கட்டுரைகள்

"ஏமாற்றும் சிங்களர், ஏமாறும் தமிழர்" – அர்ஜுன் சம்பத்

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு “”ஒன்றுபட்ட இலங்கைக்குள்” தீர்வுகாண வேண்டுமென இந்திய நாட்டின் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் “”ஒன்றுபட்ட இலங்கை” என்று ஒன்று எப்போதும் இருந்ததில்லை என்பதுதான் உண்மையான வரலாறு.

ஆங்கிலேயர் (ஐரோப்பியர்) ஆட்சிக் காலத்துக்கு முன்பு இலங்கையில் மூன்று அரசுகள் இருந்தன. யாழ்குடா நாட்டை இறுதியாக ஆட்சி செய்த சங்கிலி மன்னன், கயவன் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு போர்த்துகீசியரால் சிறைபிடிக்கப்பட்டு கடல் வழியாக இந்தியாவின் கோவா பகுதிக்குக் கொண்டுவந்து சிறை வைக்கப்பட்டு கொடும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.

கண்டி கதிர்காமம் பகுதியை ஆண்டுவந்த தமிழ் மன்னன் விக்கிரம சிங்கன் ஆங்கிலேயரால் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டு அங்கேயே மடிந்தார். “”கோட்டை அரசு” என்கிற பெயரில் சிங்களர் ஆட்சி கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தது. அதையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.
கொழும்பு கோட்டை ராஜ்ஜியம் தவிர்த்து யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட பகுதிகளின் ஆட்சி நிர்வாகம் ஆங்கிலேயர் காலத்தில் சென்னையை மையமாக வைத்தே இருந்தது. பின்னர் ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாகச் சிரமங்கள் காரணமாக இலங்கைத் தீவை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்து, கொழும்பைத் தலைமையிடமாகக் கொண்டு இலங்கை அரசாங்கத்தை உருவாக்கி ஆட்சி செய்தனர்.

1903-ல் இலங்கைத்தீவில் சிங்களர் ஆங்கிலேயர் ஆதிக்கம் காரணமாக தமிழர்களின் சமஉரிமை பாதிக்கப்பட்டது. எனவே இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்களுக்குத் தன்னாட்சி கோரும் மக்கள் அமைப்பாக “தமிழர் சபை’ யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டது. டென்ஸ்மேன் காசிப்பிள்ளை ஆகியோர் தமிழர்களுக்கு (உத்தேசமாக தனித்தமிழீழம்) தனி அரசுரிமை கோரி தமிழர் சபை மூலமாக ஆங்கிலேயரிடம் விண்ணப்பித்தனர். 1915-ல் இஸ்லாமியர் – சிங்களர் இனக் கலவரத்தின் காரணமாக ஆங்கிலேய அரசாங்கத்தால் சிங்களத் தலைவர் டி.எஸ்.சேனநாயகா கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.

அக்காலத்தில் புகழ்பெற்ற தமிழர் தலைவர்களான பொன்னம்பலம் இராமநாதன், பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோர் லண்டன் சென்று வாதாடி சிங்களத் தலைவர்களை மீட்டனர்.

சிங்களர்களும் தமிழர்களும் இணைந்து ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெறுவதற்காக 1919-ல் இலங்கை தேசிய காங்கிரûஸ உருவாக்கினர். சிங்களர்கள் தமிழர்களோடு நல்லிணக்கமாக வாழத் தயாராக இல்லாத காரணத்தினால் தமிழர் தலைவர்களைச் சிங்களர்கள் ஏமாற்றினர். 1921-ல் தமிழர் அனைவரும் இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்து விலகி யாழ்ப்பாணத்தில் “தமிழர் மகாஜன சபை’யை உருவாக்கினர்.

சிங்களச் சிங்கமும் தமிழ் ஆட்டுக்குட்டியும் ஒன்றாக வாழ்ந்தால் ஆட்டுக்குட்டியை சிங்கம் விழுங்கிவிடும். எனவே தமிழர்கள் ஏமாறக்கூடாது என ஜே.வி.செல்லைய்யா கூறினார். இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிங்களத் தலைவர்கள் 1925-ம் வருடம் ஜூன் 25-ம் நாள் இலங்கைத் தமிழர் மகாஜன சபையுடன் உடன்பாடு ஏற்படுத்தினர். “மகா தேவா’ உடன்பாடு என பெயர்பெற்ற அந்த உடன்பாடு ஒரு தலைப்பட்சமாக சிங்களரால் கைவிடப்பட்டது.

1920-லிருந்து 1935-வரை சிங்களத் தலைவர்கள் இந்திய வம்சாவளியினரான கேரள மலையாளிகளுக்கெதிரான போராட்டங்களை நடத்தி மலையாளிகளைக் கொழும்பிலிருந்து விரட்ட முயற்சி செய்தனர். 1939-ல் இந்தியாவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.கே.கோபாலன் கொழும்பு சென்று அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோடு பேசி மலையாளிகளை வெளியேற்றும் முயற்சியைத் தடுப்பதற்கு முயன்றார். ஆனால் சிங்கள வெறியர்களின் பிடிவாதம் காரணமாக முயற்சி வெற்றியடையவில்லை. மலையாளிகள் வெளியேற்றப்பட்டனர்.

1936 முதல் மலையகத் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என சிங்களத் தலைவர்கள் போராட்டங்களை நடத்தத் துவங்கினர். 1830-லிருந்து ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் இலங்கை மலையகப் பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக குடியேறிய தமிழகத்தைச் சேந்தவர்களின் எண்ணிக்கை 1939-ல் ஆறு லட்சமாகும். அது இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 14 சதவிகிதமாகும்.

1939-ல் பதினைந்தாயிரம் மலையகத் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என சட்டசபையில் சிங்கள பெüத்த வெறியர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். ஒட்டு மொத்தத் தமிழரின் எதிர்ப்பையும் மீறி இத்தீர்மானம் சிங்களத் தலைவர் சேனநாயகாவால் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் மலையகத் தமிழர் குழு புது தில்லி வந்து மகாத்மா காந்தியடிகளைச் சந்தித்து தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர். காந்தியின் உத்தரவின்பேரில் 1939, ஜூலை 18-ம் நாள் ஜவாஹர்லால் நேரு, கொழும்பு சென்று சிங்களத் தலைவர் டி.எஸ்.சேனநாயகாவுடன் பேசினார். பேச்சுவார்த்தை வெற்றி பெறாத காரணத்தினால் 1939, ஜூலை 25-ல் “”இலங்கை இந்தியர் காங்கிரஸ்” எனும் அமைப்பு மலையகத் தமிழர்களின் பாதுகாப்பிற்காக நேருவால் துவக்கி வைக்கப்பட்டது.

1939, ஜூலை 26-ம் நாள் கொழும்பு காலிமுகத்திடலில் நேரு பேசிய பொதுக் கூட்டத்தில் சிங்களர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினர். நேருவால் பேச முடியவில்லை. 1948, பிப்ரவரி 4-ம் நாள் ஆங்கிலேயர் இலங்கையைவிட்டு வெளியேறியபோது சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தின் தயவில், ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில், ஒட்டுமொத்த ஈழத்தமிழரின் அரசியல் எதிர்காலத்தை விட்டுச் சென்றது.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்பு சிங்களப் பெரும்பான்மை அரசு 10 லட்சம் மலையகத் தமிழருக்கு குடியுரிமை கொடுக்க மறுத்தது. 1954-ல் யாழ்ப்பாணம் வந்த பிரதமர் கொத்தளவாலா, “”சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக” இருக்குமென்றும், “”சிங்களரும் தமிழரும் சமமாக நடத்தப்படுவார்கள்” என்றும் வாக்குறுதி கொடுத்தார்.
ஆனால் கொழும்பு திரும்பியதும் அவருக்கு சிங்கள பெüத்த வெறியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய காரணத்தினால், “”சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி” எனத் தீர்மானம் இயற்றினார். 1957-ல் பண்டார நாயகா, செல்வநாயகம் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் 1958-ல் ஒரு தலைபட்சமாக பண்டாரநாயகாவால் இலங்கை நாடாளுமன்றத்துக்குள்ளேயே அனைவர் முன்னிலையிலும் கிழித்து வீசப்பட்டது. 1964-ல் சிறீமாவோ சாஸ்திரி உடன்பாடு இந்தியாவால் ஏற்பட்டது. இதன் காரணமாக நான்கறை லட்சம் மலையகத்தமிழர்கள் இலங்கையை விட்டு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர். 1965-ல் டட்லி சேனநாயக – செல்வநாயகம் உடன்பாடு ஏற்பட்டது. 1969-ல் ஒப்பந்தம் கைவிடப்பட்டதாக ஒருதலைபட்சமாக டட்லி அறிவித்தார்.

