புலம்பெயர் முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தூதரகங்களில் மகஜர் கையளிப்பு-.த.இ.நடுவம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் வன்முறைத் தாக்குதல், மற்றும் கைது நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா, கனடா, நோர்வே, இந்தியா, ஆகிய தூதுவராலய தூதுவர்களிடம் மகஜர் ஒன்றினை பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவம் நேற்றைய தினம் (04-12-2012) செவ்வாய்க் கிழமை, கையளித்துள்ளது.

பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவத்தினரால் நேற்றுகையளிக்கப்பட்ட மகஜரில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டின் அவசியமும், ஸ்ரீலங்கா அரசின் இனவெறி தாக்குதலும், மாணவர்கள் மீதும் தொடரும் கைதுகள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்,தூதுவராலய அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக, பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவத்தினால் விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு ஐக்கிய நாடுகள் சபை இவ் விடயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து பிரசாரத்தையும் நேற்று பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் முதற் கட்டமாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு போரட்டத்தில் கலந்து கொண்ட உறவுகளிடம், அவர்களின் கையெழுதுக்கள் சேகரிக்கப்பட்டன. அது மட்டுமில்லாது அப்பகுதியில் உள்ள வெள்ளை இனத்தவர்களின் கையெழுத்துக்களும் சேகரிக்கப்பட்டன,இங்கு சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

எனவே நீங்கள் அனைவரும் கையொப்பமிட்டு ஐ.நா சபை விரைந்து நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய தமிழ் இளயோர் நடுவம் அன்போடு வேண்டுகோள் விடுக்கின்றது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழ் இளையோர் நடுவம்- பிரித்தானியா