புலம்பெயர்

யேர்மனியில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வும் பொதுக் கூட்டமும்.

லெப் கேணல் புலேந்திரன் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளினதும் முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன்ட் மாலதி அவர்களினதும் 25ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும் பொதுக்கூட்டமும் யேர்மனியில் நேற்று நடைபெற்றது. யேர்மனியைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் இறையாண்மைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் Essen நகரத்திலுள்ள Schmitz Str 08 என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் (28.10.2012) 16.00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாயின.

இந் நிகழ்விற்கு திரு.சூரி அவர்கள் தலைமைதாங்கினார். பொதுச்சுடரினை உணர்வாளர் திரு. சந்திரன் அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கத்தையும் ஆரம்பித்து வைக்க அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து தாயக விடுதலைப் போரில் தம் இன்னுயிரை ஈந்த மாவீரச் செல்வங்களுக்காகவும் மக்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் லெப் கேணல் புலேந்திரன் குமரப்பா உட்பட பன்னிரண்டு வேங்கைகளினதும் 2ம் லெப் மாலதியினதும் நினைவுரையும் சமகால நிலவரம் தொடர்பான கருத்துரையும் மாவீர்ர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விளக்கவுரையும் இடம்பெற்றது. மாவீரர்கள் தொடர்பான விளக்கவுரையினை திரு.தும்பன் அவர்கள் நிகழ்த்தியதுடன் மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளிற்கும் அவர்களிடமிருந்த ஐயப்பாடுகளுக்கும் தெளிவான பதில்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு பெருமளவில் மக்கள் கலந்து கொண்டதோடு யேர்மன் செயற்பாட்டுப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு விடயங்களை கேட்டறிந்தனர். விளக்கவுரையாற்றிய திரு.தும்பன் அவர்கள் குறிப்பிடுகையில் இவ் வருட மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒற்றுமையுடன் ஓரணியாக செயற்படுத்துவதற்கான புறநிலைகளை தோற்றுவிக்கும் பொருட்டு தமிழர் இறையாண்மைக்கான அமைப்பானது தொடர்ந்தும் முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் இதனை சாதகமாகவும் புரிந்துணர்வுடனும் உண்மைத்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு ஏற்புடைய தொடர் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சமுகம்தந்திருந்த பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பொறுப்பு நிலையில் உள்ளவர்களுடன் கலந்துரையாடுமாறும் சந்தர்ப்பங்களையும் சாதக நிலைகளையும் உண்மைத் தன்மைகளையும் ஏற்றுக்கொள்ளாது தேசநலனிலிருந்து மாறுபட்ட உண்மைக்குப்புறம்பான விடயங்களைத் தோற்றுவிக்க எண்ணுவதால் உருவாகும் தேசநலன்களுக்கு ஒவ்வாத அனைத்து விடயங்களுக்குமான பொறுப்பினையும் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய தார்மீக நிலையினையும் மக்கள் மத்தியில் ஏற்படும் அவப்பெயருக்கும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டதுடன் இந் நிலையில் இருந்து விடுபடுவதற்கு பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்த வகையில் ஓரிடத்தில் நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கித் தருமாறும் சமுகம்தந்திருந்த பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இவ்விடயத்தை கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். இறுதியில் உறுதியேற்புடன் நிகழ்வுகள் நிறைவடைந்தது.