இந்தியா

ராஜபக்சேவை இந்தியா வருவதை கண்டித்து தீக்குளித்த விஜய் மரணம்

ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து நேற்று தீக்குளித்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜய்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் (26) தீக்குளித்தார். 17.09.2012 அன்று அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் உரக்க கத்தினார். அப்போது திடீர் என்று உடலில் தீ வைத்துக்கொண்டார். பொதுமக்களும், சேலம் டவுன் போலீசாரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தமிழ் ஈழ ஆதரவாளரான விஜயராஜ், பெரியார் பற்றாளர். விஜயராஜ் தினம் டைரி எழுதும் பழக்கமுடையவர். தமிழ் உணர்வுகளை தனது டைரியில் பதிவு செய்து வந்துள்ளார். தீக்குளிப்புக்கு முன்பு அவர் தனது டைரியில் எழுதியிருப்பதாக நமது நக்கீரன் நிருபரிடம்,

’’இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள், டாங்கிகள், கனரக விமானங்கள் கொடுத்து தமிழர்களுக்கு தொடர் துரோகம் இழைத்துள்ளது. இந்த மத்திய அரசும், சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த வேண்டும். என்னுடைய உயிர் ஆயுதத்தை பார்த்து தமிழர்கள் ராஜபக்சேவை திருப்பி அனுப்ப வேண்டும்.

அதற்காகத்தான் இதை நான் செய்தேன். ராஜபக்சேவை இந்தியாவிற்குள் விடக்கூடாது. இத்தனை வீரமரணத்திற்கும் பிறகும் ராஜபச்சேவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுக்கிறது. இதை பார்த்தாவது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும்’’ என்றார் பலத்த தீக்காயங்களுடன் அவதிப்பட்டுக்கொண்டே.

மருத்துவர்கள் அவரை பேசக்கூடாது என்று கூறியும், நான் எனது உணர்வுகளை மீடியாக்கள் மூலம் தமிழகத்துக்கு தெரிவிக்கிறேன். என்னை பேசவிடுங்கள் என்றார்.

தொடர்ந்து விஜயராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று 12.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஜயராஜ் 36 பக்கத்துக்கு நோட்டு புத்தகத்தில் எழுதிய கடிதம் ஒன்று போலீசார் வசம் கிடைத் துள்ளது. இந்த கடித புத்தகம் ஆட்டோவில் இருந்து கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விஜயராஜ் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ‘’இலங்கை யில் தமிழர்களை கொன்று குவிப்பதே ராஜபக்சேவின் வேலை. ஈழத்தமிழர்கள் வீழ்ச்சிக்கு இந்திய அரசும், அப்போது ஆண்ட தி.மு.க. அரசும் தான் காரணம். என்னைப் பற்றி கவலை இல்லை.

இலங்கை தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இலங் கை தமிழர்களுக்கு முழு பாதுகாப்பும், சுதந்திரமும் கிடைத்தால் தான் என் ஆத்மா சாந்தியடையும். ராஜபக்சே இந்தியா வரக்கூடாது’’ என்று கூறப்பட்டுள்ளது.