இதன் பின்னர் இந்திரா காந்தி பிரதமரான காலத்தில் ஒப்பந்தம் எனும் பெயரில் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகளின்படி தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகள் இதுவரை பாதுகாக்கப்படவில்லை.

1987-ல் ராஜீவ் காந்தி ஜெயவர்தனா ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படியும் சிங்கள அரசு நடந்து கொள்ளவில்லை. 1987-ல் ராஜீவ் ஜெயவர்தனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ராஜீவ் காந்தியை சிங்களக் கடற்படை சிப்பாய் ஒருவன் துப்பாக்கிக் கட்டையால் தாக்கினான். இறைவன் அருளால் ராஜீவ் காந்தி தப்பினார். இப்படி பல்வேறு காலகட்டங்களில் பல ஒப்பந்தங்கள் சிங்களரும் தமிழரும் சமமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்திடும் நோக்கத்தில் செய்துகொள்ளப்பட்டு தமிழர்கள் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் சிங்களர்கள் ஒருபோதும் நல்லிணக்க ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒப்பந்தங்கள் அனைத்துமே ஒரு தலைபட்சமாகவே சிங்களர்களால் மீறப்பட்டன.

2002-ல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மத்தியில் புரிந்துணர்வு உடன்பாடு மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் நார்வே நாட்டின் மூலமாக முயற்சி எடுத்ததன் காரணமாக இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் 2008, ஜனவரி 8-ம் நாள் ஒரு தலைபட்சமாக ராஜபட்சே அரசால் முறித்துக்கொள்ளப்பட்டது. நார்வே சார்ந்த நடுநிலையாளர்களும் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களையும் ராஜபட்சே அரசு வெளியேற்றியது. இப்படி ஏறத்தாழ ஒன்பது முறை தமிழர்களுடன் ஏற்பட்ட உடன்பாடுகளிலிருந்து சிங்களர்கள் ஒரு தலைபட்சமாகவே விலகியுள்ளனர். 2008-ல் முள்ளி வாய்க்கால் பயங்கரத்திற்குப் பிறகு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ராஜபட்சே அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழர்களுக்கு சம உரிமை, அரசியல் அதிகாரப் பகிர்வு, மீள்குடியேற்றம், நிவாரணப்பணிகள் ஆகியவை தொடர்பாக இந்திய அரசு பலமுறை ராஜபட்சே அரசுடன் பேசி பல உதவிகளைச் செய்துள்ளது. ஆனால் இந்திய அரசு வழங்கும் நிவாரண உதவிகள் அனைத்தும் தமிழர்களைச் சென்றடையவில்லை.

தொடர்ந்து சிங்களமயமாக்குதல் பெüத்தமயமாக்குதல் ஆகியவை திட்டமிட்ட முறையில் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. இலங்கை ராணுவத்தைக் கொண்டு தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்தல் தொடர்கிறது. இலங்கைத் தீவில் அங்கு வசிக்கும் பூர்வகுடி தமிழர்களுக்கு ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாகவே அப் பகுதி இன்றும் உள்ளது. இந்திய அரசு மேற்கொள்ளுகின்ற நல்லெண்ண முயற்சிகள் அனைத்தும் சிங்களத் தரப்பால் முறியடிக்கப்படுகின்றன.

இலங்கைத் தீவில் சீனா தனது ராணுவத்தளங்களை அமைத்துக் கொள்ள சிங்களர்கள் இடம் கொடுத்துள்ளனர்.
இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்திட தமிழ மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுத்திட தனித்தமிமீழம் ஒன்றுதான் தீர்வு என்கிற முடிவுக்கு இந்திய அரசு வருவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒன்றுபட்ட பாகிஸ்தானுக்குள் வங்க தேச முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை என்பதற்காக 1972-ல் இந்திரா காந்தி பாகிஸ்தான் மீது போர் தொடுத்து வங்க தேசத்திற்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார். இத்தகைய துணிச்சலான முடிவையே இலங்கை விஷயத்திலும் இந்தியா மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்ந்து சிங்களர்களோடு ஒப்பந்தங்கள் செய்து ஏமாந்தது போதும். எப்போதும் ஏமாற்றும் இலங்கையோடு இனிமேலாவது இந்தியா ஏமாறாமல் இருக்கட்டும்.