அட்டகாச பந்தல் காத்திருக்க, ஹோட்டலில் ரூமில் துவங்கியது டெசோ மாநாடு!

Home » homepage » அட்டகாச பந்தல் காத்திருக்க, ஹோட்டலில் ரூமில் துவங்கியது டெசோ மாநாடு!

டெசோ மாநாட்டின் முதல் நிகழ்வான ஆய்வரங்கம் சென்னை அக்கார்டு ஹோட்டலில் இன்று காலை தொடங்கியது. தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆய்வரங்கத்தை ஆரம்பித்து வைத்தார். பிரமாண்ட மாநாடாக நடைபெறும் என்று விளம்பரம் செய்யப்பட்ட டெசோ மாநாட்டின் துவக்க நிகழ்ச்சி, மிக சிறிய அளவில், ஹோட்டல் உள்ள அரங்கு ஒன்றில் நடைபெற்றது.

மாநாட்டின் ஆரம்ப நிகழ்ச்சியான ஆய்வரங்கில், தி.மு.க.-வின் தலைவர் கருணாநிதியுடன், கட்சியின் அதியுயர் அதிகாரபீட தலைவர்களான மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி, ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களைத் தவிர கட்சியின் இரண்டாம் நிலை இதர தலைவர்களான அன்பழகன், பொன்முடி, துரைமுருகன் உட்பட வேறு சிலரும், ஹோட்டலுக்கு வந்திருந்தனர்.

மிகச்சிறிய இடம் என்பதால், கருத்தரங்க நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஆயிரம் தடைகள் வந்தாலும், திட்டமிட்டபடி டெசோ மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்திருந்தார். அதையடுத்து, கூட்டத்தை தமது கோபாலபுரம் இல்லத்தில் நடத்தாமல், அதைவிட சற்று பெரிய இடவசதி கொண்ட ஹோட்டல் ஒன்றின் கான்ஃபிரன்ஸ் ஹாலில் கூட்டத்தை நடத்துகிறார்.

சென்னை அக்கார்டு ஹோட்டலில், கடந்த வாரம் தமிழக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் வருடாந்த கூட்டமும் நடைபெற்றிருந்தது. இன்று டெசோ மாநாட்டுக்குப் பின், வேறு இரு தனியார் நிறுவனங்கள், தற்போது கருத்தரங்கம் நடைபெறும் ஹாலை முன்பதிவு செய்துள்ளார்கள்.

ஹோட்டல் கான்ஃபிரன்ஸ் ஹாலில் கூடியிருந்த சிறிய கூட்டத்தினரிடையே பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, “ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக நிற்போம்; ஈழத் தமிழர்கள் மீது அக்கறையுடன் தி.மு.க. தொடர்ந்து ஆதரவாக இருப்பது வரலாற்று உண்மை” என்றார்.

Comments Closed

%d bloggers like this: