இந்தியா

ஈழப் பிரச்சினையை உலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவே டெசோ மாநாடு!- கருணாநிதி

ஈழப் பிரச்சினையை உலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவே டெசோ மாநாடு விழுப்புரத்தில் நடத்தப்படவுள்ளது என்றார் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற தனது 89-வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசியதாவது:

இலங்கையில் தமிழீழம் மலர வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு அரசியல் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வலியுறுத்துவோம். தமிழ் ஈழம் அமைவதுதான் எனது வாழ்வின் லட்சியம். நான் உயிர் விடுவதற்குள் தமிழ் ஈழம் அமைவதைக் காண விரும்புகிறேன்.

அப்படி தமிழ் ஈழம் அமைந்து, அதற்கு அடுத்த கணமே நான் இறந்தாலும் மகிழ்ச்சிதான். நான் உயிரிழந்தால்தான் தமிழீழம் அமையும் என்றால், அதற்காக உயிரை விடவும் நான் தயார்.

ஈழம் மலர, உலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல டெசோ அமைப்பு சார்பில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி விழுப்புரத்தில் மாநாடு நடத்தவுள்ளோம்.

திமுக ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஏதோ இன்றைக்கு நேற்றைக்கு நடத்தியது அல்ல. தமிழ் மொழியைக் காக்க, மொழியின் தன்மானத்தை காக்க அன்று முதல் இன்று வரை போராடப்படுகிறது என்றார் கருணாநிதி.

மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.