இலங்கை

துரோகிப்பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் பேச்சுக்கு வர மறுக்கிறார்: மஹிந்த தெரிவிப்பு

mahinda-sampanthar1பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரும்புகின்றார். ஆனால் அவரால் பேச்சுக்கு வரமுடியவில்லை. அரசாங்கத்துடன் அவர் ஏதாவது ஒரு வகையில் இணக்கம் கண்டால் அவருக்கு துரோகிப்பட்டம் கட்டிவிடுவார்கள். இதனால் தான் அவர் பேச்சுக்கு வர அஞ்சுகின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

புலம் பெயர்ந்த தமிழர்களுடன் இணைந்து ஈழம் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் நிற்கின்றனர். இவ்வாறான நிலையில் எப்படி கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டை ஒன்றுபடுத்தி ஒற்றுமைப்படுத்தியுள்ளேன். இந்த நிலையில் மீண்டும் பிரிவினைக்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேச்சுக்கு வரமாட்டார்கள். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தீர்வு விடயத்தில் விருப்பம் கொண்டுள்ளார். ஆனால் அவரால் கூட பேச்சுக்கு வரமுடியாத நிலை காணப்படுகின்றது. அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி எத்தகைய இணக்கப்பாட்டிற்கு அவர் வந்தாலும், துரோகிப்பட்டமே அவருக்கு கட்டப்படும் என்ற அச்சத்தினாலேயே அவர் பேச்சுக்கு வருவதை தவிர்த்து வருகின்றார்.

கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் சுமந்திரன் எம்.பி. அடுத்த தலைமையை கைப்பற்றும் நோக்கில் செயற்படுகின்றார். அவருக்கு பல பகுதிகளிலிருந்தும் உதவிகள் கிடைக்கின்றன. கூட்டமைப்பினர் தீர்வினை இந்தியா பெற்றுத்தரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும், உள்ளனர். அது சாத்தியமற்ற விடயமாகும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு கூட்டமைப்பினர் வருவார்களேயானால் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது.

ஆனால் கூட்டமைப்பினர் ஈழம்தான் தமக்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இதற்கு நாம் அனுமதிக்க முடியாது. வடக்குமாகாணசபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளாரை நாம் இன்னும் தெரிவு செய்யவில்லை. இவ்விடயம் தொடர்பில் பலதரப்பட்டவர்களுடனும் பேச்சுக்களை நடத்தி முதலமைச்சர் வேட்பாளர்களையும் ஏனைய வேட்பாளர்களையும் நாம் தெரிவு செய்வோம்.

இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக்கூட்டம் கொழும்பிலேயே நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள், மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்தார்.