நில அபகரிப்பிற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!

Home » homepage » நில அபகரிப்பிற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!

யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்குக் கிழக்கில் இயல்புநிலை உருவாகியுள்ளதாகவும், இராணுவத்தின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து வருவதாகவும் கூறி சர்வதேச சமூகத்தினை ஏமாற்றிவரும் சிறீலங்கா அரசானது மறுபுறத்தில் இராணுவத் தேவைக்காகவென தமிழர் தாயகத்திலுள்ள தனியார் மற்றும் அரச காணிகளை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இது பற்றிய தகவல்கள் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.

சிறீலங்கா அரசினது இந்த இராணுவ மயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் அதாவது தமிழ்த் தேசத்தை இல்லாமல் செய்வதனூடாக தமிழர்களது மண்ணை முழுமையாக சிங்கள மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாகவே இந்த இராணுவ மயமாக்கும் வேலைத்திட்டமும் அமைந்துள்ளது. இந்த நிலப்பறிப்பு நடவடிக்கையானது சிறீலங்கா அரசினால் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக ஆரம்பக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலப்பறிப்பு மற்றும் சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகள் மூலம் அப்பிரதேசத்தின் குடித்தொகையின் வீதாசாரத்தினை முற்றாக மாற்றியமைத்துள்ளனர். இச்செயற்பாடானது ஆங்கிலேயர்கள் தீவை விட்டு வெளியேறியதிலிருந்து தமிழ் இளைஞர்களது ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும்வரை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

ஆயுதப்போராட்டம் தீவிரமடையத் தொடங்கிய 1970களில் இருந்து 2009 மே மாதம் வரையான காலப்பகுதியில் இந்த நில ஆக்கிரமிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆயுதப் போராட்டம் 2009 மே மாதத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் மீண்டும் சிங்களதேசம் முழு வீச்சோடு சிங்கள மயமாக்கல், பௌத்தமயமாக்கல், நிலப்பறிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 6 ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அந்த வேலைத்திட்டம் இன்று வடக்கிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள தேசத்தின் இந்த செயற்பாடுகள் அனைத்தும் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது ஒழித்தல் என்ற ஓர் இலக்கினை நோக்கியே நடைபெறுகின்றன. இவ்வாறான நோக்கில் செயற்படும் சிங்கள தேசததின் இந்த வேலைத்திட்டத்தினை முறியடிப்பதற்கான ஒரே வழி தமிழ்த் தேசத்திற்கான அரசியல் அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்வது மட்டுமேயாகும்.

அது மட்டுமன்றி ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் சிறீலங்கா அரசாங்கம் தமிழ்த் தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் எவ்வித தயக்கமும் இன்றி தீவிரப்படுத்தி வருகின்றதெனின் அந்தத் தீர்மானத்தின் பலவீனங்களை நாம் நன்றாக விளங்கிக்க கொள்ள முடியும். அத்துடன் ஜெனீவா தீர்மானத்தினை உரிய முறையில் அமுல்ப்படுத்துமாறு கோருவதன் மூலமோ அன்றி எல்.எல்.ஆர்.சி யினை முழுமையாக அமுல்ப்படுத்துமாறு கோருவதன்மூலமோ சிறீலங்கா அரசினால் தமிழ்த் தேசத்தின் இருப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் இன அழிப்புச் செயற்பாடுகளை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது என்பதனை இனியாவது சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும், நிலப்பறிப்பினை தடுத்து நிறுத்துவதற்காகவும் ஐனநாயக வழியிலான எதிர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுப்பதென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை(18-06-2012) நண்பகல் 1.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை யாழ் நகர பேரூந்து நிலையத்திற்கு முன்பாக சோமசுந்தரப்புலவர் சிலையருகில் நடைபெறவுள்ள இப்போராட்டத்திற்கு அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு வேண்டுகின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன்
தலைவர் பொதுச் செயலாளர்

Comments Closed

%d bloggers like this: