பிரித்தானியாவில் “முருகதாசன் நினைவுத் திடலில்” மாவீரர் நாள் 2012 நிகழ்வு நடைபெறும்: TNRF-UK

Home » homepage » பிரித்தானியாவில் “முருகதாசன் நினைவுத் திடலில்” மாவீரர் நாள் 2012 நிகழ்வு நடைபெறும்: TNRF-UK

பிரித்தானியாவில் எதிர்வரும் 27-11-2012 செவ்வாய்க்கிழமை அன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமைபோல் மக்களின் எழுச்சியோடு “முருகதாசன் நினைவுத் திடலில்” நடைபெறவுள்ளது.

கடந்த கால பட்டறிவுகளின் அடிப்படையில் வெளிப்படைத் தன்மையுடன் இவ்வருட மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2012 ற்கான ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக் குழு அமைப்பதற்காக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் முக்கிய தமிழ் அமைப்புக்களான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), உலகத் தமிழர் பேரவை (GTF), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), தமிழ் இளையோர் அமைப்பு (TYO-UK), பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் (BTU), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC-UK) ஆகிய அமைப்புக்களுக்கு எம்மால் (TNRF) 03.09.2012 அன்று அழைப்பிதழ் கடிதம் ஒன்று தனித் தனியாக அவர்களின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதன் பின் 4 வாரங்களின் பின்னராக கடந்த 07.10.2012 அன்று முற்கூட்டியே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டமைக்கு அமைய வெளிப்படையான மக்கள் சந்திப்பு ஒன்றும் எம்மால் நடாத்தப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் எமது அழைப்பிதழ் கடிதங்களுக்கு கிடைக்கப்பெற்ற பதில் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டும், மக்கள் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடையங்களை கருத்தில் கொண்டும் எம்மால் கடந்த 10.10.2012 அன்று இவ்வருட (2012) மாவீரர் நாள் நிகழ்வுகளை பொறுப்பேற்று செய்துமுடிப்பதற்கான 23 பேர் கொண்ட “மாவீரர் நாள் 2012ற்கான ஏற்பாட்டுக் குழு” அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் ஊடாக ஆரம்பக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த கட்டத்தினை நோக்கி உறுதியாக நகர்கின்றோம். இவ்வருடமும் கடந்த வருடத்தைப்போல் ” ஈகப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில்” நடைபெறவுள்ள தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

எமது தாயகத்திற்காக தம்மையே அர்ப்பணித்த மாவீரர்ச் செல்வங்களை நினைவுகூரும் இந்த நன்நாளில் அவர்களின் தியாகத்தை எம் நெஞ்சங்களில் சுமந்தவர்களாக அனைவரும் ஓரிடமாக ஒன்றுகூடி ஒரு கணம் அவர்களுக்காக தலைகளை குனிந்து அகவணக்கம் செலுத்தி, அவர்களின் கல்லறைகளிலும், திருவுருவப் படங்களிலும் மலர்களை தூவி வணங்குவதே அம் மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாகும்.

எமது மக்கள் சிந்திய இரத்தமும், எமது மாவீரர்கள் புரிந்த தியாகமும் வீண்போகாது இருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

தற்போது செயற்பாட்டில் உள்ள தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டுக்குழுவானது, யாரையும் ஒதுக்கியோ, யாரையும் புறம்தள்ளியோ செயற்படவில்லை. சுயநலமற்று இதயசுத்தியோடு தகிழ்த் தேசிய விடுதலையை நேசிக்கும் அனைவரையும் இணைத்தே செயற்படுகிறது.

இதுவரை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் ஏதாவது தவறுகள் நடைபெற்றிருந்தால் அதனை சுட்டிகாட்டும் கடமை தேசியத்தை நேசிக்கும் அனைவருக்கும் உள்ளது. இதே போன்று தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் மக்களாகிய நீங்கள் வழங்க முடியும்.

எம்மால் மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக செயற்படுத்தப்படும் சகல பணிகளும் ஊடகங்கள் ஊடாக அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் என்பதையும், அவை எம்மால் அனுப்பப்பட்டவைதான் என்பதை உறுதிப்படுத்த எமது இணையத்தளத்தில் http://www.tnrf.co.uk/ சென்று அவற்றை உறுதி செய்து கொள்ளலாம் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். மாவீரர்களை நினைவுகொள்ளும் நிகழ்வான தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு தொடர்பான விபரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை எமது இணையத்தளத்திலும் http://www.tnrf.co.uk/2012/10/12/maveerar-naal-uk/ சென்று பார்வையிடலாம்.

மேலும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பான விபரங்கள் அறிய 0208 9085580 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது admin@tnrf.co.uk எனும் மின்னஞல் முகவரி ஊடாகவோ தொடர்புகொண்டு தெளிவுபெற்றுக்கொள்ளலாம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

நன்றி

ஊடகப்பிரிவு

தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்

ஐக்கிய இராச்சியம்

tnrfmedia@gmail.com

Comments Closed

%d bloggers like this: