தமிழீழம்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளைப் புலம்பெயர் தமிழர்கள் பலப்படுத்த வேண்டும்!

அன்பார்ந்த கனடா வாழ் உறவுகளே!கிழக்கு மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்தெம்பர் 08 ஆம் நாள் (சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது. வட மாகாண சபைத் தேர்தலை மீள் குடியேற்றம் (சிங்களவர்களும் முஸ்லிம்களும்) கண்ணிவெடி அகற்றுவதில் உள்ள தாமதம் ஆகிய நொண்டிக் காரணங்களைக் காட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைத்துள்ள மகிந்த இராசபக்சே கிழக்கு மாகாண சபையை ஓர் ஆண்டு முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை நடத்த முன்வந்துள்ளார்.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதன் மூலம் -(1) மகிந்த இராசபக்சே கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களும் தனது குடும்ப ஆட்சிக்கு ஆதரவாக இருகிறார்கள் என்பதை பன்னாட்டு சமூகத்துக்கு எண்பித்துக் காட்ட விரும்புகிறார்.

(2) தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றால் மாகாணசபைகளுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் பகிரப்பட்டுள்ள காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை மீளப்பெற்று மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டு வடக்கு மாகாணத் தேர்தலை நடத்தும் திட்டத்தை வைத்திருக்கிறார். மகிந்த இராசபக்சே கூட்டு வைத்திருக்கும் பேரினவாதக் கட்சிகள் அதிகாரப் பகிர்வு தேவையில்லைஇ காவல்துறை மற்றும் காணி அதிகாரம் மாகாண சபைக்கு வழங்கப்படக் கூடாது எனக் குரல் எழுப்பி வருகிறார்கள். மகிந்த இராசபக்சேயும் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது எனப் பேசி வருகிறார்.

(3) தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை வழங்கத் தேவையில்லை யென நினைக்கிறார்.
தமிழர்களைப் பொறுத்தளவில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடிக்கமாறு திரு இரா சம்பந்தன் தமிழ்ப் பேசும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இனச் சிக்கலுக்கு மாகாண சபை தீர்வாக மாட்டாது என்பது ததேகூ இன் நிலைப்பாடாக இருந்தாலும் காணி அதிகாரம் எமது கையில் இருப்பது எமது மண் பறிக்கப்படுவதை ஓரளவேனும் தடுத்து நிறுத்த உதவும்.

அண்மையில் தனியார் காணிகளைப் பறிக்க நகர மற்றும் நாட்டுத் திட்ட சட்டத்தில் அரச கொண்டு வந்த சட்ட திருத்தத்துக்கு ஒன்பது
மாகாணங்களின் சம்மதம் வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கிழக்கு மாகாண சபை சம்மதம் கொடுக்க வட மத்திய மாகாணம் சம்மதம் கொடுக்க மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.

எப்பாடு பட்டாலும் கிழக்கு மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற வெறியுடன் அரசு தனக்குள்ள அதிகாரம்இ பொருள்வளம்இ ஆட்பலம் எனச் சகல வளங்களையும் பயன்படுத்துகிறது. ததேகூ வேட்பாளர்களுக்கு மிரட்டல் விடுத்தல்இ 2இ000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கல்இ அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்கல்இ வேலை வாய்ப்பு தரப்படும் என ஆசை வார்த்தை பேசுதல் போன்ற தேர்தல் முறைகேடுகளில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது.தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதடிப்பதற்கு பல சுயேட்சைக் குழுக்களையும் அரசு களமிறக்கியுள்ளது.

தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ததேகூ இந்தத் தேர்தலில் வெற்றி பெறச் செய்வது தமிழ்வாக்காளர்களது கடமையாகும். ததேகூ வெற்றிபெறும் போது அது தமிழ்மக்களின் அரசியல் வேட்கைகளை உள்ளடக்கியதும் தமிழ்மக்கள் தங்கள் சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதுமான ஒரு நிரந்தரமானஇ நியாயமானஇ நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்ற ததேகூ இன் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கும்.

இணைப்பாட்சி அடிப்படையில் தங்களைத் தாங்களே ஆளும் ஒரு அரசு உருவாக்கப் படவேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெறும்.வட – கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வாய்ப்பு ஏற்படும்.வட – கிழக்கு இணைப்பை முஸ்லிம் மக்களும் ஏற்றுக் கொள்ள வழிவகுக்கும் வகையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் வழங்கப்போகும் தீர்ப்பு அமைய வேண்டும். அதனையே பன்னாட்டு சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

அரசின் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும் தமிழ் மக்கள் ததேகூ இன் பின்னால் அணிதிரண்டுள்ளார்கள் என்பதை தேர்தல் முடிவு பன்னாட்டு இராசதந்திரிகளுக்கு வெளிப்படுத்த வேண்டும்.ததேகூ அரசோடு மோத விரும்பவில்லை. அதே சமயம் ஏமாற்றப்படவும் அர்த்தமற்ற முடிவுகளையோ தீர்வுகளையோ ஏற்றுக் கொள்ளவும் அதன் தலைமை தயாராக இல்லை. இதனை ததேகூ உள்நாட்டிலும் பன்னாட்டு சமூகத்துக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லிவருகிறது. அதனை மெய்பிக்கும் பொறுப்பு கிழக்க மாகாணத் தேர்தல் வெற்றியில் தங்கியிருக்கிறது.மேலும் அய்.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ததேகூ பெறும் வெற்றி வலுவூட்டும்.

எனவே ததேகூ கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற வைக்கும் பொறுப்பு கனடிய தமிழர்களது தோள்களிலும் உண்டு. மனிதவளம்இ பொருள்வளம் என்று வரும்போது அரசோடு ததேகூ போட்டி போட முடியாது. இருந்தும் நாம் ததேகூ இன் கைகளை பல வழிகளில் பலப்படுத்தலாம். அதன் வெற்றிக்கு பாடுபடலாம். இந்த வரலாற்றுக் கடமையைச் செய்யுமாறு தமிழ்மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா)

கனடிய தமிழர் பேரவை (CTC)