தமிழீழம்

புதுக்குடியிருப்பில் வெடிபொருள் வெடித்ததில் மூன்று பிள்ளைகளின் தாய் படுகாயம்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் கோம்பாவில் பகுதியில் நேற்று வெடிபொருள் வெடித்தத்தில் குடும்பப்பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கோம்பாவில் நான்காம் வட்டாரம் அரசடிப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் குப்பைகளை கூட்டி தீயிடுகையிலேயே நேற்றைய தினம் குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்துச் சிதறியதில் மூன்று பிள்ளைகளின் தாயான அசோக்குமார் மனோரஞ்சிதம் (37வயது) என்ற பெண் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தினை அடுத்து காயமடைந்த பெண் முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பிரதேசங்களில் முற்றாக கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாக இராணுவத்தினர் உறுதியளித்ததையடுத்தே மக்கள் அப்பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பரவலாக வெடிபொருட்களது வெடிப்புச் சம்பவங்கள் வன்னியில் இடம்பெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் மிகுந்த அச்ச நிலையினைத் தோற்றுவித்திருக்கின்றது.

ஏற்கனவே அண்மையில் பளைப்பகுதியினில் இதே போன்றதொரு வெடி விபத்தினில் பச்சிளங் குழந்தைகள் இருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.