கட்டுரைகள்

மகிந்தாவின் பீதியை அகற்ற நடத்தப்படவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்: அனலை நிதிஸ் ச. குமாரன்

ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை நடத்தப்பட வேண்டிய தேர்தலை அவசரத்துடன் கலைத்துவிட்டு நடத்த வேண்டிய கட்டாயத்துக்குள் இருக்கிறார் மகிந்தா.தனது சுய அரசியல் வேலைத்திட்டங்களுக்காக ஜனநாயக விழுமியங்களையும், மக்களின் விருப்புக்களையும் அசட்டை செய்துவிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி மாகாண சபைத் தேர்தலை நடத்துகிறது மகிந்தாவின் அரசு. தனது பீதியை அகற்ற நடத்தப்படவிருக்கும் இத்தேர்தலை எப்படியாவது வெற்றிகொள்ள வேண்டுமென்கிற முனைப்பில் கவனமாக இருக்கிறார் மகிந்தா.

அம்பாறை (14), மட்டக்களப்பு (11), திருகோணமலை (10) ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதே கிழக்கு மாகாண சபையாகும். மொத்தம் 35 உறுப்பினர்கள் விழுக்காடு அடிப்படையில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர்.

ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெறும் கட்சிக்கு மேலதிகமாக இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்படும். 2008-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்போது நிலவிய போர்ச் சூழல் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடவில்லை.

ஆனால், இம்முறை தமிழ்தேசிய கூட்டமைப்பும் நேரடியாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களம் இறங்கியுள்ளது. நடைபெறவிருக்கும் தேர்தலில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.

சிங்கள மொழி ஆதிக்கம் நிறைந்த கட்சிகளாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகின்றன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், றிஷாத் பதியுதீனின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஆடுஆயு ஹிஸ்புல்லாவின் முஸ்லிம் தேசிய காங்கிரஸ் ஆகியனவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகின்றன.

அதிகாரங்கள் அற்ற மாகாணங்கள்

சிறிலங்காவில் மாகாண சபைகளுக்கு அரசியல் யாப்பில் கொடுக்கப்பட்டுள்ள காவற்துறை, காணி அதிகாரம் போன்ற அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. இரு மாதங்களுக்கு முன்னர் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் தேர்தலை அடுத்த மாதம் நடத்துகிறது சிங்கள அரசு.

இச் சபையை கலைப்பதற்கு அந்த மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று போடப்பட்ட மனுவொன்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அத்துடன் மாகாணத்தில் தேர்தலை நடத்துவதற்கும், தேர்தல் ஆணையாளருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்ப்பு வழங்கியுள்ளது. கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ராசையா துரைசிங்கத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னால் அது கலைக்கப்படக்கூடாது என்று சபை ஏகமனதாக கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றிய தீர்மானத்தை அந்த மனு சுட்டிக்காட்டியிருந்தது.

மாகாண சபையைக் கலைக்க பரிந்துரைக்கும் அதிகாரம் அந்த மாகாண முதலமைச்சருக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டு நீதிபதிகள் இந்த மனுவை நிராகரித்ததாக, மாகாண சபையின் முன்னாள் முதல்வர் பிள்ளையானின் வழக்கறிஞர் அத்துல டி சில்வா தெரிவித்தார்.

கங்கரு ஆட்சியை மேற்கொள்ளும் மகிந்தாவின் தலைமையில் இருக்கும் அனைத்து துறையும் அவர் சொல்லும் அறிவுரைகளேயே தீர்ப்பாக வழங்குவார்கள் என்றால் மிகையாகாது. மாகாண சபையின் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுநர் கையில்தான் உண்டு. அமைச்சரவை ஆலோசனை மட்டும் வழங்கலாம்.

தமக்கு தேவையேற்படும் வகையில் மக்களின் தீர்ப்புக்களையும் உதறித் தள்ளிவிட்டு செயலாற்றுவதென்பது சிங்கள ஏகாதிபத்திய அரசுகளுக்கு ஒன்றும் புதிதல்ல. 13-ஆம் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் புறந்தள்ளிவிட்டு தமக்கு ஏற்றவாறு சட்டங்களை இயற்றுவதே சிங்கள அரசுகளின் தொடர் செயற்பாடுகள்.

தாம் நினைத்தால் திடீரென எதனையும் செய்யும் அதிகாரம் சிறிலங்கா அரசுக்கு இருக்கிறது. தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கும் காரணத்தினால் சிங்கள அரசியல்வாதிகள் எதனையும் செய்வார்கள். அனைத்து சிங்கள அரசியல் கட்சிகளும் தமிழர் விரோதப் போக்கையே கடைப்பிடிப்பதனால் தர்மம் வெற்றியடைவது என்பது சிறிலங்காவில் அறவே இல்லை.

எட்டப்பர்களை துரத்தியடிக்கும் தேர்தலிது

தமிழீழமே தமது இறுதி இலட்சியம் என்று கூறி விடுதலைப்புலிகளின் தலைமையில் போராடி, அவர்களையே காட்டிக்கொடுத்துவிட்டு சிங்கள அரசின் எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு ஓடி ஒழிந்த பிள்ளையான் மற்றும் கருணா போன்றவர்கள் தமிழீழ விடுதலையையும், கிழக்கு மாகாண மக்களின் உரிமைகளையும் மற்றும் விடுதலைப்புலிகளைப் பற்றியும் பேசுவதற்கு அருகதையற்றவர்கள்.

தமிழீழ விடுதலையைப் பின்னோக்கித் தள்ளியதற்கு இவர்களும் ஒரு காரணம். இப்படிப்பட்டவர்கள் பிரிவினைவாதம் போன்ற சொற்பதங்களைப் பாவிப்பதை நிறுத்த வேண்டும்.

தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பிள்ளையான் தெரிவிக்கையில், “வடக்குத் தலைமைகளால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். எம்மை அவர்கள் மாற்றாந் தாய்ப் பிள்ளைகளாகவே கருதுகின்றனர்.

அதனால்தான் வெருகலாற்றில் எம்மீது படையெடுத்து எம் போராளிகளைக் கொலை செய்தனர். நிச்சயமாக இத் தேர்தலில் தோற்கப்போகும் கூட்டமைப்பினர் ஒரேயொரு அறிக்கையை மாத்திரம் பத்திரிகை வாயிலாக விட்டு எம்மக்களைக் கைவிட்டு ஓடி விடுவர். இதைத் தான் அவர்கள் 62 வருட காலமாகச் செய்து வருகின்றனர்” என்றார்.

வரலாறு தெரியாத இவர்போன்றவர்களின் பின்னால் இயங்கும் சில தமிழர்கள் கூட தாம் செய்யும் தவறுகளுக்காக எதிர்காலத்தில் வருந்துவார்கள்.

கிழக்கு மாகாணத் தமிழர்களென்றாலும் சரி, வடக்கு மாகாணத் தமிழர்கள் என்றாலும் சரி அனைவருமே தமிழீழ மக்கள் என்கிற வாதத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே உணர்த்திவிட்டது விடுதலைப்புலிகளின் தலைமை. தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் விடுதலைப் பற்று எப்போதும் சளைத்திருக்கவில்லை.

ஆனால் சிறிய தொகை மக்கள் தொடந்தும் சுயநலம் கருதி சிங்கள தேசியக் கட்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறார்கள். தமிழர் தாயகத்தில் விடுதலைப் போராட்டம் உக்கிரமடைந்திருந்த வேளையிலும் இவர்கள் தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து தேர்தலில் மக்களிடம் வாக்குக் கேட்டு குறைந்த வாக்குகளில் தமிழர்களின் பிரதிநிதிகள் தாமே என்றவாறு சிங்களப் பாராளுமன்ற நாற்காலிகளை நிரப்பினார்கள்.

தேர்தலும், வாக்களிப்புகளும் இவ்வாறு இருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாணத் தேர்தலை தமிழ் மக்கள் சந்திக்கின்றனர். தமிழ் மக்கள் சந்தித்த தேர்தல்களில் மூன்று தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

1977-ஆம் ஆண்டுத் தேர்தல் முக்கியமான ஒன்றாகும். தமிழரின் ஒன்றுபட்ட அரசியல் தலைமைத்துவம் விடுதலையை மாத்திரம் நோக்காகக் கொண்டு, தமிழீழம் என்ற தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டபோது தமிழ் மக்களின் ஆணை என்ற அடிப்படையில் பொது வாக்கெடுப்பாக அமைந்த இத்தேர்தலில் அமோக ஆதரவைத் தமிழ் மக்கள் வழங்கினர்.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் தொகுதியடிப்படையில் பார்க்கின்றபோது, எல்லாத் தொகுதிகளிலும் தமிழ் மக்களின் வாக்குகள் பெரும்பான்மையாக தமிழ்த் தேசியத்திற்கு அளிக்கப்பட்டன.

1989-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) தேர்தலில் போட்டியிட்ட வேளையில், ஏனைய தமிழ்க்கட்சிகளில் இந்தியப் படையினரின் ஆலோசனை, அனுசரணையுடன் நான்கு கட்சிகள் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட போது தமிழ் மக்கள் தங்கள் பெரும்பான்மை ஆதரவை ஈரோஸிற்கு வழங்கி தமிழ்த் தேசியத்தின் பலத்தை வெளிப்படுத்தினர்.

2004-ஆம் ஆண்டுத் தேர்தலில் விடுதலைப்புலிகளின் முழுமையான ஆதரவோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்கியது. இத்தேர்தலில் கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து தங்கள் அதிகப்படியான பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்தினர். மட்டக்களப்பில் நான்கும், திருகோணமலையில் இரண்டும், அம்பாறையில் ஒன்றும் என்ற அடிப்படையில் தெரிவுகள் அமைந்திருந்தன.

போர் உக்கிரம் அடைந்திருந்த காரணத்தினாலும், சிங்கள அரசுக்குத் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பைக் காட்ட வேண்டுமென்கிற காரணத்தினாலும் கூட்டமைப்பினர் 2008-ஆம் ஆண்டு மகிந்தா அரங்கேற்றிய போலியான தேர்தலில் பங்குபற்றாத காரணத்தினால் பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்கிற பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டார்.

சுய இலாபங்களை விடுத்து, எவ்வித சலிப்பும் அடையாமல் தமிழீழ விடுதலை நாளை கிடைக்கும் என்கிற நினைப்புடன் உரிமையும், தமிழ்த் தேசியமும், தமிழ் மக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகின்ற அரசியல் மட்டுமே அபிவிருத்தியைப் பெற்றுத்தரும் என்பதைத் தமிழ்த் தேசிய விரோதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாகவே அடுத்த மாதம் இடம்பெறப்போகிறது கிழக்கு மாகாண சபைத் தேர்தல்.

தமிழனின் தனித்துவமும், தன்னாட்சி உரிமையும் நிலை நிறுத்தப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை இத்தேர்தல் மூலம் மக்கள் வெளிப்படுத்துவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

எப்படியேனும் தனது அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியிலான போரில் இத்தேர்தல் மூலமாக வெற்றியடையலாம் என்று நம்புகிறார் மகிந்தா. அரச இயந்திரங்களின் அனுசரணையுடன் மக்களின் தீர்ப்புக்களை உதறித்தள்ளும் அதிகாரங்கள் மகிந்தாவிடம் இருக்கும் காரணத்தினால் எதுவும் நடக்கலாம்.

இருப்பினும் மக்கள் தெளிவாக இருந்தால் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அழுத்திக் கூறப்போகும் தேர்தலாகவே கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் பார்க்கலாம்.