புலம்பெயர் முக்கிய செய்திகள்

மாவீரர் நாள் 2012 – முருகதாசன் நினைவுத்திடலில் திரண்ட பல்லாயிரம் மக்கள்!

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள “முருகதாசன் நினைவுத்திடலில்” 1நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சீரற்ற கால நிலையிலும், வார நடுப்பகுதியில் வேலை நாளாக இருந்தும் இவ்வாறு பல்லாயிரக்கணக்கில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமையானது மாவீரர்கள் மக்கள் மனங்களில் ஒன்றித்துப் போயிருப்பதையே எடுத்துக்காட்டி நின்றது.

காலை 10:30 க்கு மண்டப வாயில் திறக்கப்பட்டு 11:30 க்கு பிரித்தானியத் தேசியக் கொடியும், தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 12:00 மணிக்கு பான்ட் வாத்திய அணிவகுப்புடன் மாவீரர் பெற்ரோர், மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்கள் மண்டபத்துக்குள் அழைத்துவரப்பட்டனர். 12:00 மணிக்கு புலிகளின் குரல் ஊடாக நேரலையா தமிழீழ விடுதலைப் புலிகளின் உரை மண்டபத்துக்குள் ஒலிபரப்பப்பட்டது.

சரியாக மதியம் 12:35க்கு பிரதான மண்டபத்திற்கும், மேடைக்கும் முன்னால் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்த துயிலும் இல்லத்தில் மாவீரர் குடும்பங்கள் ஒவ்வொரு கல்லறைகளுக்கும், நினைவுக் கல்லுக்கும் முன்னால் நிற்க நடுவில் அமைந்திருந்த பிரதான சுடரினை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவியும், மூன்று மாவீரகளின் தாயாருமான திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் ஏற்றிவைத்தார். துயிலும் இல்ல பாடல் ஒலிக்க சம காலத்தில் மாவீரர் குடும்பங்களும் தமக்கு உரித்தான மாவீரர்களை மனதில் நிறுத்தி உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்து தமக்கு முன்னால் உள்ள கல்லறைகளிலும், நினைவுக்கற்களிலும் தீபங்களை ஏற்றினர்.

இதே வேளை மண்டப வாயிலில் அமைக்கப்பட்டிருந்த முருகதாசன் நினைவுத் தூபிக்கும் அவரின் பெற்ரோர் விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தினர். அதன் பின் அங்கும் மக்கள் மலர்களைத் தூவி வணக்கம் செலுத்திச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து மக்கள் வரிசையாக வந்து கல்லறைகளிலும், நினைவுக் கற்களிலும் மலர்களைத் தூவியதோடு, அதன் முன்பக்கமாக இரமருங்கிலும் அமைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட மாவீரர்களின் படங்களுக்கு மலர்தூவி தமது வணக்கத்தின்ஐ செலுத்திச் சென்றனர். தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்ள் உட்பட முக்கிய பிரமுகர்களின் உரைகளும், எழுச்சி நடனம், மாவீரர் கானங்கள் என்பனவும் இடம்பெற்றது.

மண்டபத்துக்குள் பின்புறமாக தமிழ்த் தேசிய, மற்றும் சமூக அமைப்புக்களின் அலுவலகங்களும் அமைக்கப்பட்டு மக்களோடான அவர்களின் பணி இலகுவாக்கப்பட்டிருந்தது. அத்தோடு அங்கு அமைக்கப்பட்டிருந்த தாயக வெளியீட்டுப்பகுதியில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு தமக்கான தாயக வெளீயீடுகளை வாங்கிச் சென்றனர்.

வேலைகளும், பாடசாலைகளும் உள்ள நாளாக இருந்தமையால் பல மக்கள் பிற்பகலும் கூட நிகழ்வின் இறுதிவரை அங்கு வருகைதந்து மலர்களைத் தூவி மாவீரர்களுக்கு தமது வணக்கத்தினை செலுத்தி சென்றதையும் காணமுடிந்தது. இந்த நிகழ்வில் பல நாடுகளிலும் இருந்து வருகை தந்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வந்து கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.