தமிழீழம்

தமிழர் தாயகத்தில் சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பிற்கு எதிராய் குரல் கொடுப்போம்.

தமிழர் தாயகத்திலுள்ள தனியார் மற்றும் அரச காணிகளை சிறீலங்கா அரசானது இராணுவத் தேவைக்காகவென கையகப்படுத்தும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு, தமிழர்களது மண்ணை முழுமையாக சிங்கள மயப்படுத்தும் சூழ்ச்சியே திரை மறைவில் அரங்கேற்றப்படுகின்றது.இதனைவெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடும், நாளை யாழ் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் நில அபகரிப்பினை தடுத்து நிறுத்துவதற்காகவும், இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கோடும், சர்வதேசத்தின் கவனத்திற்கு இவ்விடையத்தை எடுத்துச் செல்லவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் இவ் ஐனநாயக வழியிலான எதிர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இச் செயற்பாட்டிற்கு பிரித்தானியத் தமிழர்கள் சார்பில் பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் (BTU) முழுமையான ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கிறது.

அதே வேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தின் முக்கியத்துவம் அறிந்து இலங்கைத்தீவில் வாழும் தமிழ்மக்கள், அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தமிழர்களும், அமைப்புக்களும் ஆதரவைத் தெரிவித்து உலகெங்கும் பரந்து வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் உரிமைக்குரலாக சர்வதேசத்தின் முன் ஒலிக்கவேண்டிய தேவையும் உள்ளது.

இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கும், தமிழினப் படுகொலைகளுக்கும், கலை கலாச்சார அழிப்பிற்கும், அத்துமீறிய நில ஆக்கிரமிப்பிற்கும் எதிராக அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிந்து போராடும் எம் தாயக உறவுகளுக்கு தோள்கொடுத்து ஆதரவையும் உதவிகளையும் வழங்கவேண்டியது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் இன்றியமையாத கடமையாகும்.

குறிப்பாக அண்மையில் லண்டனுக்கு வருகை தந்திருந்த தமிழர் இனவழிப்பின் தற்போதைய சூத்திரதாரியும் தமிழர்களின் ஒரே எதிரியுமான சிங்களப் பேரினவாத மகிந்த ராஜபக்சவை ஓட ஓட விரட்டும் வரை எவ்வாறு தமிழர்கள் ஒன்றுபட்டு தொடர்போராட்டங்களை மேற்கொண்டோமோ அதே போல் தாயகத்திலும் தமிழர்களின் விடுதலைக்கும், சுதந்திரமான வாழ்விற்குமாக அனைவரும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனவும் பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் (BTU) கேட்டுக் கொள்கின்றது.