நியூசிலாந்தில் மாவீரர் வார மரநடுகை.

Home » homepage » நியூசிலாந்தில் மாவீரர் வார மரநடுகை.

நியூசிலாந்து ஒக்லாந்தில் 25.11.2012 அன்று காலை பத்துமணியளவில் மாவீரர்நாள் நினைவாக மரம் நாட்டல் நிகழ்வு நடைபெற்றது.

ஒக்லாந்து நகரசபையின் ஆதரவுடன் மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஒக்லாந்து தமிழ்ப் பாடசாலை, தமிழ் முதியோர் சங்கம் மற்றும் பொது அமைப்புக்கள் பங்கேற்றிருந்தன. திரு செ.பாலன் அவர்களால் தலைமையேற்று நிகழ்த்தப்பட்ட இந்நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு. தேவராசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வழமையாக இக்காலப்பகுதி மரம் நடுகைக்குரியதில்லை என்றபோதும் தமிழ்மக்களின் இவ்வழைப்புக்கு மரியாதையளித்து இந்நிகழ்விற்கு அனுசரணை வழங்கியதாக ஒக்லாந்து மாநகர சபை தெரிவித்தது.

இந்நிகழ்வைத் தலைமையேற்று நடாத்திய திரு. செ.பாலன் அவர்கள் தனதுரையில்,
“எமது மாவீரச் செல்வங்களின் நினைவுகளே எம்மை வழிநாடாத்திக்கொண்டுள்ளன. தாயகத்தில் எமது மாவீரர்களுக்கான எமது அஞ்சலியைச் செலுத்த முடியாத நிலை எம்மை வாட்டுகின்றது. மாவீரச் செல்வங்களின் கல்லறைகளை எம்மால் காவி வர முடியவில்லை. புலத்திலே துயிலுமில்லங்களை அமைக்கும் எமது கனவும் ஈடேறவில்லை. இருந்தபோதும் இம்மர நாட்டுகையூடாக எமது மாவீரர்களின் நினைவுகளைக் காலங்காலமாகப் பேணும் நோக்கோடு இதைச் செய்கின்றோம்”
எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தேவராசன் ஐயா பேசும்போது,

“மாவீரர்கள் விட்டுச்சென்ற பணியை நாங்கள் எல்லோரும் தொட்டுச் செல்ல வேண்டும். புலம்பெயர்ந்த மக்களால் முன்னெடுக்கப்படும் சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கான ஆவணங்களுக்கு இந்த மரநாட்டு நிகழ்வும் மிகப்பெரிய பலமாகவே திகழும். ஏனெனில் இம்மரநாட்டு நிகழ்வு வெறும் சம்பிரதாய நிகழ்வு அல்ல. மாவீரருக்கு பூப்போட்டு விளக்கேற்றிவிட்டு நாம் வீடுகளுக்குச் சென்றுவிடுவோம். அவ்விடத்தில் அடையாளங்களேதும் இருக்கப் போவதில்லை. மாற்று நாட்டினர் எவரும் அதைப்பற்றி ஆய்வு செய்வதற்கான தடையங்களை நாங்கள் உருவாக்கவில்லை. ஆனால் இங்கு நடப்படும் பத்து மரங்களும் அவர்களாகவே ஆய்வுசெய்ய முனைவார்கள். அப்பொழுது இந்த மரங்களின் வளர்ச்சியைப் போன்று எமது மக்களுடைய விடுதலைக்கான உண்மைத்தன்மையும் இந்த மாவீரர்கள் யார் என்பதும் மாற்று நாட்டினரின் மனங்களில் தெளிவை ஏற்படுத்தும்.

இப்படிப்பட்ட நீண்டகாலச் சிந்தனைகளை வளர்க்கின்ற தேசியப் பற்றாளர்களை எமது நாடுகடந்த அரசாங்கம் அரவணைத்துக்கொள்ளும் என்றார்.

சமூக வேலைத்திட்டத்துக்காக மகாராணி விருது பெற்ற திரு. ஜோர்ஜ் அவர்கள் பேசும்போது,

“எங்கள் பழங்கால மன்னர்களின் வீரவரலாறுகளை சில நினைவுச்சின்னங்களின் ஊடாகவே இலகுவாக அறிந்திருக்கிறோம். எல்லாள மன்னன், பண்டார வன்னியன் போன்றவர்களை இங்குக் குறிப்பிடலாம். எமது மாவீரர்களின் வரலாறு ஒரு குறுகிய காலத்துள் நடந்தவை. இந்த வரலாறு முப்பது ஆண்டுகளோ முன்னூறு ஆண்டுகளோ அன்றி அதையும் தாண்டி ஆயிரமாண்டுகளுக்கு நினைவுகொள்ளப்பட வேண்டியவை. எல்லாவற்றையும்விட இன்றைய நாளில் இந்த மரநடுகையை நாங்களும் இந்தச் சிறுவர்களும் ஒன்றாகக் கூடிச் செய்வதென்பது அதுவும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மண்ணிலே மிகமுக்கிய நிகழ்வாகவே பார்க்கலாம்.

நவம்பர் 26ஆம் நாள் எமது தேசியத்தலைவரின் பிறந்தநாள். நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர்நாள். அவ்வகையில் இந்த ஏற்பாட்டாளர்கள் இன்றைய நாளைத் தேர்வு செய்ததையிட்டு அவர்களை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். என்றார்.

Comments Closed

%d bloggers like this: