வெற்றிகரமாகச் செய்யவேண்டும். அந்த நேரத்தில் படைத்துறைத் தலைமை மத்தியில் இருந்த மிக முக்கியமான கேள்வி இதுதான்:

யாரால் இந்தத் துணிகரமான செயலை கவனமாக, நேர்த்தியாக, வெற்றிகரமாகச் செய்யமுடியும்? அந்த நடவடிக்கைக்கு யார் தலைமை தாங்குவது? சிறிலங்காவின் உயரதிகாரிகள் அனைவரது வாய்களில் இருந்தும் எந்தவிதத் தயக்கமும் இன்றி உடனடியாக வெளிவந்த பெயர்: சரத் பொன்சேகா.

அந்த நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தில் சாதாரண கேணல் தரத்தில்தான் பணியாற்றிக்கொண்டிருந்தார் சரத் பொன்சேகா. எனினும் மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, பிரிகேடியர் விஜய விமலரட்ண தலைமையிலான அந்த தரை இறக்க நடவடிக்கையின் முதலாவது தரையிறக்கப் படை அணியை தலைமைதாங்கி நடாத்திச் செல்லும் பொறுப்பு கேணல் சரத் பொன்சேகாவிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

சிறிலங்கா இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட், கெமுனுவாட்ச் படைப்பிரிவு, கஜபா ரெஜிமென்ட், ஆட்டிலறிப் படைப்பிரிவு போன்றவற்றில் இருந்து 10,000 படையினர் தெரிவுசெய்யப்பட்டு திருகோணமலைக் கடற்படைத்தளத்தில் இருந்து கப்பல்களில் ஏற்றப்பட்டார்கள்.

கேணல் சரத் பொன்சேகா தலைமையிலான 3வது பிரிகேட் படையினர் முதலாவது தரையிறக்கத்தைச் செய்வதாகவும் அதனைத் தொடர்ந்து, மற்றைய படையினர் தொடர் தரையிறக்கங்களை மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

எடித்தரா, விக்கிரம போன்ற போர்க் கப்பல்கள் உட்பட ஏராளமான பீரங்கிப்படகுகள், தரையிறக்கப் படகுகள், உலங்குவானூர்திகள், அந்த நேரம் சிறிலங்கா விமானப்படையிடம் இருந்த Sia Marchetti SF-260  என்ற குண்டுவீச்சு விமானங்கள் உட்பட சிறிலங்கா இராணுவத்தின் அனைத்து வளங்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.
ஆனையிறவுத் தளத்திற்கு கிழக்காக சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள வெற்றிலைக்கேணி கடற்கரையில் 1990ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி சரத் பொன்சேகா தலைமையிலான சிறிலங்கா இராணுவத்தினர் தரையிறங்கினார்கள்.

விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்ப்புக்களையும் முறியடித்துக்கொண்டு அங்குலம் அங்குலமாக நகர்ந்து, 1991ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி சரத் பொன்சேகா தலைமையிலான மீட்புப் படையினர் ஆனையிறவை வந்தடைந்தார்கள்.

சுமார் 18 நாட்கள் நடைபெற்ற இந்த மீட்பு நடவடிக்கையில் 600 விடுதலைப் புலிகள் வரையில் வீர மரணம் அடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தார்கள்.

சரத் பொன்சேகா

General Gardihewa Sarath Chandralal Fonseka  என்ற ஜெனரல் சரத் பொன்சேகா 1950ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி, தென் இலங்கையின் அம்பலாங்கொடை என்ற இடத்தில், பீட்டர் மற்றும் பியவதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை அம்பலங்கொட தர்மசோகா மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லுரிகளில் மேற்கொண்ட சரத் பொன்சேகா, தனது 20வது வயதில் சிறிலங்கா இராணுவத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

நல்ல விளையாட்டு வீரனான சரத் பொண்சேகா, இராணுவத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த திறமையான ஒரு அதிகாரியாக வளர்ந்து, சிறிலங்கா இராணுவத்தில் எந்த அதிகாரியும் பெறாத உயர் பதவியைப் பெற்றுச் சாதனை படைத்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையிலும் சரத் பொன்சேகா என்ற இராணுவ அதிகாரி இராணுவரீதியாக புலிகளுக்கு மிகவும் மோசமான சேதத்தினை ஏற்படுத்திய ஒரு அதிகாரியாகவே, பல ஆண்டுகளாக இருந்து வருகின்றார்.

தமிழ் மக்களை மிகவும் வெறுக்கு ஒரு அதிகாரியாக சிங்கள இராணுவ வீரர்கள் மத்தியில் பிரபல்யமாகியிருந்த சரத் பொன்சேகா, தமிழ் மக்களின் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுத ரீதியிலான போராட்டத்தை நசுக்குவதில் மிகவும் மும்முரமாகச் செயற்பட்டு, இறுதியில் அதில் அவர் வெற்றியும் கண்டிருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க முக்கியமான நடவடிக்கைகளில் சரத் பொண்சேகாவின் பங்கு என்பது, இன்றியமையாததாகவே இருந்து வந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் அவர்களுக்கு பின்னடைவுகளையும், பாதிப்புக்களையும், இழப்புக்களையும் ஏற்படுத்திய சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளில் ஏதோ ஒரு விதத்தில் சரத் பொன்சேகாவின் பங்கு இருந்ததாகவே பதிவுகள் தெரிவிக்கின்றன.

யாழ் கோட்டை முற்றுகை

1990ம் ஆண்டு 2ம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து யாழ் கோட்டையை விடுதலைப் புலிகள் முற்றுகையிட்டு, அங்கு நிலைகொண்டிருந்த சிறிலங்கா படைவீரர்களைச் சரணடையும்படி கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

கோட்டையில் அடைபட்டிருந்த படைவீரர்கள் வான் வழியான வினியோகத்தை மாத்திரம் நம்பியிருந்த நிலை. ஒரு கட்டத்தில் கோட்டையை அண்டிய பகுதிகளில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுத்தி வான் வழியான வினியோகத்தையும் புலிகள் முற்றாக ஸ்தம்பிக்கச் செய்திருந்தார்கள்.

உணவு, மருந்து, வெடி பொருட்கள் இல்லாமல் மிகுந்த நெருக்கடியை கோட்டையில் இருந்த சிங்களப் படையினர் எதிர்கொண்டிருந்தார்கள். கோட்டை முற்றுகை இடம்பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் புலிகளிடம் சரணடைந்த 900 சிறிலங்காப் பொலிசார் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட நிலையில், கோட்டையில் இருந்த படையினரைப் புலிகளிடம் சரணடையும்படியும் கூறமுடியாத சங்கடநிலை சிறிலங்காப் படைத் தலைமைக்கு.

கோட்டையில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினரின் கதை அனேகமாக முடிந்துவிட்டதென்றே அனைவரும் எண்ணியிருந்தார்கள். அந்த நேரத்தில், கோட்டையில் முற்றுகைக்குள் சிக்கியிருந்த படையினரை மீட்கும் அதிரடி நடவடிக்கை ஒன்று கேணல் சரத் பொன்சேகா தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

அந்த நடவடிக்கைக்குப் பெயர் ஒப்பரேஷன் திரிவிட பலய (Operation Trivida Balaya). பலாலியில் இருந்து கடல் வழியாகப் புறப்பட்டு காரைநகரில் ஒரு தரையிறக்கத்தை மேற்கொண்டு, அதன் பின்னர் காரை நகரில் இருந்து மண்டைதீவு வழியாக குறுகலான பாலம், கடல்நிரேரி வழியாக யாழ்கோட்டையை அடைந்து, கோட்டையையும், அதனைச் சூழ உள்ள பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதன் பின்னர் கோட்டையில் இருந்த படை வீரர்களை வெளியேற்றுவது.- இதுதான் அந்த படை நடவடிக்கையின் நோக்கம்.

மிகவும் சவாலான, அதேவேளை ஆபத்தான திட்டம்.

கொஞ்சம் பிசகினாலும் ஆயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தினரையும், பெருமளவு ஆயத தளபாடங்களையும் இழக்கவேண்டிய அபாயம் அந்தத் திட்டத்தின் பின்னணியில் இருந்தது. ஆனால், சரத் பொன்சேகாவின் தலைமையில் அந்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இதேபோன்று சரத் பொண்சேகா பங்குபற்றி தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கு விளைவித்த சேதங்கள் என்று, இலங்கைப் போரியல் வரலாற்றில் ஒரு பெரிய பட்டியலே இருக்கின்றது. காரணங்கள்

பொதுவாகவே அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக முக்கியமான நடவடிக்கைகள் ஏதாவது மேற்கொள்ளவேண்டுமென்றால், அந்த நடவடிக்கைகளுக்குத் தலைமைதாங்குவதற்கு சரத் பொன்சேகாவின் பெயரே சிறிலங்கா இராணுவ வட்டாரங்களில் பிரேரிக்கப்படுவது வழக்கம். அதற்கு, இரண்டு காரணங்கள் உண்டு.

முதலாவது சரத் பொன்சேகா மிகவும் திறமையான இராணுவ அதிகாரி. நேர்மையானவர். இரண்டாவது காரணம்: சரத் பொன்சேகா தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை அடக்குவதில் மூர்க்கத்தனத்தை வெளிக்காண்பிப்பவர்.

விடுதலைப் புலிகளை, அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர், புலிகளின் அனுதாபிகள் விடயத்தில் எந்தவித இரக்கத்தையும் வெளிக்காண்பிக்காமல் எந்த எல்லைக்கும் சென்று புலிகளைத் தண்டிக்கும் குணம் படைத்தவர் சரத் பொன்சேகா.

தமிழ் மக்கள் தொடர்பில் மிகுந்த வெறுப்பையும், தமிழ் மக்கள் உரிமை கேட்கத் தகுதியற்றவர்கள் என்கின்ற நிலைப்பாட்டையும் தனதாகக் கொண்டவர்தான் சரத் பொன்சேகா. எனவே, தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை அடக்குவது என்று வந்ததும், மிக மூர்க்கமாக, முரட்டுத்தனமாக தனது வீரத்தை வெளிப்படுத்தும் ஒரு குணத்தைக் கொண்டவர்- சரத் பொன்சேகா.

இதனால்தான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றதும், ’’கூப்பிடு சரத் பொண்சேகாவை’ என்று, சிறிலங்காவின் இராணுவ மற்றும் அரசியல் தலைமைகள் நிலைப்பாடு எடுத்துவிடும்.

கரவெட்டி படுகொலைகள்

1985ம் ஆண்டு மே மாதம் 9ம் திகதி யாழ் குடாவில் ஒரு சம்பவம் நடைபெற்றது.

யாழ் கரவெட்டிப் பிரதேசத்தில் வீதி உலா சென்றுகொண்டிருந்த சிறிலங்கா இராணுவ அணி மீது விடுதலைப் போராளிகள் நடாத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் சிறிமால் மெண்டிஸ் என்பவர் கொல்லப்பட்டார்.

இது யாழ் குடாவில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இராணுவ முகாமை விட்டு வெளியே வருவதற்கு அவர்கள் தயங்கினார்கள்.

அந்த நேரத்தில், வல்வெட்டித்துறை இராணுவ முகாமில் சிங்க ரெஜிமெனட் படைப்பிரிவு நிலைகொண்டிருந்தது. அந்தப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் சரத் பொன்சேகா. அப்பொழுது அவர் மேஜர் தர அதிகாரியாகக் கடமையாற்றிக்;கொண்டிருந்தார்.

மேஜர் தர அதிகாரியான சிறிமால்; மெண்டிஸ் மீதான தாக்குதலால் யாழ் குடாவில் நிலைகொண்டிருந்த மற்றைய இராணுவ அதிகாரிகள் வெளியே நடமாட அச்சம் கொண்டிருந்த நிலையில், மேஜர் சரத் பொண்சேகா தனது படைப்பிரிவின் சிலரை அழைத்துக்கொண்டு துணிகரமாக வெளியே கிளம்பினர்.

உடுப்பிட்டி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை போன்ற பிரதேசங்கள் அடுத்தடுத்து பாரிய சுற்றிவளைப்பிற்கு உள்ளாகின. அந்தப் பிரதேசங்களை ஒவ்வொன்றாகச் சுற்றி வளைத்த சிறிலங்கா இராணுவத்தினர் இளைஞர்கள், மாணவர்கள் என்று பலரைக் கைது செய்தார்கள்.

அப்படிக் கைதுசெய்யப்பட்ட சுமார் 75 தமிழர்கள் பல்வேறு இடங்களில் வைத்து அன்றைய தினம் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

சர்வதேச மன்னிப்பச் சபையின் கூற்றுப்படி, 1985ம் ஆண்டு மே மாதம் 9ம் திகதி சிறிலங்கா இராணுவம் வல்வெட்டித்துறையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்ட 40 தமிழர்கள், வல்வெட்டித்துறை வைத்தியசாலையை அண்டிய இரண்டு இடங்களில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.

இதில் 12 இளைஞர்கள் தங்களுடைய கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் வரிசையில் நிற்கவைத்து தலைகளில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். மேலும் 25 தமிழர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சனசமூக வாசிகசாலைக்குள் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடைத்து வைக்கப்பட்ட நிலையில் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதன் பின்னர் அந்த சனசமூக நிலையம் தீவைத்து எரியூட்டப்பட்டது.

சிறிலங்கா இராணுவ மேஜர் மீதான தமிழ் போராளிகளின் தாக்குதலுக்குப் பழி தீர்க்கும் முகமாகவும், இராணுவ மேஜர் மீதான தாக்குதலால் சிங்களப் படைவீரர்கள் மனங்களில் ஏற்பட்டிருந்த அச்ச நிலையை நீக்கவும், தமிழ் மக்கள் மனங்களில் ஒரு உளவியல் பீதியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும்- இந்தக் கோராமான படுகொலைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்தப் படுகொலைகள் அந்த நேரத்தில் வல்வெட்டித்துறையில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரியாகக் கடமையாற்றிக்கொண்டிருந்த மேஜர் சரத் பொன்சேகாவின் நேரடி வழிநடத்தலில் நடைபெற்றது என்பதுதான்.

சிறிலங்காவின் இராணுவ அதிகாரியான சரத் பொண்சேகா என்பவர், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை அடக்குவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஒரு அதிகாரியாகவே சிறிலங்கா இராணுவத்தில் இருந்து வந்திருக்கின்றார்.

ஒரு இரணுவத் தந்திரோபாயம் என்று வருகின்ற பொழுது, அப்பாவிகள், பொதுமக்கள் என்ற எந்தவித இரக்கமும் இல்லாமல் சிறிலங்கா இராணுவத்தின் நலன்- வெற்றி இவைகளை மாத்திரம் கவனத்தில் எடுத்து அவர் பயணித்த வரலாற்றைத்தான் பதிவுகளில் காணக்கூடியதாக இருக்கின்றது.

சரத் பொன்சேகாவிடம் இயல்பாகவே காணப்பட்ட தமிழ் விரோத உணர்வு, விடுதலைப் போராட்டத்தை அடக்கும் மூர்க்கம்- என்பன, முக்கியமான இராணுவ நடவடிக்கைகளை சரத் பொண்சேகா தலைமையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை, சிங்களத் தலைமைகள் மத்தியில் ஏற்படுத்திவிட்டிருந்தது.

சிறிலங்காவின் இராணுவத் தளபதியாகப் பதவியேற்றதும், ஈழ யுத்தத்தை தான் தன்னைத் தொடர்ந்து பதவிக்கு வரும் தளபதிக்கு ஒப்படைத்துச் செல்லமாட்டேன் என்று சூளுரைக்கும் அளவிற்கு, தமிழ் மக்களின் போராட்டத்தை அடக்குவதில் அதிக தீவிரம் வெளிப்படுத்தி, அதில் வெற்றியையும் கண்டிருந்தவர்- சரத் பொன்சேகா.
தமிழர்களை வெறுத்தார்

தனது இராணுவ வரலாற்றில் சரத் பொண்சேகா என்கின்ற மனிதன் மிகவும் வெற்றிகரமான ஒரு இராணுவ அதிகாரியாக வலம் வந்ததற்கு அவரது திறமை, மூர்க்கம், கட்டுப்பாடு, நேர்மை என்பன காரணங்களாகக் கூறப்பட்டாலும், தமிழ் மக்களை அவர் மிக மோசமாக வெறுத்ததுதான் தமிழர் போராட்டத்தினை அவர் வெற்றிகொள்வபதற்கு பிரதான காரணமாக இருந்தது என்று சில ஆய்வாளர்கள் அபிப்பிராயம் வெளியிட்டு வருகின்றார்கள்.

சரத் பொன்சேகா என்கின்ற இராணுவ அதிகாரி தமிழர்களை மிக அதிகம் அதிகமாக வெறுத்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக சரத் பொன்சேகாவின் வெற்றிக்குப் பின்னணியாக இருந்த காரணம் பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் தென் இலங்கை ஊடகம் ஒன்று கேள்வி ஒன்றினை சரத் பொன்சேகாவிடம் எழுப்பியிருந்தது.

அதற்குப் பதிலளித்த சரத் பொன்சேகா, தான் சிறுவயதில் தனது பெற்றோருடன் அம்பாறை மாவட்டத்தில் வசித்த பொழுது, அங்கு தமிழர்களால் தனது பெற்றோர் பாதிக்கப்பட்டதாகவும், அந்தப் பாதிப்பே தான் தமிழர்களை வெறுக்கக் காரணமாக இருந்ததாகவும், தனது அந்த வெறுப்பினை தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக முழு அளவில் தான் பிரயோகித்ததாகவும், புலிகளுக்கு எதிரான தனது வெற்றிக்கு இதுவும்; ஒரு காரணம் என்றும் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்ல, விடுதலை வேண்டிப் போராடும் அருகதை தமிழ் மக்களுக்குக் கிடையாது என்கின்ற நிலைப்பாட்டையும் தனதாகக் கொண்ட ஒருவராகத்தான் அவர் சிங்களப் படையினர் மத்தியில் இருந்து வந்திருக்கின்றார்.

2008ம் ஆண்டின் நடுப்பகுதியில் சிறிலங்காவின் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா படையினர் மத்தியில் ஆற்றியிருந்த உரை ஒன்று, அந்த நேரத்தில் தமிழர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நாடு சிங்கவர்களுக்கே உரியது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனாலும் இங்கு சிறுபான்மையினரும் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களை நாம் எமது மக்களாகவே பார்க்கின்றோம். இந்த நாட்டில் 75வீதத்திற்கும் அதிகமாக இருக்கு சிங்களவர்களாகிய எமக்கு எமது தேசத்தைக் காப்பாற்றும் பொறுப்பு இருக்கின்றது.

நாங்கள் ஒரு பலமான இனம். எங்களுடன் சிறுபான்மையினத்தினர் சேர்ந்து வாழ முடியும். ஆனால் எங்களை அவர்கள் அடக்கி ஆழ நினைப்பதை எங்களால் அனுமதிக்க முடியாது” – இவ்வாறு சரத் பொன்சேகா உரை நிகழ்த்தியிருந்தார்.

இதே கருத்தினை 2008ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23ம் திகதி வெளியான கனடாவின் நஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு (National Post Newspaper of Canada)  அவர் வழங்கியிருந்த செவ்வியிலும் தெரிவித்திருந்தார்.

2009வம் வருட இறுதியில் அமெரிக்கா வந்திருந்த சரத் பொன்சேகா, அங்கு சிங்களப் புத்திஜீவிகள் மத்தியில் உரை நிகழ்த்தும் பொழுதும், இதே பொருள்படக் கருத்து வெளியிட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2008ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இலங்கையில் ஒரு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியும் மற்றய தமிழ்நாட்;டுத் தலைவர்களும் முன்வைத்திருந்தது சம்பந்தமாக 21.12.2008 அன்று கொழும்பில் இருந்து வெளியான சண்டே ஒப்சேவர் (Sunday Observer)  பத்திரிகைக்குச் செவ்வி வழங்கியிருந்த சரத் பொன்சேகா தமிழ் நாட்டுத் தலைவர்கள் வெறும் அரசியல் கோமாளிகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவை எல்லாமே தமிழர்களை, தமிழர் சார்ந்த அமைப்புக்களை, தமிழ் தலைமைகளை சரத் பொன்சேகா ஒரு தாழ்ந்த நிலையில், வெறுப்புடன் கூடிய மனப்பான்மையுடன், நோக்கிவந்தார் அல்லது அபிப்பிராயம் கொண்டிருந்தார் என்கின்ற யதார்த்தத்தையே விளக்கி நிற்கின்றது.

ஈழத் தமிழர்களின் கதாநாயகன்?

கடந்த 21.05.2012 அன்று சரத் பொன்சேகா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சரத் பொன்சேகாவிற்கு ஒரு கதாநாயகன் அந்தஸ்து வழங்கப்பட்டு தமிழ் ஊடகங்களில் வெளியாகி வருகின்ற செய்திகளைப் பார்த்தபோதுதான் சரத் பொன்சேகா பற்றிய ஒரு பார்வையை ஈழத்தமிழரின் கோணத்தில் இருந்து நாம் பார்த்தாகவேண்டிய தேவையை நான் உணர்ந்தேன்.

தமிழ் தேசியம் பற்றிய தெளிவான பார்வையைக் கொண்டவரும், இலங்கையில் தற்பொழுது வசித்து வருபவருமான எனது நண்பர் ஒருவர் தனது Face Book இல் சரத் பொன்சேகாவின் விடுதலை பற்றிய செய்தியை தனது status ஆகப் பதிவு செய்துவைத்திருப்பதைப் பார்த்ததும், ஈழத் தமிழர் விடயத்தில் சரத் பொன்சேகா என்ற நபரின் வகிபாகம் பற்றிய ஒரு பதிவை மேற்கொண்டேயாக வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்.

ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் பற்றி சரத் பொன்சேகாவிடமும் பேசுங்கள் என்று சில புலம் பெயர் அமைப்புக்களின் தலைமைகளிடம் சில மேற்குலக இராஜதந்திரிகள் ஆலோசனை வழங்கியதாக அறிந்த பொழுது, ஒரு தமிழ் ஊடகவியலாளனாக எனது பார்வையை வெளிப்படுத்தியேயாக வேண்டிய கடமையை உணர்ந்தேன்.

இலங்கையின் அரசியலில் இன்று தவிர்விக்கமுடியாதவராகி விட்டுள்ள சரத் பொன்சேகா பற்றிப் பிரஸ்தாபிப்பதோ, அவருடன் அரசியல் இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணுவதோ தவறு என்று நான் இங்கு கூறவரவில்லை.

சரத் பொன்சேகாவுடன் நாம் தாராளமாக அரசியல் பேசலாம்.  அவர் மீதான பழிவாங்கல்களுக்காக நாம் பச்சாத்தாபப்படலாம்.  அவரைப் பற்றி செய்திகளையும், கட்டுரைகளையும் தாராளமாக எழுதலாம். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் ஜனாதிபதித் தேர்தலில் நின்றால் அவருக்கு நாம் வாக்கும் அளிக்கலாம். இவைகளெல்லாம் தவறல்ல.

ஆனால் ஒரு முக்கிய விடயத்தை எமது மனங்களில் ஆழப் பதித்துக்கொண்டு இவைகளை மேற்கொள்ளுவதுதான் நல்லது.

ஈழத் தமிழர்களையும், அவர்களின் அரசியல் உரிமைகளையும், அந்த உரிமைகளை அடைவதற்கான ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டங்களையும் மிக மோசமாக வெறுக்கின்ற ஒரு சிங்களத் தலைவரே சரத் பொன்சேகா என்பதை கருத்தில் வைத்துக்கொண்டு சரத் பொன்சேகா சம்பந்தமான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளுவதே சாலச் சிறந்தது என்பதுதான் எனது தாழ்மையான அபிப்பிராயம்.

சரத் பொன்சேகா என்கின்ற நபர் சிங்களவர்களின் ஒரு மீட்பராக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அவர் ஈழத் தமிழர்களின் ஒரு கதாநாயகன் அல்ல.

நவீனகாலத் துட்டகெமுனுக்களாகத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள மகிந்த மற்று கோத்தபாயக் கூட்டணிக்கு நிகராக ஈழத் தமிழருக்கு கேடு விளைவித்த ஒரு சிங்களத் தலைவரே சரத் பொன்சேகா.

இந்த யதார்த்தங்களை உள்மனத்தில் வைத்துக்கொண்டு வெளியே நகர்வெடுப்பதுதான் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் வெற்றிகரமான அரசியலாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.

nirajdavid@bluewin.ch