வைகோ-சம்பத் மோதல்: கட்சியை கைப்பற்றும் திட்டம் இதோ லேசாக புகைகிறது!

Home » homepage » வைகோ-சம்பத் மோதல்: கட்சியை கைப்பற்றும் திட்டம் இதோ லேசாக புகைகிறது!

ம.தி.மு.க.வை விட்டு நாஞ்சில் சம்பத் வெளியேறுவாரா, வெளியேற்றப்படுவாரா என்ற சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, அந்தக் கட்சியில் வைகோவை விட தமக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்று கூறியிருக்கிறார் நாஞ்சில் சம்பத். வைகோவைவிட கட்சிக்கு அதிகம் உழைத்தவரும் தாம்தான் என்றும் கூறியிருக்கிறார்.

இதிலிருந்து, கட்சித் தலைமையைக் கைப்பற்றும் திட்டத்தில் இவர் உள்ளார் என்று சொல்கிறார்கள். அது முடியாத பட்சத்தில், போட்டி ம.தி.மு.க. ஒன்றை அவர் உருவாக்க முயலலாம்.

இன்று சன் நியூஸ் சேனலுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த சிறப்புப் பேட்டியில், “கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி ஊடகங்களில் செய்தி வருவது என்பது தானாக வெளியிடப்படுவதல்ல. யாரோ பற்ற வைத்துவிட வெளிவரும் செய்திகள்தான். என்னை ம.தி.மு.க.வில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்களே இப்படி செய்தியை கசியவிட்டிருக்கின்றனர்.

என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வை.கோ. நீண்டகாலமாகவே திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஒத்திகைதான் தற்போது நடைபெற்று வருகிறது. சங்கொலி இதழில் என்னை இழித்தும் பழித்தும் எழுதுகிற வைகோவை ‘சாரைப் பாம்பு’ என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

ஒவ்வொரு ஊரிலும் யார் யார் கட்சிக்காக உழைக்கிறவர்கள் என்று வைகோவால் நிச்சயம் அடையாளம் காட்ட முடியாது. என்னால் முடியும்.

ம.தி.மு.க.வுக்காக வைகோவைக் காட்டிலும் கடுமையாக உழைக்கிறேன். அவரைக் காட்டிலும் தொண்டர்களின் அன்பைப் பெறுகிறேன். கட்சி எல்லைகளைக் கடந்து இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றங்களில் பங்கேற்கிறேன். கடல் கடந்து நாடுகளிலெல்லாம் பேசிவருகிறேன். என் இமேஜ் ஏறி வருகிறது. அதை அவரால் பொறுத்துக் கொள்ளவில்லை.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நான் வளர்த்த இயக்கம். அதில் இருந்து விலகமாட்டேன்.. விலகமாட்டேன்.

நான் வைகோவைக் காட்டிலும் அதிக மேடைகளில் பேசியிருக்கிறேன். அதிக வழக்குகளை சந்தித்திருக்கிறேன். அதிக அளவு பயணம் செய்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போய் கூட்டம் நடத்தினால் 10 இளைஞர்களை கட்சிக்கு கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன். மேடைப் பேச்சு பேசிக் கொண்டு தின்றுவிட்டு உறங்குகிறவன் அல்ல இந்த நாஞ்சில் சம்பத்!

வைகோ மனசாட்சியற்றவர் என்பதை தெரிந்து கொண்டதால்தான் அவரை என் மகள் திருமணத்துக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டேன்.
என்னை கட்சியைவிட்டு வைகோ நீக்கிப் பார்க்கட்டும். அப்போது என் தம்பிமார்கள் அனைவருடனும் சேர்ந்து முடிவெடுப்போம். காலம்தான் அதை தீர்மானிக்கும்” என்றார்.

இந்த வார்த்தைகள் போதும், சம்பத்தின் மனதில் இருப்பதை புரிந்துகொள்ள!

Comments Closed

%d bloggers like this: