தமிழீழம் முக்கிய செய்திகள்

எங்கள் நிலத்திற்கு நாங்கள் செல்ல வேண்டும்! எங்கள் நிலத்தில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்.

எங்கள் நிலத்திற்கு நாங்கள் செல்ல வேண்டும். எங்கள் நிலத்தில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும். எங்கள் நிலத்தை நாங்கள் ஆள வேண்டும் என்பதற்காக நாம் மிகப் பெரிய அளவில் விரைவில் வாழ்வுரிமை மாநாடு நடத்தப் போகிறோம். இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மட்டுமல்லாமல், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஜனநாயகவாதிகள், முற்போக்குவாதிகள் எல்லோரையும் அழைத்து மிக விரைவில் இந்த மாநாட்டைக் கூட்டி அதிலே முடிவெடுத்துவிட்டு அது குறித்து நாங்கள் சர்வதேசத்திற்கு அறிவிப்போம் என்று முறிகண்டி ஆலய முன்றலில் நேற்றுக்காலை நடைபெற்ற நில அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் முடிவில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருமுறிகண்டி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் பலர் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படாதுள்ளனர். அந்தப் பகுதிகளில் மக்கள் குடியிருப்புக்கள் உட்பட இராணுவம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றி தனது தேவைக்காகப் பயன்படுத்தி வருகின்றது.

அத்துடன் இராணுவம் மக்கள் குடியிருப்பைக் கைப்பற்றி தனது தேவைக்காகப் பயன்படுத்துவதனால், அங்கு மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச்செல்லப்பட்டிருந்த குடும்பங்களில் 19 குடும்பங்கள் நேற்று முன்தினம் மீண்டும் மனிக்பாம் முகாமுக்கு இராணுவத்தினரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தப் பின்னணியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமசமாஜ கட்சி, சிறிலங்கா சோசலிச கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் முக்கியஸ்தர்களும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் உட்பட பலரும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலே அரசாங்கத்தின் இராணுவ ஆதிக்கம் இல்லாமல் ஒழியும் வரையில் எமது போராட்டம் தொடரும். அதுவே எமது இலக்கு. அதற்கான முடிவை நாங்கள் வாழ்வுரிமை மாநாட்டிலே அனைவரையும் அழைத்துப் பேசி முடிவெடுப்போம்.

இன்னுமொரு முறை நாங்கள் அடிமைப்படுத்தப்படாமல் இருப்பதற்காகவும், எங்களுடைய நிலத்தில் நாங்கள் உரிமை கொண்டாடவும், அங்கு வீடுகளைக் கட்டி நாங்கள் வாழவும், எங்கள் நிலத்தை நாங்கள் ஆளவுமான அத்தனை உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக இந்தப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம். இதுதான் எமது நிகழ்ச்சியும் இலக்குமாகும்.

இந்தப் போராட்டத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருப்பதுடன், எங்களுக்காக போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். இந்தப் போராட்டத்தில் எங்களுக்கு உதவுமாறு சர்வதேசத்திற்கும் நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.

போர் முடிந்து விட்டது. ஆனால் பொதுமக்களின் காணிகள், வீடுகளில் எல்லாம் இராணுவத்தினர் இருக்கின்றார்கள். அவர்களது வயல்காணிகளையும் இராணுவம் விட்டு வைக்காமல் ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்களின் கடற்பகுதி விவசாய நிலங்கள் என பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கணக்கு காட்டாமலேயே இராணுவம் நிலை கொண்டிருக்கின்றது. ஆனால் சர்வதேசத்திற்கு உண்மையைச் சொல்லாமல், இராணுவம் பொதுமக்களின் காணிகளை விட்டுவிட்டதாகப் பொய்சொல்லிக் கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்கள் பலம்வாய்ந்த சுயநிர்ணய உரிமைக்கான உரித்துடைய குடிசனப்பரம்பலைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை மறைத்து இல்லாமல் செய்வதற்காகவே, அரசாங்கம் இவ்வாறு இராணுவத்தின் ஊடாகவும் பௌத்த விகாரைகளை அமைப்பதன் ஊடாகவும் எமது காணிகளையும் நிலங்களையும் கையகப்படுத்தி எமது மக்களை இன்னும் அகதிகளாக்கிக் கொண்டிருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல் இந்த அரசாங்கம் எமது வாழ்வுரிமையை இராணுவத்தின் ஊடாகவும், பௌத்த குருமார்களுக்கு ஊடாகவும் திட்டமிட்டு அழித்து வருகின்றது. எங்களுடைய காணிகளை ஆக்கிரமித்து, தங்களுடைய குடியிருப்புக்களையும், பௌத்த விகாரைகளையும் அமைத்து வருகின்றார்கள்.

இதனால் லட்சக் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் இருக்கின்றனர்.

தமிழ் மக்களுடைய பண்பாடு, கலாசாரம், அவர்களுடைய நில உரிமை, வாழ்வுரிமை, ஜனநாயக உரிமைளை இல்லாமல் செய்கின்ற இன அழிப்பு நடவடிக்கைகளில் இந்த அரசாங்கம் இராணுவத்தின் ஊடாகவும் பௌத்த குருமார்களின் ஊடாகவும் செய்து வருகின்றது. இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது.

இதற்கு எதிராக நாங்கள் வாழ்வுரிமை மாநாட்டைக் கூட்டி, அரசாங்கத்தின் இராணுவ ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் இல்லாமல் ஒழியும் வரையில் நாங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.